அழகியசிங்கர்/எதிர்பார்த்தபடியே இறந்து விட்டார்..

அசோகமித்திரன் அவர் எதிர்பார்த்தபடியே இறந்து விட்டார்.  அவர் மரணத்திற்காக கவலைப்படவில்லை.  எல்லாக் கூட்டங்களிலும் அவர் சாதாரணமாக உதிர்க்கிற ஒரு வார்த்தை உண்மையாகிவிட்டது.  அவர் கடைசியாக பேசிய இலக்கியக் கூட்டம் விருட்சம் 100வது இதழ் கூட்டம்தான்.  தமிழவனைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது,  பேச்சில் நடுவில், üநான் இன்னும் எத்தனை நாட்கள் இருப்பேன் என்று தெரியாது,ý என்று குறிப்பிட்டார்.  உண்மையில் அதைக் கேட்கும்போது எனக்குத் திகைப்பாக இருந்தது. 
ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்றபோது, ü என் உடல் எடை 42 கிலோதான்,ý என்றார்.  எனக்கு அதைக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.  ஆனால் அவர் மரணத்தைப் பற்றி கவலைப்பட வில்லை.  அதை சிரித்தபடியே கூறினார்.  சமீபத்தில் அவர் கலந்துகொண்ட கூட்டங்களில் அவர் தன் மரணத்தைப் பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் அவருக்கு கவிஞர் ஞானக்கூத்தன் மனைவி இறந்துவிட்ட செய்தியை அறிவித்திருந்தேன்.  உடனே எனக்கு ஒரு இ மெயில் அனுப்பி இருந்தார்.  üஅடுத்தது என் முறை.  நான் இறந்தபிறகு,  ஐஸ் பெட்டியில் என் உடலை வைக்க வேண்டாம்.  உடனே எடுத்து எரித்து விடுவது, நல்லது.ý என்று எழுதியிருந்தார்.  எனக்கு அந்த இ மெயிலைப் பார்க்கும்போது சற்று வருத்தமாக இருந்தது.  ஆனால் அசோகமித்திரன் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு எழுதி உள்ளார். 
23ஆம்தேதி மாலை சாதாரணமாக மாலை 7 மணிக்கு சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்.  ஸ்பூனில் உணவை எடுத்து விழுங்கும் தறுவாயில் ஸ்பூன் தவறி விழுந்துவிட்டது.  அசோகமித்திரன் இறந்து விட்டார்.  அவர் குடும்பத்திற்கே சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது. இவ்வளவு சுலபமாக மரணத்தை அணைத்துக்கொண்டவர் அசோகமித்திரனாகத்தான் இருக்க வேண்டும். 
அவருடைய மூன்றாவது பையன் வீட்டில் இருக்கும்போது எப்போதும்போல் உடம்பு முடியவில்லை என்றால் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம்.  இந்த முறை மருத்துவமனைக்குச் செல்லும்போது,
üடாக்டர் பூட்ட கேஸ்,ýஎன்று சொல்லப் போகிறார்,ý என்று ஜோக் அடித்தபடியே சொல்லி சென்றிருக்கிறார். 
அவர் குடும்பத்தில் அவர்தான் அதிக ஆண்டுகள் வாழ்ந்தவர்.  என்ன ஆச்சரியம் என்றால் கடைசி வரை எழுதிக்கொண்டிருந்தார்.  üஅசோகமித்திரன் கதைகள்,ý என்ற தலைப்பில் காலச்சுவடு என்ற பதிப்பகம் 1956ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை அவருடைய கதைகளைக் கொண்டு வந்திருக்கின்றன.  இது ஒரு மகத்தான சாதனை.   274 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது.  அவரைப் பார்க்கப்போனபோது, அந்தப் புத்தகத்தை எனக்கு கையெழுந்துப் போட்டுக்கொடுத்தார்.  கொடுக்கும்போது ஒன்று சொன்னார் : üஇன்னும் சில கதைகள் இதில் விடுபட்டிருக்கின்றன,ý என்று.  எனக்கு ஆச்சரியம். 85 வயதுள்ள அசோகமித்திரன் தெளிவாக சித்திக்கிறார்.  கதைகள் எழுதுகிறார்.  கட்டுரைகள் எழுதுகிறார்.  நவீன விருட்சம் இதழுக்கு ஒரு நாடகம் எழுதி கொடுத்திருக்கிறார்.  எப்படி இதெல்லாம் நடக்கிறது?  ஒரு பக்கம் மரணத்தைப் பற்றி பயமில்ûலாமல் பேசிக்கொண்டே இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்றால் நம்பவா முடிகிறது.  
ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்க நான் போய்க்கொண்டிருப்பேன்.  அவர் என்னை வரச்சொல்லி கூப்பிடுவார்.  அவருடைய புத்தகம் எதையாவது ஒன்றை கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார்.  அவர் இருக்கும் அறையில் ஒரு மூலையில் உள்ள நாற்காலியில் என்னை உட்காரச் சொல்வார்.  üஃபேன் போடட்டுமா?ý என்று கேட்பார்.  நான்தான் அவரை, üநீங்கள் அப்படி உட்காருங்கள்.  நான் போய் போடுகிறேன்,ý என்று எழுந்து போய் ஃபேன் போட்டுக்கொண்டு உட்காருவேன்.
பல எழுத்தாளர்களைப் பற்றி, புத்தகங்களைப் பற்றி அவர் கருத்துக்களைத் தெரிவிப்பார்.  காலச்சுவடு வெளியிட்ட அவர் கதைத் தொகுப்பில் உள்ள முதல் கதையின் பெயர். நாடகத்தின் முடிவு என்ற கதை.  இக் கதை 1956ஆம் ஆண்டில்தான் வெளிவந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும்.  ஆனால் அசோகமித்திரன் அக் கதையை 1953லேயே எழுதி விட்டார்.  அக் கதை 1956ல்தான் பிரசுரமானதாகக் குறிப்பிட்டுள்ளார்.  முதலில் ஒரு பத்திரிகைக்கு அக் கதையை அனுப்பினாராம்.  அக் கதை அப்பத்திரிகையில் பிரசுரமாகவில்லையாம். அதனால் அக் கதையை திரும்பவும் கலைமகளுக்கு அனுப்பி உள்ளார்.  கலைமகளில் அக் கதை 3 மாதம் கழித்து பிரசுரம் செய்திருக்கிறது.  அசோகமித்திரனின் திறமையை அறியாமலயே அக் கதை பிரசுரமாகி உள்ளது.  
அசோகமித்திரன் கதைகளை வாசிப்பவர்கள் அவர் எழுதிய முதல் கதையிலிருந்து இப்போது வரை உள்ள கதைவரை ஒரு திறமையான எழுத்தாளரின் கதையை வாசித்ததாக உணர்வார்கள்.  கதைகளில் அவர் கையாளும் முறை புதுமையானது.  பகட்டு இல்லாத எளிமையான எழுத்து அவருடையது.  உண்மையில் 1950களில் எழுதியவர்களின் பல கதைகளை நம்மால் இப்போது படிக்க முடியாது.  ஆனால் அசோகமித்திரன் கதைகளை எப்போதும் படிக்கலாம். இதுதான் முக்கியமானது.  எப்போதும் படிக்க படிக்க படிப்பவருக்கு உற்சாகத்தை அளிக்கும் எழுத்து அவருடையது.  ஒரு திறமையான எழுத்தாளரை நாம் மதிக்க கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்.
இயந்திரமயமான சூழ்நிலையில் அவர் உணர்ச்சித் ததும்ப கதைகள் எழுதிக்கொண்டிருந்தார் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். காலம் காலமாக அவர் கதைகளை எல்லோரும் பேசிக்கொண்டிருப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை.  
(சன்னல் என்ற பத்திரிகையில் எழுதியது)

One Comment on “அழகியசிங்கர்/எதிர்பார்த்தபடியே இறந்து விட்டார்..”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன