அழகியசிங்கர் கவிதைகள்

யாரைப் பார்த்து வளர்ந்து கொண்டிருக்கிறேன்

எல்லோரும்
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்!

எல்லோரும் கவிதையை
வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்
நானும் வாசித்துக்
கொண்டிருக்கிறேன்!

எல்லோரும் கவிதை எழுதி
புகழ்ப் பெற நினைக்கிறார்கள்
நானும் புகழ்ப் பெற நினைக்கிறேன்!

எல்லோரும் கவிதைப்
புத்தகம் அச்சடிக்கிறார்கள்
நானும் அச்சடிக்கிறேன்!

எல்லோரும் கவிதைப் புத்தகங்கள்
விற்பதில்லை என்று புலம்புகிறார்கள்
இதோ நானும் புலம்புகிறேன்!

இப்போது எல்லோரும் கவிதைப்
பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள்
நானும் பிடிக்கவில்லை என்று கூறுகிறேன்

இப்போதோ அவர்கள் தங்களைக்
கவிஞர்களென்று
சொல்லிக் கொள்வதில்லை
நானும்தான்!

அவர்களைப் பார்த்துப்
பார்த்து நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன்!

ஆனால்
அவர்கள் என்னைப் பார்த்துப் பார்த்து
வளர்ந்து கொண்டிருப்பதாகக்
கூறுகிறார்கள்!


பைத்தியக்காரன் பட்டம்

இப்போதெல்லாம்
எதாவது எழுதி
பைத்தியக்காரப்
பட்டம் வாங்க விரும்பவில்லை!

ஆனால்
கவிதை மட்டும் எழுதுகிறேன்

ஆனால்
கவிதை யாருக்கும்
புரியாது என்பதால்
படிக்காமல் போய்
விடுவார்கள்

எந்த யோசனையும்
இல்லாமல் வெறுமனே
உட்கார்ந்திருந்தால்
‘என்ன கவிஞரே
என்ன யோஜனை’ என்பார்கள் தவிரப்
பைத்தியக்காரப் பட்டத்தை வழங்க மாட்டார்கள்

அதனால் கவிதை
எழுதி
திருப்தி அடைந்து விடுகிறேன்

கவிதை எழுதுவதற்கு
லேபர் குறைச்சல்
வாட்ஸப்பிலேயே
எதாவது
கிறுக்கி விடலாம்

ஆனால் பைத்தியக்காரப் பட்டம்
நிச்சயமாய் கிடைக்காது!

பாவம்
கவிதை மட்டும்
எழுதிக்கொண்டு
திரிந்து கொண்டிருக்கிறாரென்று
சொல்லி விட்டு விடுவார்கள்
எளிதில்!

One Comment on “அழகியசிங்கர் கவிதைகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன