ஆர் வத்ஸலா/சுதந்திரம்

25/4/2024 அன்று நிகழ்ந்த 46 ஆவது இணைய கால கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை:


தீர்மானிக்கபட்டன

எனது உடையின் வகைமை
அதன் கழுத்தின்
கையின்
அளவுகள்
எனது சொற்கள்
எனது மௌனம்
எனது உணவு
எனது தூக்கம்
எனது நடை
எனது தோழமைகள்
எனது உலகெல்லைகள்

முதலில்
பெற்றோரால்
பின்
அவனால்
அவனம்மாவால்

முறிவுக்குப் பின்
பெற்றோரால்
அண்ணன் அண்ணிமாரால்
சகப் பணியாளர்களால்
உற்றார் சுற்றாரால்
கண்ணுக்குத் தெரியாதவர்களால்

வலியுறுத்தப்பட்டன
முறிவுக்குப் பின்

பூச்சூடலின் ஆபத்து

அர்த்தமற்றுப் போனாலும்
நேர்மை தொலைத்த குற்ற உணர்வு
கம்பளி பூச்சியாய் அரித்தாலும்
இரும்பாய் கனக்கும்
தங்கத் தாம்புக் கயிற்றை
மார்பின் மத்தியில்
அழுத்தமாக ‘பின்’ குத்திய புடவைக்கு மேல்
தொங்கவிடுவதற்கான அத்தியாவசியம்

இன்று
நான் மட்டுமே என்னுடன்

குட்டை முடியுடன்
வெளியில் சராயில்
வீட்டில் நைட்டியில்
எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொண்டு

One Comment on “ஆர் வத்ஸலா/சுதந்திரம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன