ப. .மதியழகன்/கோசம்

ஆலயம் சடங்குகளாலும்
பிரார்த்தனைகளாலும் நிரம்பி இருக்கின்றது
மணி ஒலித்ததும்
கோவில் புறாக்கள்
சிறகடித்துப் பறக்கின்றன
பக்தர்களின் வேண்டுதல்களை
கோவில் மாடத்திலுள்ள
சிவப்பு மூக்கு கிளி
அனுதினமும் கேட்கின்றது
உச்சிவெயிலில்
கோபுர நிழலில் இளைப்பாறுகிறது
பிரசவித்த நாயும்
அதன் குட்டிகளும்
ஈக்களுக்குத் தெரியாது
நைவேத்யம் எச்சில்படாமல்
இருக்க வேண்டுமென்பது
துளசி பட்டவுடன்
தண்ணீர் தீர்த்தமாவது
விந்தை தான்
விபூதி பிரசாதம் உணர்த்துகிறது
யாவரும் எதிர்காலப் பிணங்களே
என்று
கோவில் சுற்றுச்சுவரெங்கும்
உபயதாரர் பெயர்
எழுதப்பட்டுள்ளது
காலம் முடிந்து
குருக்கள் போய்விட்டாலும்
தெய்வம் நடமாடுகிறதா என
மதிலுக்கு வெளியிலிருந்து
பிரகாரத்தை எட்டிப் பார்க்கின்றன
மரங்கள்
பிச்சைக்காரன் திருவோட்டில்
சில்லறை விழும்போதுதான்
உண்மையிலேயே ஆலயம்
புண்ணியத்தலமாக மாறுகின்றது!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன