ப.மதியழகன் கவிதைகள்

நாள்: 25.4.24

மழையை பின்தொடராதீர்கள்

மனிதர்களைப் பார்த்து
உடைந்து அழும் மேகங்கள்
தாமரை இலைகளில்
பட்டுத் தெறிப்பது
போல் வானம்
வறண்ட நிலத்தில்
பெய்த துளிகளெல்லாம்
ஆவியாகிவிடினும்
எப்போதோ குளமாயிருந்தோம்
என்ற நினைப்பு
நிலத்தை விட்டு
நீங்க மறுக்கிறது
மலை உச்சியில்
விழுந்த துளிகள் ஒன்றிணைந்து
அடிவாரத்திற்கு ஓடி வருகின்றன
கல் உளிபட
காத்திருப்பது போல
வெள்ளித் தூறல்களை
அகன்ற கைகளில்
வாங்கிக் கொள்வதற்காகவே
வானுயர்ந்து நிற்கிறது மலை
தாய் தன் குழந்தையை
அள்ளிக் கொள்வதைப் போல
காடுகளில் பெய்கிறது மழை
சங்குப் பாலை
வனம் முழுவதும்
அள்ளித் தெளிக்கிறது வானம்
நன்றியுணர்வுடன்
அண்ணாந்து பார்க்கும் காடு
கடல் நடுங்கும் உதடுகளால்
மழையை அழைக்கிறது
ஆகாசம் மழையாக
இறங்கி வருகிறது
கடலில் கால் நனைக்க
சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து
எட்டிப் பார்க்கிறது
நீலப்பனிமலை
யாருமில்லாத கோவிலில்
கோபுரம் தாங்கி சிலைகளில்
மழைத்துளிகள்
பட்டுத்தெறிக்கும் போது
சிலை உளிபட்ட ஞாபகத்தில்
சிவனே என்கிறது
நதி மீது பெய்யும் மழை
அதற்கு கடலைத்தான்
ஞாபகப்படுத்தும்
கடலின் பனிக்குடத்தில் இருந்து
தானே பிறக்கிறது நதி!

நாள்: 26.4.24 தேதி: வெள்ளி

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

வாழ்ந்து முடித்தவர்கள்கூட
வாழ்ந்தது போதாது
என்றுதான் சொல்கிறார்கள்
உயிர்மரம் கிளைபரப்பி
விழுதுகள் தாங்க ஆரம்பித்துவிட்டால்
வேர்களுக்கு என்ன இங்கு வேலை
ஆரம்பித்த பயணம்
எங்கு போய் முடியுமோ
கரையில் கண்மணி
என்று எழுதி வைத்து
காத்திருந்தேன் அலை வந்து
அடித்துச் சென்றது
புள்ளிகள் நிறைந்த வானத்தில்
வெளிச்சத்தை சுமந்து
செல்கிறது மின்மினி
என்னால் பார்க்க முடிவது
பிரபஞ்சத்தின் ஒரு பகுதியைத்தான்
கோவில் வாசலில் க்யூ வரிசை
உள்ளே கடவுள்
மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார்
கோரிக்கை நிறைவேறுகிறதோ
இல்லையோ
இப்போதெல்லாம் கடவுளர்கள்
மனிதர்களைப் பற்றி
நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்
அதுவே போதும்
முன்பு அவளுக்காக சிரித்தேன்
இப்போது எனக்காக அழுகிறேன்
முன்பெல்லாம் அவளின்
நினைவுகளே இதயத்தை
ஆக்ரமித்துக் கொண்டிருந்தன
இப்போது பசியும், வறுமையுமே
கண்முன் நிழலாடுகின்றன
வாலிபம் கடந்துபோனது
நரைகூடிவிட்டது
பசியும், தாகமும், மூப்பும்
என் சிந்தனை நெருப்பினை
அணைத்துவிட முடியாது
நடுநிசியில் எழுந்து
அகல்விளக்கின் வெளிச்சத்தில்
வாழ்க்கைப் புத்தகத்தை
வாசிக்கத் தொடங்கினேன்
வாழ்க்கைக்கும் எனக்கும்
இடையே தீர்த்துவைக்கப்படாத
வழக்கொன்று இருக்கிறது!

One Comment on “ப.மதியழகன் கவிதைகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன