புஷ்பாவிஸ்வநாதன்/முற்றுப்புள்ளி

மரணம் என்பது முற்றுப்புள்ளியா
மரித்த பின் நாம் ஆவது என்ன
சாகாவரம் பெற்ற வினாக்கள் இவை
சொல்லவும் கூடுமோ இதற்கு பதில்

மரணம் மட்டுமே அனைவர்க்கும் பொது
சாவைப் பற்றி விசனப்படுவதேன்
வாழும் வரைக்கும் சாவு வராது
செத்த பின் நமக்கு வாழ்வே கிடையாது

சாவு என்பது நினைவுகளின் அழிவு தான்
உயிர் என்பது மூச்சல்ல; ஞாபகம் தான்
யாரும் மரிப்பதில்லை முழுமையாக
வாழ்கிறோம் நாம் செத்த பிறகும்
பெற்ற பிள்ளைகளின் ஞாபகங்களிலும்
அவர்தம் சந்ததியின் மரபணுக்களிலும்

படுத்துக்கொண்டே மரணிப்பது கொடுப்பினை
மரணம் வரைக்கும் படுத்துக்
கொண்டிருப்பது கொடுமை
மரணம் மட்டும் இல்லாது போனால்
வாழ்வின் சுவாரஸ்யம் காணாது போகும்

மரணம் என்பது மறுக்க முடியாதது
அது வரும்போது வரட்டும்;
அதை மறந்திடுவோம்
இருக்கும் நாட்களை அனுபவித்திடுவோம்
இனிதாய் நம் வாழ்வை வாழ்ந்திடுவோம்