ஜெ.பாஸ்கரன்/நினைவுக் குப்பை

வீட்டின் புழக்கடை பூராவும் குப்பைகள், பழைய துணிமணிகள், முன்கூடை வைத்த ஒடாத துருபிடித்த சைக்கிள், அவசரத்துக்கு உதவுமென சேர்த்து வைத்த பைகள், சுவற்றிலிருந்து கிழித்த கனவுலகக் கதாநாயகனின் போஸ்டர், ஃப்ரிஜ்ஜின் கம்பித் தட்டுகள், இன்னும் வேண்டாத பல பொருட்கள்…

வீட்டை அடைத்துக்கொண்டு, மூச்சுவிடக் கூட இடம் கொடுக்காத தட்டுமுட்டு சாமான்கள். உடன் பல்லிகளும், பாச்சைகளும். கரப்பான் பூச்சிகளும்!

எல்லாவற்றையும் வெளியே எறிந்தாள் சுகுணா. வீடு சுத்தமாகியது – வெளிச்சம் பரவியது, சுவாசம் எளிதானது!

கழிவுகளுடன் வெளியேறிய நினைவுகளும் அழிந்தன.

வீட்டைப்போல மனதும் சுத்தமானது. இலேசானது.

அறுபது வருட இறுக்கம் தளர்ந்தது – அழுத்திக்கொண்டிருந்த பாரம் மறைந்தது.

அவன் இறந்த பதின்மூன்றாம் நாள் இன்று!