இந்த சிறுகதை பற்றிப் பேசவேண்டுமென்று அழகியசிங்கர் என்னிடம் சொன்னதும் இதன் ஆசிரியர் ஜனநேசன் பற்றி இணையத்தில் குறிப்புக்களைத் தேடிய போது கிடைத்த ஒரு வார்த்தை, ‘என் படைப்புகளில் நான் சொல்ல விரும்புவதெல்லாம் அன்பு… அன்பு… அன்பு…’ என்று தன் படைப்புகளின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார்” என்ற ஒரு வரியாகும்.
இந்த நாய்க்காரப் பெருமாட்டி கதையைப் படித்த போது அந்த வார்த்தையின் முழுப்பரிமாணம் இந்தக் கதையில் அடைத்து வைத்திருப்பது போல எனக்குத் தோன்றியது. வாழ்க்கை தனக்குள் பல புதிர்களையும், ஆச்சரியங்களையும் எதிபாராத திருப்பங்களையும் தனக்குள் பொட்டலமாகக் கட்டி வைத்துள்ளது. நாம் நம் பயணத்தை முன்னே நகர்த்திச் செல்லும் போது அந்தப் பொட்டலங்களை ஒவ்வொன்றாகத் திறந்து காட்டி நம்மை ஒருகணம் உறைந்து போகச் செய்து பயணத்தைத் தொடரச்செய்கிறது. அப்படியான பல பொட்டலங்களில் அன்பு என்கிற பெருமந்திரமும் ஒன்றாகும்.
இந்தக் கதையில் ஒரு பெண்மணி பிராணிகளின் மீதான பேரன்பு அவருடைய வாழ்க்கையின் திசையை மாற்றி விடுகிறது. கதைசொல்லியின் பார்வையில் அவள் பெருமாட்டியாகிறாள். அன்பு என்னும் பேரூற்றின் தரிசனத்தை இந்தக் கதையில் நமக்கு மிகவும் எளிமையாகத் தந்திருக்கிறார் இந்த சிறுகதையின் ஆசிரியர் ஜனநேசன் என்று சொல்வது மிகையாகாது என்று நினைக்கிறேன்.
லண்டன் புறநகரில் வசிக்கும் மகன், மருமகளைப் பார்க்கப் போயிருக்கும் கதைசொல்லி, அந்த மாநகரின் காலை வேளை சிலர் பழகிய நாய்களுடனும் புதிய நாய்களுடனும் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி பற்றிய வருணனையுடன் கதை தொடங்குகிறது. பழகிய நாய்கள் கூட வருகின்றன. புதிய நாய்களை நீளமான நைலான் கயிறுகளில் கட்டி அழைத்து வருகிறார்கள். கயிற்றின் தூரத்துக்கு ஓடி நிற்கும் நாய்கள் அங்கங்கு வேலியோர மரங்களில், புதர்ச்செடிகளில் சிறுநீர் கழித்து தன் சகபாடிகளுக்குத் தங்கள் வருகையைத் தெரிவிக்கிறது. அந்த நாய்கள் கழிக்கும் மலத்தை ஒரு கருநிற நெகிழிப் பைக்குள் லாவகமாகத் திணித்து அதனை அதற்கான நாய்க்கழிவுக் குப்பைத் தொட்டிக்குள் போடுகிறார்கள்.
இந்தக் காட்சி இப்போது இந்திய நகரங்களிலும் பல இடங்களில் காணக் கிடைக்கிறது. டெல்லியின் பல இடங்களிலும் புறநகர்ப் பகுதிகளான குர்காவ்ன், காசியாபாத் போன்ற இடங்களில், கூட்டுக்குடியிருப்புப் பகுதிகளில் இந்தக் காட்சியை எல்லாம் எளிதாகக் காண நேருகிறது.
மகனும் மருமகளும் நாயோடு நடைபோகும்போது பாக்கெட்டில் நெகிழிப்பைகளோடு போகிறார்கள் என்று கதைசொல்லியின் மனைவி நக்கலாக கிசுகிசுக்கிறாள். இடம் மாறும்போது குணமும் மாறும். நடப்பதை எல்லாம் கவனித்து வா என்று மனைவிக்குச் சொல்கிறார் கதைசொல்லி. பொதுவெளியில் நாய்கள் கழிக்கும் மலத்தை விட்டுச்சென்றால் அதற்காக மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும். இதற்காக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அந்த அபராத த் தொகையைக் கட்டுவதற்கு பாக்கெட்டில் நெகிழிப்பைகளை வைத்துக் கொண்டு செல்வது உத்தமம் என்கிறார்.
அங்கு நாய்கள் மிகவும் சம்பிரமமாக வளர்க்கப்படுகின்றன. மனிதர்களுக்குத் தனியாக ஒரு குடும்ப மருத்துவர் இல்லையென்றாலும் இருபது வீடுகளுக்கு ஒருவர் என்று மருத்துவரை அரசு நிர்வாகமே ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த மருத்துவரிடம் ஒவ்வொரு வீட்டு நாயின் புகைப்படம், காமிரா பதிவு, நாயின் இனம், மரபுக் குணங்கள், செல்லப்பெயர், பிறந்த நாள், தடுப்பூசி போடப்பட்ட விபரம் உள்ளிட்ட பல தகவல்கள் பராமரிக்கப்படுகின்றன. பருவம் வந்த ஆண்நாய்களும் பூனைகளும் கண்காணிக்கப்பட்டு அவற்றுக்கு உரிய நேரத்தில் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. காலை நடைக்கு எஜமானர்களுடன் செல்லும் நாய்கள் பிற நாய்களை தங்கள் பாலின விழைவுக்கு அருகில் அண்ட விடாது. நாய்களின் இன விருத்திக்கென்று அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இப்படி நாய் வளர்க்கும் அமர்க்களங்களை சொல்லிக் கொண்டு செல்லும் வேளையில், ஒருநாள் இவர்கள் குடும்பத்துடன் லண்டன் நகருக்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் நேருகிறது. அங்கு நாய்களை வீட்டில் பூட்டி விட்டுச் செல்வது சட்டப்படி குற்றம். இவர்களின் வளர்ப்பு நாய் கொக்கோவை எங்காவது நாய்கள் கவனிப்பகத்தில் விட்டுச் செல்ல வேண்டும். அக்கம்பக்கத்து வீடுகளில் விடமுடியாது, லண்டன் போகும் வழியில் ரெமி என்கிற பெண்மணி நாய்கள் கவனிப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரிடம் தான் கொக்கோவை இவர்கள் வாங்கினார்கள், அவரிடமே விட்டுச் செல்ல இவர்கள் முடிவு செய்கிறார்கள்.
அந்த ரெமி என்கிற பெண்மணி நாய்களை நன்கு பார்த்துக் கொள்வார். கொக்கோவின் தாயும் நண்பர்களும் அந்தக் கவனிப்பகத்தில் இருக்கிறார்கள். அங்கு செல்வதென்றால் கொக்கோவுக்கு தனிக் கொண்டாட்டம்.
கொக்கோவை விடுவதற்கு தனது மகனுடன் கதைசொல்லியும் அங்கு செல்கிறார். அது நாய்களின் உலகம். வெவ்வேறு இனங்கள். நிறங்கள். வடிவங்கள். முன்னூறு நாய்களில் ஒன்று கூடக் குரைக்கவோ உறுமவோ செய்யவில்லை, எல்லாம் ஒன்றாக வாலாட்டி நிற்கின்றன. புன்னகையோடு வரவேற்ற ரெமியின் முகத்தைப் பார்க்கிறார். நாய்களோடு பழகுகிறவள் சிடுசிடுவென்று இல்லாமல் தேவதைகளோடு பழகுபவள் போல முகம் அன்பே வடிவாக, கருணை பொங்கும் கண்களோடு ஒளிர்கிறாள்.
இந்தப் பெண்மணியிடம் அரைமணி நேரம் உரையாட அனுமதி வாங்கித்தா. இப்படியான அபூர்வமான முகப்பொலிவோடு இருக்கும் மூதாட்டியோடு பேசவேண்டும். அவளது சிறப்பம்சங்களை நம் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்கிறார் கதைசொல்லி.
அதே போல அந்தப் பெண்மணி ரெமியிடம் நேரம் பெற்று அவளை அடுத்து ஒரு காலைவேளையில் சந்திக்கிறார். அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்ற அந்தப் பெண்மணி இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்று கேட்கிறாள். இதே போல நாய்களைப் பராமரிக்கும் மையம் தொடங்கவேண்டுமென்றால் மேலே மாடியில் வசிக்கும் ஹேரிஸ் என்பவரைத் தொடர்பு கொள்ளலாம் என்கிறாள். அதற்கு கதைசொல்லி, மூர்க்க குண நாய்களைப் பேணும் அவள் முகத்தில் நாய்க்குண சிடுசிடுப்போ அச்சுறுத்தலோ இல்லையென்றும் அவள் முகத்தில் தோன்றும் அசாதாரண ஒளியை உணர்ந்தே அவளிடம் பேச விரும்பியதாகவும் தான் ஒரு எழுத்தாளன் என்றும் அவளுக்கு பேச விருப்பமும் அவகாசமும் இருந்தால் பேசலாம் என்றும் கூறுகிறார்.
இப்படி நாய் வளர்ப்பில் திட்டமிட்டு இறங்கினீர்களா என்று இவர் கேட்க அந்த அம்மணி, “இல்லை, வாழ்க்கை கற்பனைக் கதைகளை விடக் கொடூரமானது என்றும் சுவாரசியங்கள் நிறைந்த த என்றும் கூறித் தன் கதையைக் கூறத் தொடங்குகிறாள்.
வடக்கே கடலோரக் கிராமம் ஒன்றில் மீனவர்களிடம் மீன் வாங்கி அடுத்துள்ள குறுநகர் ஒன்றின் சந்தையில் விற்று பிழைப்பு நடத்தும் பெற்றோருக்குப் பிறந்தவள் அவள். ஒரு நாள் கடலின் சீற்றத்தால் அந்தக் கிராமமே கடலுக்குள் போனது. அந்த வேளை அவள் நகரில் இருந்த பள்ளிக்குப் போனதால் உயிர் பிழைத்தாள். அவளுடைய மேற்கொண்டு படிப்பையும் வாழ்க்கையையும் சர்ச் பார்த்துக் கொண்டது. பத்தாவது முடித்த தும் கன்யாஸ்த்ரி மடத்தில் சேரவேண்டும் என்றும் அதற்கு மறுத்தால் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சர்ச் கூறியபோது, அவளுக்குத் தன் அம்மாவைப் போல எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும் என்றும் உணர்வுகள் மரத்துப்போன கன்யாஸ்த்ரீயாக இருக்க விருப்பமில்லை என்று கூறி வெளியேறுகிறாள். தன் நிலையை எண்ணி அழுதுகொண்டே நகர்ப்புறத்துக்குப் போகும் ரயிலில் பயணித்த போது உடன் வந்த ஒரு மூதாட்டி அவளுக்கு அடைக்கலம் தந்து வேலையும் வாங்கித்தருகிறாள். ஒரு உணவகத்தில் பணிபுரியத் தொடங்குகிறாள்.
அவள் வேலை பார்க்கும் இடத்தில் பிரமுகர் ஒருவருக்கு ஓட்டுனராக வந்த ஹாரிஸ் என்பவன் அவளிடம் நட்பு பாராட்டி அந்த நட்பு திருமணத்தில் முடிந்து இரு குழந்தைகளுக்குத் தாயாகிறாள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்குப் போகாமல் இருக்க முடிவுசெய்த அவளை கணவன் ஹாரிஸ் விட்டுப் பிரிந்து விடுகிறான். பிறகு குழந்தைகளையும் தனியாகப் பார்த்துக் கொண்டு குடும்ப செலவுகளுக்கும் மிகவும் கஷ்டப்படுகிறாள். வீட்டில் உள்ள சாமான்களை ஒவ்வொன்றாக விற்று சமாளிக்கிறாள். மரச்சாமான்கள், துணிமணிகள் என்று ஒவ்வொன்றாக விற்கிறாள்.
அப்படி ஒருநாள் துணிமணியை விற்றுவிட்டு வீடு திரும்பியபோது சாலையில் நாய் ஒன்று ஆதரவின்றி வருவோர் போவோரின் முகம் பார்த்து வாலாடிட்டிக் கொண்டிருக்கிறது. நம்மைப் போலவே ஆதரவற்று இருக்கிறதே என்று கழிவிரக்கம் கொண்டு அதை வீட்டுக்குக்குக் கொண்டு சென்று கட்டி வைத்து உணவளிக்கிறாள். அன்று மாலை திடீரென்று அந்த நாய் விசித்திரமான ஒலியை எழுப்பவே, வெளியில் வந்து பார்க்கிறாள். ஒரு பெண்மணி அந்த நாய் தன்னுடையது என்றும் தெருவில் அழைத்து வந்த போது ஒரு ஊர்வலம் சென்ற களேபரத்தில் நாய் தங்களை விட்டுப் பிரிந்து விட்டது என்றும் நாயை மறந்து மெட்ரோவில் ஏறிவிட்டதாகவும் பிறகு அங்கங்கு விசாரித்து அவளுடைய வீட்டுக்கு வந்திருப்பதாகவும் அந்த மூதாட்டி சொல்கிறாள். ஜெர்மியைத் தங்களுடன் அனுப்புமாறும் கெஞ்சினாள். ஜெர்மியும் அவளை அடையாளம் கண்டு அவளைக் கொஞ்ச இவள் மனமிரங்கி அப்பெண்மணியுடன் ஜெர்மியை அனுப்ப சம்மதிக்கிறாள்.
மிகவும் மகிழ்ச்சியடைந்த அந்த மூதாட்டி இவள் தன் நாயை அரை நாள் பார்த்துக் கொண்டதற்கு இரண்டு பவுண்டு பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறாள். இவளுக்கும் பணம் தேவைப்படுகிறது. “உங்களிடம் உயிர் வாஞ்சை தென்படுகிறது. நீங்கள் சம்மதித்தால், இப்படியான வளர்ப்பு நாய்களை சிறிது நாட்கள் பராமரிக்க உங்கள் வீட்டிற்கே நாய்களை அனுப்ப சிபாரிசு செய்கிறேன். அடுத்த வாரம் பாரிஸ் செல்லவேண்டியிருப்பதால் அப்போது ஜெர்மியை உங்களிடம் விட்டுச் செல்லலாமா என்றும் அந்த மூதாட்டி கேட்கிறாள். மேலும் நான் கொஞ்சம் பணம் தருகிறேன். அதை வைத்துக் கொண்டு, நாய்களைப் பராமரிக்கும் அவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். எனது நண்பர்கள் குறைந்த கால அவகாசத்துக்காக நாய்களைப் பார்த்துக் கொள்வதற்குப் பணம் தருவார்கள். உங்கள் அணுகுமுறை பொறுத்து இது தொழிலாக மாறும் என்கிறாள் அந்தப் பெண்மணி.
ரெமி கண்ணீர் பொங்க அவள் கரங்களைப் பற்றுகிறாள். நாய்களைக் குறுகிய காலப் பராமரிப்பில் தொடங்கி, அரசு அங்கீகாரத்தோடு கலப்பின நாய்களை உருவாக்கவும், முரட்டுத் தன்மையை நீக்கி நாய்களைப் பண்படுத்தி அவை உணர்வதைச் சொல்லவும் நாம் சொல்வதைக் கேட்கவும் அவற்றைப் பயிலுவித்துப் பேணும் நிறுவனமாகவும் செல்லப்பிராணிகளை வளர்க்கும் முறைகளைக் கற்பிக்கும் நிறுவனமாகவும் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்று கதைசொல்லியிடம் கூறுகிறாள் ரெமி.
