எம்.டி.முத்துக்குமாரசாமி/அவன் இன்னும் எத்தனை மூக்குகளைத் தும்மச் செய்வான்?

உலக புத்தக தினத்தைக் கொண்டாடாமல் முல்லா நஸ்ருதீன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, கால்களை ஆட்டிக்கொண்டு, மோட்டுவளையை வெறித்துக்கொண்டிருந்தார். அவருடைய கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், பர்ஸ் எல்லாவற்றையும் அவர் மனைவி பிடுங்கி வைத்துவிட்டார். அவரும்தான் என்ன செய்வார் பாவம் முல்லா ஒவ்வொரு தடவை புத்தகக்கடைக்கு போய் வீடு திரும்புகையிலும் ஒரு டெம்போ அமர்த்திதான் வீடு திரும்புவார்; வீடு முழுக்க இப்படி அவர் வாங்கிக் குவித்த புத்தகங்கள் இறைந்து கிடந்தன. புத்தக தினத்தை இவர் கொண்டாடினால் இன்னும் எத்தனை டெம்போக்கள் வீட்டுக்கு வருமோ என்று அவர் மனைவி அவரை அடைத்து வைத்திருந்தார்.
இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கத்தி வாசிப்பதெற்கென்றே முல்லா நீட்ஷேயின் ‘ஜரதுஷ்டிரா இவ்வாறு கூறினான்’ நூலை வைத்திருந்தார். நீட்ஷேயின் நூல் நினைவுக்கு வந்தவுடன் அவர் துள்ளிச் சென்று அதிலிருந்து கத்தி வாசிக்கலானார்:
“ஓ எனது சகோதரர்களே, சகோதரிகளே, வழியில் சலிப்புற்றவர்களே, அனைவருக்கும் ஒரு புத்தம் புதிய வீசியடிக்கும் காற்று போல வருகிறான் ஜரதுஷ்டிரன்! அவன் இன்னும் நிறைய மூக்குகளைத் தும்மச் செய்வான்!
எனது சுதந்திர சுவாசம் சுவரின் ஊடாக சிறைகளுக்குள் சிறையிடப்பட்ட உள்ளுயிர்களிடம் வீசுகிறது.
விருப்பப்படுதல் விடுதலை அளிக்கிறது; ஏனெனில் விருப்பப்படுதலே படைத்தல். இவ்வாறு நான் கற்பிக்கிறேன். படைப்பதற்காக மட்டுமே நீ கற்க வேண்டும்!
முதலில் நீ எப்படிக் கற்றுக்கொள்வது, எப்படி நன்றாகக் கற்பது என்பதைக்கூட என்னிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
கேட்பதற்குக் காதுகள் உள்ளவன் கேட்கட்டும்
கேட்பதற்குக் காதுகள் உள்ளவள் கேட்கட்டும்
காதுகள் உள்ளவள்
காதுகள் உள்ளவள்
காதுகள் உள்ளவள் கேட்கட்டும்!”
முல்லா ஆவேசமாகக் கத்திக்கொண்டிருக்கும்போது அவர் பையன் வந்து அவர் தோளைத் தொட்டான்.
“அம்மா இதை உன்கிட்ட தரச் சொன்னா”
முல்லா தன் பர்ஸ் திரும்பக் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியாகக் கவரைப் பிரித்தார்.
உள்ளே ஒரு விக்ஸ் டப்பா இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன