ப.மதியழகன்/சியர்ஸ்

எல்லாவற்றையும் துறந்தாயிற்று
காட்சிக்கும் காண்பவனுக்கும்
என்ன சம்பந்தம்
நேற்று வந்தான்
இன்றும் வந்தான்
நாளையும் வருவான்
கிணற்றுத் தவளைக்கு
வேறென்ன தெரியும்
கத்துவதைவிட
மதுக்கோப்பை காலியானது
ஒருதுளி கூட மிச்சமில்லாமல்
எனக்குத் தெரிந்தது
ஒரேயொரு ஏகாம்பரத்தைத் தான்
கலக்கிக் கொண்டே இருந்தால்
எப்படி
இறைந்து கிடந்த மிக்சரை
ஈக்கள் மொய்த்தது
சேது எதிரில்
அலங்கோலமாக விழுந்து
கிடந்தான்
மந்திரத்தால் மாங்காய்
காய்க்க வைக்க முடியுமா
வாழ்க்கையை ஜீரணிக்க
மதுவைத் தவிர வேறு ஏதாவது
நல்ல பானம் உண்டா
புட்டி தொட்ட
ஒவ்வொருவனும்
ஞானச் சித்தன் தான்
ஐஸ் மிதக்கிறது
போதையில்
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்
சியர்ஸ்!