மோகன் ஜி/சுஜாதா

இன்று எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள்.

அவரோடு கழித்த ஒரு பகல் இன்னும் மனதுள் பிரகாசமாக ஜ்வலிக்கிறது.
என் நண்பன் கிருஷ்ணசாயி இல்லத் திருமணத்தில், ‘அத்திம்பேருக்கு (சுஜாதா) கம்பெனி கொடு மோகா’ என்று அவருடன் அமர வைக்கப்பட்டேன்.

என்னைப் பற்றிய ஏகப்பட்ட பில்டப்போடு அவரிடம் அறிமுகமும் செய்வித்தான்.

அவர் வாயைப் பிடுங்கிக் கொண்டிருந்தேன். கவிதை பற்றி பேசினோம். நிஸாம் எஸக்கியல் , ஞானக்கூத்தன், திருலோகம் என விவாதித்தேன். என் கவிதைகள் சிலவற்றையும் அடித்துவிட்டேன்.
வயசு அப்படி!

என் ‘மின்விசிறி’ கவிதை பற்றி சிலாகித்தார்.

“கவிதை எழுதறதைக் கொறச்சுகிட்டு, நிறைய ஆன்மீகம், கட்டுரைகள்னு திரும்பு மோகன்.”

“ ஏன் சார்? என் கவிதைகள் நல்லால்லியா?”

“ரொம்ப நல்லா இருக்கு! அதனால தான் சொல்றேன். ஆன்மீக எழுத்திலோ, கட்டுரைகளிலோ கவிதை நடை படிஞ்சா பிரமாதமா வரும்”

என் நண்பன் சாயியிடம்,
’‘சாய்! இவர் கவிதை நோட்டை ஒளிச்சு வச்சுடு. ஒரு ஞாயித்துக் கிழமை மோகனை அழைச்சிகிட்டு வீட்டுக்கு வா.” என்று கூறி விடைபெற்றார்.

“சாயி! உங்காளு கொஞ்சமாத் தான் பேசறாரு. நான் பேசறதைக் கேட்டாரான்னே தெரியலடா!”

“ அவர் உங்கிட்ட இவ்ளோ நேரம் பேசினதே அதிகம் மோகா!
அவர் உன்னை மாதிரி லொடலொடா இல்லை. ஹி ஈஸ் அ குட் லிஸ்ஸனர்! தாம்பூலத்தை வாங்கிகிட்டு ஓடுடா!”

குறுந்தொகையில் ஒரு அழகிய பாடல்:-

சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள் எம் அணங்கியோளே.

இதற்கு மிக எளிமையான அர்த்தம் சொல்லுகிறார் சுஜாதா:-

சிறிய, வெளுப்பான, அழகிய வரிகளுடைய பாம்புக் குட்டி
காட்டு யானையை வருத்துவது போல, இந்த இளம் பெண்
அரிசி பற்களும் கைநிறைய வளையல்களுமாய்
என்னை வருத்துகிறாள் .

எவ்வளவு கனகச்சிதமாக பாடலின் ஆதார உணர்ச்சியை வெளிப்படுத்தி விட்டார் சுஜாதா?.
தமிழ் இலக்கியத்தில் மிகுந்த பரிச்சயமில்லாத இளைய தலைமுறையினர் பலருக்கு இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவர்.
பண்டிதர்களுக்கு மட்டுமேயானது தமிழ் இலக்கியம் அல்லவே என்பது அவருடைய வாதமாக இருந்தது.

நவீனப் போக்கில் பழந்தமிழை அறிமுகம் செய்யாவிட்டால், அது நூலகங்களின் இருண்ட அலமாரிகளில் செல்லரித்துப் போகக் காத்திருக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டவர் சுஜாதா. எனவேதான் பல விமர்சனங்களுக்கு இடையேயும் இந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

உங்களுடைய இடம் இன்னும் காலியாகத்தான் இருக்கிறது மை டியர் சுஜாதா!

2 Comments on “மோகன் ஜி/சுஜாதா”

  1. சுஜாதாவை நினைவுபடுத்தினால் ஒரு சிரமம். நினைவுகள் பொலபொலவென்று பொங்கி வரும், நாலு நாள் வாட்டும்.
    நன்றி 🙂

Comments are closed.