பானுமதி ந/பொர்மானக்கும் தமிழ்ப் பெண்டிரும் – தஞ்சாவூர் கவிராயர் கதை

சரளமான நடையில், நகைச்சுவை கலந்து
எழுதப்பட்டுள்ள கதை.
இவர் தஞ்சாவூரின் மராட்டி சந்துகளைப் பற்றி
எழுதியதைப் படிக்கையில் எனக்கு யமுனா, பாபு,
ரங்கண்ணா என்று தி ஜாவின் மோக முள்
பாத்திரங்களை உடனே பார்க்க வேண்டும் என்று
தோன்றிவிட்டது.

மாடுகளும், மனிதர்களும் நிறைந்த சந்துகளில்,
அழகும், அசிங்கமான சாக்கடைகளும், ஒன்றே
போலத் தோற்றம் தரும் பல சந்துகளும். அதில்
பல கலைவாணர்கள், எழுத்தாளர்கள்
வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆசிரியர் சொல்வதை
சற்று விரித்தும் பொருள் கொள்ளலாம். நம்
மனதில் அழகும் இருக்கிறது, துர்வாசனையும்
இருக்கிறது. ஒரு மனைவியை அழகியாகவும், சுய
நலமுள்ளவளாகவும், தன் வீட்டில்
தங்கியிருந்தவனை விரட்டும்
மனமுடையவளாகவும், அவனையே இரண்டு

மாதங்களுக்குப் பின்னர் சந்திக்கையில் கண்ணில்
நீர் திரள தன் வீட்டிற்கு வருமாறு
அழைப்பவளாகவும் அவள் இருக்கிறாள்.

கோபால் என்ற கதை சொல்லி,
பல்கலைக்கழகத்தில் பொறுப்பான பதவி வகிப்பவர்.
25 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை
வெற்றிலை போட்டுக் கொண்டே சொல்கிறார்.

யரசலாவ் பொர்மானெக், செக்ஸ்லோவேகியாவைச்
சேர்ந்த இளைஞன். தமிழ் கற்கவும், இசையைப்
பற்றி அறியவும், ஆர்வமுள்ளவன். துணை வேந்தர்,
(இங்கே வலிக்காமல் அந்த சொல்லைக்
குட்டுகிறார் ஆசிரியர்) பொர்மானெக் விரும்பிய
மாதிரி அவனை ஒரு குடும்பத்துடன் தங்க வைக்க
எண்ணி, கோபாலைக் கேட்க, இவரும்
சம்மதிக்கிறார். ரூ 500 வாடகை, அய்யங்கடைத்
தெருவில் தனி வீடு, திண்ணை, அதை ஒட்டி தனி
அறை, பெரிய கூடம், இரு படுக்கை அறைகள்,
ஸ்டோர் ரூம், சாமியறை, கிணறு என்று
விஸ்தாரமான வீடு. பொர்மானெக் கனிந்த
தக்காளிப் பழம் போல, நம் வெய்யிலில்
கன்றியிருக்கிறான், வாசலை ஒட்டிய தனி அறை

அவனுக்கு. வாசற்புற அறை ஜன்னலை சாத்தியே
வைத்திருக்கிறான். எல்லோரும் எட்டிப்
பார்க்கிறார்கள் என்று சொல்கிறான். பிறர்
அந்தரங்கத்தில் எங்களுக்கு எத்தனை ஆசை என்று
கோபால் நக்கலாக நினைக்கிறார். பொர்மானெக்
வருவது, போவதையெல்லாம் திண்ணையில்
அமர்ந்துள்ள பெண்கள் குறுகுறுவெனப்
பார்க்கிறார்கள். அவன் புன் சிரிப்போடு தலை
நிமிராமல் அவர்களைக் கடந்து விடுகிறான்.
ரூ 500/ வாடகைப் பணத்தில், பொர்மானெக் ரூ 300/
தரவேண்டும். ஆறிய சாதம், மீந்த குழம்பு,
கூட்டுவென கோபாலின் மனைவி அவனுக்குப்
போட்டாலும், அவன் சிரித்துக் கொண்டே, ‘உங்க
வீட்டு தோத்தோ’ நான் என்கிறான்.
‘செல்விருந்தோம்பி, வருவிருந்து பார்த்திருப்பார்
நல் விருந்து வானத்தவர்க்கு’ என்ற குறளை
கோபாலின் மனைவியும் படிக்கவில்லை, இவரும்
சொல்லித்தரவில்லை போலிருக்கிறது.

