“”கைராட்டை கோபம் “/ராஜாமணி

(வணக்கம் 12.4.24 வெள்ளிக்கிழமை அன்று அழகிய சிங்கரின்- விருட்சம் அமைப்பு நடத்தும் 80 ஆவது கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில்)
எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயரின்
என்ற கதையை பற்றிய எனது உரை .
கைராட்டை கோபம்

இந்தக் கதையில் தனது அப்பாவை பற்றி அவரது மகன் சொல்லுவதாக எழுதப்பட்ட கதை .
அப்பா ஒரு காந்தியவாதி .அவர் வீட்டில் ஒரு கைராட்டை வைத்திருக்கிறார். அதில் நூல் நூற்று அதை காதி பவனில் கொடுத்து , மாற்றாக கதர் சட்டைகளை வாங்கி அணிந்து கொள்வார். குறிப்பாக அவருக்கு கோபம் வரும் பொழுதெல்லாம் கைராட்டியை சுற்ற தொடங்கி விடுவார் . பிறகு சாந்தமாகி விடுவார் . அவருடைய மனைவி சின்ன சின்ன விஷயங்களுக்காக இவரை ஆத்திரமூட்டும் சமயங்களில் எல்லாம் இவர் எதிர்வினை எதுவும் ஆற்றாமல் கைராட்டியை சுற்றத் தொடங்கி விடுவார் .தன் குழந்தைகளுக்கும் கைராட்டியைச் சுற்ற கற்றுக் கொடுத்திருக்கிறார். இவனுக்கும் கைராட்டை சுற்றுவது பிடிக்கும் தான் . சைனாக்காரன் இந்தியா மீது படையெடுத்த பொழுது மிகவும் கோபமுற்று கைராட்டியை தொடர்ந்து சாப்பிடாமல் சுற்றிக் கொண்டே இருந்திருக்கிறார் . சைனாக்காரன படையெடுத்தால் இவருக்கென்ன? இவர் ஏன் இப்படி உட்கார்ந்து சோறு தண்ணி இல்லாம கைராட்டையை சுத்துறார் என்று இவர் அம்மா வருத்தப்பட்டதும் உண்டு . காந்தியை சந்தித்ததை பற்றியும் இவர் சொல்லி இருக்கிறார் . இவர் சிவகங்கையில் படித்துக் கொண்டிருந்த பொழுது , காந்தி வந்திரங்கிய புகைவண்டி நிலையத்தில் ஏராளமான கூட்டம். எல்லோரும் கதர் நூல் சிட்டுகளை காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் . இவரும் கொடுத்திருக்கிறார். காந்தியின்புன்னகை ஒன்றே போதுமே !, என்ன ஒரு சாந்தம் ! என்று சொல்லிக் கொண்டே வரும் பொழுது ,அந்த புன்னகை உள்ள முகத்தை எப்படி கோட்ஷேயால் கொலை செய்ய முடிந்தது என்று சொல்லி, பிறகு வேகவேகமாக கைராட்டியைச் சுற்றத் தொடங்கி விடுவார். அப்போதெல்லாம் கைராட்டையில் இருந்து எழும் சத்தம் துன்பமான ஒரு அழுகையாக இருக்கும் .
ஏன் கோபம் வந்தா நூல்நூற்க உட்கார்ந்து விடுறீங்க என்று கேட்ட போது , ராட்டையில் நூல் நூற்றால் கோபம் போகும் . மனசு ஒருமைப்படும் . இதுதான் காந்தி சொன்ன கைராட்டை தத்துவம் என்பார் . உடனே காந்தியை பற்றி கதை சொல்லுவார் .காந்தியைப் பற்றி அவர் சொன்ன அன்று இரவு இவனுக்கு கனவில் காந்தி வந்தார் . அவன் வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களுக்கும் லட்டு கொடுத்தார் . இதை அவன பள்ளி நண்பர்களிடம் சொன்ன பொழுது , நாங்கள் லட்டு சாப்பிடவில்லையே ! என்றார்கள் . சின்ன வயது ஏழ்மைக் கதையையும் சொல்லுவார் . அவர் அம்மா ஒரு வெண்கலத் தட்டில் சோற்றை உருண்டைகளாக உருட்டி வைத்து விடுவாள் . எல்லோரும் அதில் இருந்து எடுத்துச் சாப்பிடுவார்கள் .அப்பளம் விற்று குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார் .

