வண்ணதாசன் பதிவு முகநூலில்

அவர் நேற்று வந்திருந்தார். கையில் ஒரு துணிப் பை இருந்தது. நான் இதுவரை எழுதிய பதிநெட்டு அல்லது பத்தொன்பது கவிதைத் தொகுப்புகள் அவற்றில் புடைத்துக்கொண்டு இருந்தன.

‘புலரி’ முதல் ‘மேலும் கீழும் பறந்தபடி’ தொகுப்பு வரை ஒரே மூச்சில் வாசித்து ஒரு 242 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒளி நகல் செய்து வைத்திருந்தார். அதை அவர் அனுப்பப் போகும் யாரோ ஒருவர், அவற்றில் இருந்து 100 கவிதைகளைப் பொறுக்கி மலையாளத்தில் ஆக்க இருக்கிறாராம்.

என் கதை கவிதைகள் ஒன்றிரண்டே பிற மொழிகளுக்குச் சென்றிருக்கின்றன. 2022 ஆம் ஆண்டு பட்டாம்பியில் பி.ராமன் மொழிபெயர்த்து வெளியிட்ட தொகுப்பில் என்னுடைய பத்துக்கு மேற்பட்ட கவிதைகள் உண்டு. வழக்கமாக சாகித்ய அகாதமி வழங்கப் படும் நூல்கள் பிற இந்திய மொழிகள் சிலவற்றில் ஆக்கப் படும் . ஏழு வருடங்கள் ஆயிற்று. ஒரு சிறு இசை தொகுப்பு தமிழை இன்னும் தாண்டவில்லை.

ஆனால் யாரோ ஒருவர் என் இதுவரையிலான மொத்தக் கவிதைகளை வாசித்துவிட்டு என்னுடன் என் அருகில் எங்கள் வீட்டு முன்னறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

நான் வெயிலைப் பற்றி , தோளில் அமரும் பறவைகள் பற்றி, பூனைகள் பற்றி நிறைய எழுதியிருப்பதைக் குறிப்பிட்டார். நான் ஒரு போதும் பூனை வளர்த்ததில்லை என்று சொன்னது அவருக்கு வியப்பளித்தது.

நான் கடந்த மூன்றரை வருடங்களாக, முன் போல நடை செல்வதில்லை என்றும், நடைவழியில் எதிர்ப்பட்டவர்கள், எதிர்ப்பட்டவையே என்னை எழுதவைத்தன, இப்போது யாரும் எதுவும் எதிர்ப்படுவதில்லை என்று சொல்லும் போது நானும் என் குரலும் உடைந்து
போனது என்பது ஒரு தூய தருணம்.

உரையாடலுக்குத் தொடர்பே இன்றி, நான் காடம்பாறையில் பார்த்த உன்னிப் பூக்களைப் பற்றியும் ஒரு சிறு சரிவில் கண்டடைந்த சர்ச் பற்றியும், அடைத்துக் கிடந்த அதன் முன் தாழ்வாரத்தில் முழந்தாளிட்டு நான் பரமண்டல ஜெபம் சொன்னது பற்றியும் ,1962க்கு முன் பள்ளிக்கூட ‘ ப்ரேயர்’ நேரப் பதிவு ஒரு சொல் விலகாமல் அப்படியே நினைவுக்கு வந்ததையும் சொன்னேன். கன்னங் கருத்த, திரட்சியான உன்னிப் பழங்கள் என் உள்ளங்கையில் இருப்பது போல அவரிடம் நீட்டிக் காட்டினேன்.

அவர் விடை பெறும் போது, அவர் முன் கையைப் பற்றிக்கொண்டுதான் எழுந்தேன். நான் அவரிடம் நீட்டிய உன்னிப்பழங்கள் அவரின் பொத்திய உள்ளங்கையில் இருப்பதாக நினைத்துக் கொண்டேன்.

என்னிடம் வந்து சேரும் சிறிய திரட்சிகளின் கனிவை, நான் இன்னொரு உள்ளங் கைக்கு மாற்றிவிடுவதெல்லாம் இப்படித்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன