மீனாட்சி சுந்தரமூர்த்தி/மானுடம்

ஒன்று முதல் ஐந்தறிவு
பசித்தால்
புசிக்கும். குகை,பொந்து
தேடி வாழும்.

அடி பட்டால் முடங்கும்,
நோயுற்றால்
மூலிகை தேடி முகரும்,
தின்று தேறும்.

இங்கும்,காதலுண்டு,
போட்டி
உண்டு. உறுமல் உண்டு,
பாய்ந்து சீறிப்
பலப்பரீட்சைப் பார்ப்பதும்
உண்டு.

ஒன்று ஒன்றுக்குப் பகை,
இரையாகச்
சில,வேட்டையாடச் சில,
ஆனாலும்
வாசம் ஒரே கூரையில்.
வரும் கோபம் ,நீர் தெளிக்க
அடங்கும்
பாலெனச் சடுதியில் மாயும்.
வஞ்சம்
கொண்ட நெஞ்சமில்லை.
பழிதீர்க்கும்
பாவமில்லை.

வந்தநாள் தொட்டு
உயர்ந்து
வளம் பெருக்கி வாழும்
மானுடமே !

உயர்ந்தோங்கும் அறிவை
உனக்கு
இறைவன் வைத்த காரணம்
அறிவாயோ?

பரிந்தோம்பிப் பல்லுயிரும்
பாதுகாப்பாய்
என்பதுவே !! தேனுண்டா
குரங்காய்
மனமது மாறலாகுமோ??