ஜெ. பாஸ்கரன்/குடை


மழை தூறிக்கொண்டிருந்தது.
சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தை அதிகரிக்கும் கோடை மழைத் தூறல்!

பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருந்த வனஜாவுக்கு இந்தத் தூறல் இதமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவசரமாக மீதிப் பாத்திரங்களைத் தேய்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் மீது விழும் தூறல் திடீரென்று நின்றது. நிழலாட, பின்னால் திரும்பிப் பார்த்தாள். பிஞ்சுக் கையில் குடையுடன் தாழ்வான ஒரு ஸ்டூலின் மேல் நின்றுகொண்டு, ஐந்து வயது ராஜு அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டிருந்தான்! ஒரு நொடி திகைத்த வனஜாவுக்கு, ராஜுவின் சிரித்த முகம், கோவர்தன மலையைத் தாங்கிப் பிடித்த கிருஷ்ணனாகத் தெரிந்தான்!

‘ வேணாங்கண்ணு, மழைல நனிஞ்சா ஜல்பு புடிச்சிக்கும், நீ உள்ள போ, எனுக்கு வேல முடிஞ்சிருச்சு’ கெஞ்சினாள் வனஜா.

‘பரவால்ல வன்ஜா ஆண்டி, மழையில நனைஞ்சா ஒனக்குந்தான ஜல்பு புடிச்சிக்கும்?’

இதைக் கேட்டபடியே வந்த கற்பகம், தன் பிள்ளை ராஜுவைத் தூக்கி கொண்டு உச்சி முகர்ந்து, மகிழ்ச்சியில் கரைந்தாள்.

‘வனஜா ஆண்டியும் பாவந்தானேம்மா..’

‘ஆமாடா செல்லம். நீ ஒரு நல்ல காரியம் செஞ்ச. இப்படித்தான் சமயத்துல நம்மால முடிஞ்ச உதவிய மதவங்களுக்குச் செய்யணும்’

வேலை முடித்து, வீட்டுக்குக் கிளம்பினாள் வனஜா.

‘ஆண்டி, இந்தக் குடைய எடுத்துட்டுப் போங்க – ஜல்பு புடிச்சா நாளைக்கு மணிக்கு யாரு சாப்பாடு செய்வாங்க? மணி வனஜாவின் மகன், ராஜுவின் கிளாஸ்மேட்.

‘சரிப்பா’ என்றவளிடம், குடையைக் கொடுத்தாள் கற்பகம்.

வனஜாவின் கண்களில் கண்ணீர். கிராமத்துப் பள்ளித் தோழி கற்பகத்திற்குக் குழந்தைப் பேறு கிடையாது என்பதும், ராஜு, மணி இரட்டையில் ஒன்றைக் கற்பகத்துக்குக் கொடுத்துவிட்டு, அவள் வீட்டிலேயே வேலைக்காரியாய் வலம் வரும் வனஜாதான் தன் அம்மா என்பதும் ராஜுவுக்குத் தெரியாத வரை, வானம் தூறிக்கொண்டுதான் இருக்கும்!

One Comment on “ஜெ. பாஸ்கரன்/குடை”

Comments are closed.