சாய்ரேணு சங்கர்/பின்பக்கம்

===========

“என்னவோ இராமபத்ரன், உன் வீட்டுக்கு வந்தாலே ஒரு நிம்மதி, சந்தோஷம். சுத்தமா, கலைநயத்தோட இருக்கு” என்றான் அனில்.

அந்த வீட்டு மனிதர்கள் – கணவன், மனைவி இருவருமே – மட்டும் என்ன, விருந்தோம்பலில் சளைத்தவர்களா, இல்லை வேடிக்கையாகவும் ஒட்டுதலாகவும் பேசுவதில் குறைந்தவர்களா?

சுவையான சிற்றுண்டியை நிறைவுடன் அருந்திக் கைகழுவப் போனான்.

“ஃப்ரெண்டைக் கூட்டிவரக் கூடாதுன்னு சொல்லல. வீட்டு நிலைமையை யோசிச்சீங்களா? மாசக் கடைசி, காப்பிப் பொடி காலி. பிள்ளைங்களுக்கே டீதான், ஃப்ரெண்டுக்கு ஃபில்டர் காபி!” – ஆதங்கக் குரல் அடுக்களையிலிருந்து, அவன் காதிலும் விழுந்துவிட்டது.

கைகழுவும்போது சிறிய கதவுவழி எட்டிப் பார்க்க – வீட்டின் பின்பக்கம். கீக்கிடமாய்,  குப்பைகள் அடைத்து…

எல்லா வீட்டுக்கும், எல்லார் மனத்துக்கும் – ஒரு பின்பக்கம் உண்டு என்று எண்ணிக் கொண்டான் அனில்.