நாகேந்திர பாரதி/நம்பிக்கைச் செடி

மேடும் பள்ளமும் பார்த்து முடித்து , சாய்ந்து கிடக்கும் ஓட்டைச் சைக்கிள் .

உப்புமாவான ரவாவை உதிர்த்து முடித்து ஓய்ந்து போன கிழிசல் பை .

மொண்டு வந்து ஊற்றிய தண்ணீர் நினைப்பில் ஓட்டையாய்க் கிடக்கும் உடைந்த வாளி .

மேலும் கீழுமாய் மானம் காத்து மினுக்கித் திரிந்து காலம் போன கழிசல் ஆடைகள் .

தம்ளராய்ப் பையாய் வண்டியாய் திரிந்து ஓய்ந்து போய்க் கிடக்கும் எத்தனை சாமான்கள் .

முடிந்ததது வாழ்க்கை என்று முனகிக் கிடக்கும் அவற்றோடு சேர்ந்து இலையுதிர்ந்த செடி ஒன்றும் ஓரத் தொட்டியில் .

‘ஒரு துளி விழுந்தால் போதும் , நான் துளிர்த்து எழுந்து விடுவேன் ‘ என்ற நம்பிக்கையோடு .

———