ப.மதியழகன்/கைதி

விருட்சம் நடத்தும் 44வது இணையகால கவியரங்கம்
நாள்: 23.4.24 தேதி: செவ்வாய்

இவனுக்குத் தெரிந்ததெல்லாம்
புத்தகமும், பேனாவும்
அவளுக்குத் தெரிந்ததெல்லாம்
சமையலறையும், பத்துப்பாத்திரமும்
சொல்லிப் பார்த்தாள்
சீறிப் பார்த்தாள்
செவிடன் காதில்
ஊதிய சங்குதான்
புதுமைப்பெண்ணல்லவா
புரட்சியும் செய்து பார்த்தாள்
இவனுக்கு அடிமை உத்தியோகம்
ஆகாது
குடும்பத்தேரை யார் இழுப்பது
தாலிகட்டிய பாவத்துக்காக
எல்லாவற்றையும் கேட்டுத்
தொலைக்க வேண்டும்
போங்கடா என்று
உதறிவிட்டுப் போய்விட முடிகிறதா
யாரை குற்றம் சொல்வது
அவரவர் தலையெழுத்து
நாட்டை கட்டி ஆண்டுவிடலாம்
வீட்டை
பத்தோடு பதினொன்றாக
இருப்பது கூட
சந்தோஷம் தான்
புதையலை எத்தனை காலம்
பூதம் காவல் காக்கும்
ஒப்பாரியை ஆலாபனை
என்பவர்கள் தானே நீங்கள்
நானொரு பைத்தியக்காரன்
பேசவேண்டிய இடத்தில்
ஊமையாய் இருந்துவிடுவேன்
உலகில் என்னைத் தவிர
எல்லோரையும் உத்தமன்
என்று ஒத்துக் கொள்ளும் உலகம்
கைதிகளின் கூடாரத்திலிருந்து
குற்றம் செய்யாத
ஒரேயொருவரையாவது
கொண்டு வந்து நிறுத்தட்டும்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன