ஜெ.பாஸ்கரன்/என்ன படிப்பு?


சுமிக்குத் தலை சுற்றியது.

பத்தாவது முடிந்தது. நல்ல மார்க்குடன் பாஸ்.

ப்ளஸ் 2 – வாழ்க்கை விதியை நிர்ணயிக்கும் படிப்பு தேர்ந்தெடுக்கும் கட்டம் – என்ன படிப்பு தேர்ந்தெடுப்பது? வந்தது தலைவலி!

‘இத பாரு சுமி, உன் எதிர்காலமே இப்ப நீ எடுக்கிற முடிவுலதான் இருக்கு. அறிவியல், வணிகவியல், ஃபேஷன் டிசைனிங், டாக்டர், பொறியியல், ஆர்க்கிடெக்ட் – எதுவானாலும் இப்பொ முடிவு செய்யணும்’ என்றார் அப்பா.

‘இன்றைக்குத் தேவை நல்ல டாக்டருங்கதான். அறிவியல் முன்னேற்றத்துல தினமும் புதுசு புதுசா ஏதேதோ வந்துகிட்டே இருக்கு. நல்ல எதிர்காலம் இருக்கு. வெளிநாட்டுல கூட போய் செட்டில் ஆயிடலாம். அதனால, டாக்டர் படிப்புக்கான சயின்ஸ் குரூப் எடுத்துக்கோ’ என்றார் குடும்ப டாக்டரும், நண்பருமான நடேசன்.

‘ஐயோ, டாக்டரா? நான் கெழவியானப்புறம்தான் நாலு காசு பாத்து, லைஃப்லெ செட்டில் ஆகமுடியும். சோசியல் சர்வீஸ்ன்னு நான் மட்டும் தனியா நின்னா, வாழ்க்கைய சமாளிக்கறதே சிரமம்தான். அதோட இந்த நீட்டு, மடக்கு எல்லாம் எனக்கு ஒத்து வராது. இரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் வேற வரும் – எனக்கு வேணாம் அந்தப் படிப்பு’.

‘சரி, என்ஜினீரிங் படிச்சு, ஒரு ஐடி கம்பெனீல சேரு… அவங்க டெபுடேஷன்ல, அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு வெளிநாடு போகலாம். இல்லைன்னா, அங்கயே ஸ்காலர்ஷிப்லெ எம் எஸ் பண்ணி நல்ல கம்பெனில சேர்ந்து செட்டில் ஆயிடு. இந்தியாவில எல்லாம் உனக்கு வாய்ப்பே இல்ல’ – சொன்னவர், தினமும் ஆங்கிலப் பேப்பரை ஒரு வரி விடாமல் வாசிக்கும் எதிர் வீட்டு மாமா.

அவரோட ஒரே பிள்ளையும், பெண்ணும் அமெரிக்காவுல நல்லா செட்டில் ஆயிட்டாங்க. இன்னும் கல்யாணம் ஆகலை. பாவம், இவரும் இவர் மனைவியும் மட்டும் தனியா இங்கே மோட்டுவளையேப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க.

‘எனக்கு என்ஜினீரிங் வேணாம். ஐடி யும் வேணாம். வெளிநாட்டு நேரத்துக்கு, ராத்திரி, பகல் பார்க்காம உழைக்கணும். அதோட, வர்ற செய்திகளைப் பார்த்தா, பயம்மா இருக்கு. ம்..ஹூம் எனக்கு ஒத்து வராது.’

‘பி.காம் படிச்சு, சார்டட் அக்கெளண்டண்ட் ஆயிடு’ – அம்மாவின் சிபாரிசு.

‘அந்த கோர்ஸே ரொம்ப டஃபாமே. இரண்டு சதவிகிதம்தான் ரிஸல்ட் வருதாமே. அதோட நமக்கும் அக்கவுண்டிங்குக்குக் ரொம்ப தூரம். மளிகைக் கடைக் கணக்கே எனக்குத் தகராறு’

ஆர்க்கிடெக்ட், ஃபேஷன் டிசைனிங்கில் எல்லாம் அவ்வளவு இண்டரெஸ்ட் இல்லே சுமிக்கு.

ரொம்ப யோசித்து, சுமி ஒரு முடிவுக்கு வந்தாள். டாக்டராகவும், என்ஜினியராகவும், வக்கீலாகவும், ஆர்க்கிடெக்டாகவும் – எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம். இன்றைக்கு சொசைட்டியில் மதிப்பு, பணம், புகழ் எல்லாம் கிடைக்கிற தொழிலில் சேர முடிவு எடுத்தாள் – எதிர்காலத்தில் சுமிக்குக் கோயில் கூட கட்டப்படும் வாய்ப்பிருக்கிறது!

‘உலகமே ஒரு நாடகமேடை, நாமெல்லோரும் நடிகர்கள்’ என்பதில் அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. யார் கண்டார்கள், நாளைக்கு நம்ம ஊர் முதன் மந்திரியாகக் கூட ஆகிவிடலாம்!

கண்ணாடி முன் அமர்ந்து தன் முகத்தை உற்றுப் பார்த்தாள் சுமி!

One Comment on “ஜெ.பாஸ்கரன்/என்ன படிப்பு?”

Comments are closed.