இவரு செய்த கூத்தெல்லாம் கேளுங்க என்று சொல்லி ,
” விநாயக சதுர்த்தி அன்று ஒரு பாத்திரத்தில் தூக்கு பாத்திரத்தில் கொழுக்கட்டை வைத்து கோவிலில் நெய்வேத்தியம் பண்ணி எடுத்து வரச் சொன்னால், இவர் கோவிலில் இருந்து வெளியே வந்து ஒரு குழந்தை கேட்டது என்று கொழுக்கட்டை கொடுத்துவிட்டு அதை பார்த்து மற்ற மற்ற குழந்தைகளும் கேட்க, எல்லா கொழுக்கட்டைகளையும் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார் ” பாட்டி சொல்லி இருக்கிறார். ஒரு நாள் அப்பாவின் அண்ணாவும் மன்னியும் வீட்டிற்கு வந்து, எல்லா வெங்கல பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு போகும் பொழுது அந்த வெண்கல தட்டையும் எடுத்துச் சென்று விட்டார்கள் . அம்மா அதைப் பற்றி பேசும் போதெல்லாம், “இதை விடவே மாட்டியா? “என் று கோபத்துடன் சொல்வார் . அப்பா. உடனே கைராட்டயைக் கொண்டு வந்து கொடுத்து கொடுத்து விடுவான். அப்பா சிரித்து விடுவார்.
கடைசி வரை அப்படியே தான் இருந்தார் .பிழைக்கத் தெரியாதவராக ,காசு பண்ணத் தெரியாதவராக கபடம் இல்லாதவராக……

“அப்பா மாதிரி இருக்காதீங்க. சமத்தா இருங்க” என்பாள் அம்மா .

” குழந்தைகளுக்கு நல்லதைச் சொல்லிக் கொடு ” என்று சொல்லிவிட்டு அப்பா கோபத்துடன் எழுவார் கைராட்டை சுழல ஆரம்பிக்கும்