உங்கள் குழந்தைகளும் கணவரும் என்ன செய்கிறார்கள் என்று கதைசொல்லி கேட்க, குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து பின்னர் இந்த நிறுவனத்தின் வருமானத்தில் கால்நடை மருத்துவர்களாக ஆக்கி அவர்கள் இதே மையத்தில் சேவை செய்கிறார்கள் என்கிறாள். தன்னை விட்டுப் பிரிந்த கணவன், ஒரு விபத்தில் காலொடிந்து திரும்பி வந்தான். அவனைக் குணப்படுத்தி மேல் தளத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு முறை கற்பிக்கும் பிரிவில் நிர்வாக சேவை செய்ய அமர்த்தியிருக்கிறேன் என்கிறாள்.
கதைசொல்லி நெகிழ்ந்து நிற்கிறார். அன்பே வெல்லும் என்பதற்கு உங்கள் வாழ்வே சாட்சி. எனக்கு நீங்கள் தேம்ஸ் நதிக்கரை கோபுரத்தைக் காட்டிலும் உயர்வாகத் தெரிகிறீர்கள் என்று எழுந்து நின்று வணங்குகிறார். அதற்கு அன்பு பொலியும் முகத்தில் சிறுபுன்னகை கீற்றாக ஒளிர, தயவு செய்து மிகையாகப் புகழாதீர்கள் என்றார் அந்த நாய்க்காரப் பெருமாட்டி என்று முடிக்கிறார் கதைசொல்லி.
இந்தக் கதையின் வெற்றி அதை மிக எளிமையாக சொல்லியிருக்கும் முறை. கிராஃப்ட் என்று சொல்லப்படும் எந்த உத்தியும் இல்லை. ஒரே நேர்க்கோட்டில் பாவனைகள் ஏதுமின்றி சம்பவங்கள் மிகவும் சுவாரசியமாக சொல்லப்படுகிறது. கதை சொல்லும் பாங்கு நம்மை கூடவே அழைத்து செல்கிறது. ரெமியின் கதை தொடங்கியதும் அது இன்னொரு கதையாக விரிந்து, வாழ்க்கையின் ஒரு பரந்த வெளியைப் பார்த்த பிரமிப்பை நமக்கு வழங்குகிறது. உரக்க எதுவும் சொல்லப்படவில்லை.
அன்பின் தரிசனம் எவ்விதப் பிரயாசையுமின்றி மிகவும் சரளமாக செய்து வைக்கப்படுகிறது. லண்டனின் புறநகரில் வீட்டில் நாய்களைப் பராமரிக்கும் களேபரங்களில் தொடங்கி, அதன் விவரணைகள் மிகவும் நுட்பமாகத் தரப்பட்டு, அந்தக் கதையின் இழையில், நாய்களைப் பராமரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் ரெமியின் அறிமுகமும் அதைத் தொடர்ந்த அவளுடைய வாழ்க்கையின் அனுபவங்களும், நாய்களின் மீதான அவளுடைய பரிவும் எல்லாவற்றையும் விட தன்னைக் கைவிட்டுச் சென்ற கணவன் காலொடிந்து திரும்பியதும் அவனை மீண்டும் தன்னில் ஒரு அங்கமாக சேர்த்துக் கொண்டு, இரு குழந்தைகளையும் கால்நடை மருத்துவர்களாக்கி அவர்களையும் தன் மையத்தில் சேவை செய்ய வைத்திருப்பது என்று பல்வேறு முறைகளில் பிரமிப்பை அளிக்கும் ஒரு பெண்மணியின் வாழ்க்கையும், பரிவும், பேரன்பும் இந்தக் கதையை வாசித்து முடித்த பிறகும் நீண்ட நேரம் எல்லாவற்றையும் நம் மனதுக்குள் அசை போட வைக்கும் மாயத்தை இக்கதை நிகழ்த்துகிறது.
இந்த நல்லதொரு கதையை வாசிக்கவும் அந்தக் கதையை உங்களுடன் மீண்டும் அசைபோடவும் இந்தக் கூட்டத்தின் மூலம் வாய்ப்பளித்த விருட்சத்துக்கும் அழகிய சிங்கருக்கும் என்றும் என் நன்றி. ஜனநேசனுக்கு வாழ்த்துக்கள்.
-24 ஏப்ரல் 2024
