செல்விபிரகாஷ் கவிதை

ஓர் ஒட்டகமாய் நான் கடந்து செல்ல
முற்படுகையில், என் பாலைவனம்
மணல்விரித்து போவதற்கு
மறுப்பதில்லை.

இறந்தகாலத்தைக்
குடித்து ,எதிர்காலத் தாகத்திற்காய்
நிகழ்காலக்குடுவை நிறைந்துபோகிறது.

திமிரிக்கிடக்கும் திமில்கள் அறியும்
இருப்பின் கனமும் இல்லாததின்
கனமற்றதும்.

நிகழ்கால குளிருக்காய் ஏங்கிக்கிடந்த
இறந்த காலங்கள், கொழுப்பாய் சேர்ந்து
போகிறது , நாளையின் செலவுக்காய்.

சூரியனை சுமந்துபோகும்
பாலைவனத்தில் கானல்நீரை
தொடுவதற்கான நகர்வுகளில்
வியர்த்துப்போவது காலம் மட்டுமா?