இது ஒரு குறியீட்டு கதையாகவே நான் பார்க்கிறேன் .
எல்லா விடுதலை இயக்கமும் அதிகாரத்தில் இருப்பவர்களை அன்னியர்களோ, அல்லது அரசர்களோ அவர்களை நீக்கிவிட்டு மற்றவர்கள் அதிகாரத்தை பெறுவதற்கான இயக்கங்களாகவே இருக்கும் . ஆனால் இந்திய விடுதலை இயக்கத்தில் காந்தி ஒருவர் தான் விடுதலை என்பது வெறும் அதிகாரம் சார்ந்தது மட்டுமல்ல , தீய எண்ணங்கள் இல்லாமை , சுயநல மறுப்பு அறம் சார்ந்த வாழ்க்கை …… முக்கியம என்றார்.
அறம் சார்ந்த ஒரு சமூகம் தான் சுதந்திரமான அல்லது சுதந்திரத்தை கையாளக்கூடிய ஒரு சமூகமாக இருக்கும் என்பதுதான் காந்தியின் கருத்து .காந்தியிடம் எல்லோரையும் ஈர்த்தது எது? அவரோட முரண்படுவதற்கு எல்லோருக்கும் ஆன உரிமையை அவரே கொடுக்கிறார் . அதை அவர் விரும்பியும் இருக்கிறார் . ஆனாலும் அவர் மீதான ஈர்ப்புக்கு பிரதான காரணம் வெளிப்படைத் தன்மை, நேர்மை ,எளிமை , சத்தியம் . வெளிப்படை தன்மை என்பது சிந்தனை , சொல் , சொல்லின் வெளிப்பாடான செயல் .. இந்த மூன்றுக்கும் எந்த முரண்பாடும் இல்லாமல் இருந்தால் அது தான் வெளிப்படைத்தன்மையான வாழ்க்கை .இன்று எத்தனை பேரால் இப்படி இருக்க முடியும்? அல்லது .இருக்கின்றார்கள் . அறச்சிற்றம் வந்தாலும் (கோபம்) காந்தியவாதிகள் அந்தக் கோபத்திற்கான தண்டனையை அல்லது அதை வெற்றி கொள்ளும் முறையை நேர்மையான செயல்பாடுகள் மூலமாகவே செய்திருக்கிறார்கள் . கோபத்தை வெளிப்படுத்துவதற்காக கைராசியை சுற்றுவது , கோபத்தைக் கூட ( ப்ரோடக்டிவ்) பயனுள்ளதாக தன் கோபத்தை எப்படி மாற்றிக் கொள்கிறார் . கடைசியில் இரண்டு விஷயங்கள் தான் கைராட்டையும் வெண்கல தட்டும் எதை குறிக்கிறது வறுமை என்பது வெறும் சோற்றுக்கான வருமையா ? அறம் பிறந்த மதிப்பீடுகளின் வறுமை . வெண்கல தட்டில் வறுமையும் பங்கிடப்பட்டது . செல்வங்கள் பங்கிடப்படுவது வேறு விஷயம் . வறுமை தான் பங்கிடப்பட்டுள்ளது . ஒரு குடும்பத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட வறுமை அந்த குடும்பமே ஒரு சமூகமாக சமூகத்தையே குடும்பமாக ஒரு நாட்டையே குடும்பமாக பார்த்தால் எவ்வளவு எளிமை . எவ்வளவு பிரச்சனைகள் தீர்ந்துவிடும் .

எல்லா மனிதர்களுமே அடிப்படையில் நல்ல மனிதர்கள் தான் . யாரும் தன்னை கெட்டவன் என்
று இந்த உலகம் சொல்ல வேண்டும் என்று விரும்புவதில்லை . ஆனால் மனிதனின் பேராசையும் பொருளாசையும் மனித மாண்புகளை பின்னுக்கு தள்ளி விடுகிறது .இந்த கதையில் கூட முடியும் பொழுது அவர் அம்மா சொல்வதாக முடிப்பார் மகனைப் பார்த்து ” அப்பாவை போல இருக்காதே . அவர் கபடம் இல்லாதவர் .பிழைக்கத் தெரியாது .காசு பண்ண தெரியாதவர் . நீங்களாவது சமர்த்தா இருங்க! என்பாள். அதற்கு அவர் ” குழந்தைக்கு நல்லதை சொல்லிக் கொடு ” என்று ராட்டையை சுற்ற ஆரம்பிப்பார் . சமர்த்து என்பதற்கு இந்த சமூகத்தில் இப்பொழுது என்ன அர்த்தம் ? எந்த மாதிரியான மாண்புகளும் , மதிப்பீடுகளும்(values) நமக்கு தேவை ?
வெண்கல தட்டுக்கு போனதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. தட்டு போனால் என்ன ? அந்த தட்டு கொடுத்த உணவை அது கொடுத்த உறுதியை அதைப் பற்றிய நினைவுகளை அழித்து விட முடியுமா ?
நினைவில் இருக்கிறது . செயலில் இருக்கிறது .

உயர்ந்த மதிப்பீடுகளும் , லட்சியம் மாண்புகளும் , எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது . நிச்சயம் அறம் சார்ந்த ஒரு சமூகம் மலர சிந்திக்க வைத்த மிகச் சிறந்த கதை .வாய்ப்புக்கு நன்றி . எழுத்தாளருக்கு எனது பாராட்டுகள் .