பொர்மானெக்கின் அறை புத்தகங்களாலும், இசை
ஆல்பங்களாலும், அக, புற நானூற்றுப்
பெண்டிராலும் நிறைந்திருந்தது. காக்கைப்
பாடினியார் ஆணா, பெண்ணா, முறத்தால் புலியை

விரட்டினாளாமே ஒரு பெண், அந்த முறம் எப்படி
இருக்கும், இதெல்லாம் அவன் கேள்விகள். உங்கள்
நாட்டில் தான் படிப்பிற்கும், வேலைக்கும் முடிச்சுப்
போட்டு வைத்திருக்கிறீர்கள், நாங்கள் எங்களுக்குப்
பிடித்ததைப் படிப்போம், கொஞ்சம் பணம்
சேர்ந்தால் பயணம் என்று ஒப்பிட்டுச் சொல்கிறான்.
இங்கு இன்றும் இதுதான் உண்மை.

பொர்மானெக், தன் காதல் ஜோடியுடன் ஒரு நாள்
முத்தமிட்டுக் கொண்டு வர தெருவே வேடிக்கைப்
பார்க்க, தன் மானம் போனதாக கோபாலின்
மனைவி கூப்பாடு போடுகிறாள். பறவைகள்
இதையெல்லாம் செய்யவில்லையா, இயல்பான
ஒரு செயல், இதை பாலியலோடு ஏன்
சம்பந்தப்படுத்த வேண்டும் என்று சொல்லும்
கோபால், எனக்குக்கூட மஞ்சள் காயும் மாலை
வேளையில், நாம் தெருவில் போகையில், உன்னை
முத்தமிட வேண்டும் எனத் தோன்றும் என்று
சொல்கிறான்.

காமசாஸ்திரம் எழுதிய நாட்டில் இந்த நிலை!
தெனாலி படத்தில் கமல் சொல்வார் : ‘ நான்
கல்யாணம் முடிச்சு மனைவியுடன் வெளியில்

போகையில் கிஸ் கொடுப்பேன்’ என்று. ராஜீவ்
காந்தி பிரதமரான பிறகுதான் இந்திய
சினிமாக்களில் முத்தக் காட்சிகளை
அனுமதித்தார்கள்.

பொர்மானெக், இந்த எபிசோடிற்கு அளிக்கும் பதில்
பொருத்தம் “முத்தம் என்பது ஒரு மொழி. அதை
எங்கே பேசினாலென்ன?”

பொர்மானெக்கிற்கு உடுக்கை வேண்டுமாம்.
கோபால் தட்டிக் கழித்தாலும், அவன் ஒரு
வாரத்தில் அதை வாங்கி வந்துவிட்டான்.
கோபாலை சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு
வருமாறும் சொல்கிறான். சாப்பிடும் இடத்திற்கே
வந்த கோபம், பேய் விரட்டும் பூசாரியிடமிருந்து
வாங்கி கூடம் வரைக்கும் எடுத்து வந்துவிட்டானே
என்ற ஆதங்கம்- கோபாலின் மனைவிக்கு
கொஞ்சமும் பிடிக்கவில்லை

அறையில் பார்த்தால், புலித்தோல் போல் வண்ணம்
தீட்டிய துண்டு, காலில் சலங்கை, செக்கச்சிவந்த
மேனி, கையில் உடுக்கை, ரெகார்ட்

ப்ளேயரிலிருந்து பீத்தோவனின் இசை, அதன்
ஸ்தாயி கூடக் கூட இவன் சுழன்றாடுகிறான்,
சிவனின் ஊழித் தாண்டவம்.
‘தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று
கோபால் வணங்குகையில் கதவு இடிபடும் ஓசை.
பத்திரகாளியாய், இவர் மனைவி, அக்கம்
பக்கத்தார்கள், பரிட்சைக்குப் படிக்கும்
குழந்தைகளுக்கு தொந்தரவாக இருக்கிறதாம்.

குடித்து விட்டு மனைவியை அடிப்பதையும், அந்த
ஓலத்தையும் சகித்துக் கொள்ளும் மக்கள், இந்த
இசைக்கு, நடனத்திற்கு, உடுக்கை ஒலிக்கு எதிர்ப்பு
தெரிவிக்கிறார்கள்.

விளைவு, பொர்மானெக் இந்த வீட்டை விட்டு ஒரு
புராதனமான, பராமரிப்பற்ற ஒரு அரண்மனையின்
அறையில் தங்குகிறான். உடைந்த பல்லக்குகள்,
நூலாம்படை தொங்கும் பழங்கால ஓவியங்கள்,
காலம் நின்றுவிட்ட நிலையில் இருட்டு; அவனுக்கு
அது தேவ உலகமாக இருக்கிறது. அங்கே இறந்து
போன மன்னர், ராணி அவர்களின் ஆவி வருகிறது
என காவலாளி சொன்னதால், கோபாலும்

பொர்மானெக்கைப் பார்க்க அங்கே போவதைக்
குறைத்துக் கொள்கிறார்.

கோபாலும் அவர் மனைவியும் ஷாப்பிங்
போய்விட்டு, கீழ ராஜ வீதியில் டாக்டர்
நரேந்திரனின் க்ளினிக்கிற்குப் போகும் வழியில்
ப்ரகாஷ் கடையில் சிரிப்பு, கூத்து. நடு நாயகமாக
பொர்மானெக். இவர்களைப் பார்த்து எழுந்து
வந்தவன், மழலைக் குரலில், கோபாலின்
மனைவியைப் பார்த்து ‘எப்படி இருக்கீங்க?’ எனக்
கேட்கிறான்.
அவனை சிநேகிதத்துடன் பார்த்து சிரித்தவள் “
நீங்க எப்படி இருக்கீங்க? ஒரு நா எங்க வீட்டுகு
வாங்க” என்று கண் கலங்கக் கூப்பிடுகிறாள்.
பொர்மானெக்கின் விழிகள் வியப்பால் விரிந்தன.
கோபாலை நெருங்கி காதருகே கிசுகிசுத்தான்
‘இந்திய மனைவிகள் பற்றிய ஆய்வுக்கு எனக்கு
விஷயம் கிடைத்துவிட்டது.’

தன் நண்பரான தஞ்சை ப்ரகாஷை கதையில்
கொண்டு வந்தது மட்டுமல்ல, அந்த இடம்,

இலக்கியம், இசை, சிரிப்பு என அனைத்திற்கும்
இடமளித்தது என்பது அருமை.

மனைவிகளுக்கு தங்கள் குடும்ப நலன், கௌரவம்,
சமூகத்தில் பிறர் என்ன நினைப்பார்கள்,
என்றெல்லாம்தான் சிந்தனை இருக்கும். அவர்கள்
அப்படித்தானிருக்க வேண்டும் என்று குடும்பமும்,
சமூகமும் சொல்கிறது. கி ராவின் கன்னிமை
சிறுகதை இந்த கோட்பாட்டை சிறப்பாகச்
சொல்லும் ஒன்று.
இரண்டுங்கெட்டானாக இருக்கும் இந்தியக் கணவன்
கோபால். நாமிருவர், அவனோ ஒருவன் ஏன்
அவன் ரூ300/- கொடுக்க வேண்டும் என்றும்
கேட்கவில்லை, அவன் ரூ 150 கொடுத்தால்
போதும் என்றும் சொல்லவில்லை. பேய்களை
நம்பி அவனைப் பார்க்கப் போவதையும் குறைத்துக்
கொள்கிறார். ஆனால், பொது சமூகத்தைக் கிண்டல்
அடிக்கிறார், தானும் அதில் ஒரு அங்கம் என்று
உணராமல்.

நம்மிடையிருக்கும் போலித்தனங்களை ஆசிரியர்
நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்.

கலைடாஸ்கோப் வண்ணங்கள். இவைதான்
வாழ்வின் சுவை போலும்.