சாய்ரேணு சங்கர்/காற்றுக் குரல்

அவனுக்குக் கேட்டதுமே அந்தக் குரலைப் பிடித்துவிட்டது. ஆனால் அந்தக் குரல் இப்போது எங்கே? அந்தக் கிராமத்தில் புதிதாக அமைந்திருந்த ரிஸார்ட்டில் ஓய்வுக்காகத் தங்கியிருந்தபோது கேட்டான்.
உடனே பேச வேண்டியோரிடம் பேசி, சென்னைக்குக் கூட்டிவந்துவிட்டான். அவனது இசையில் பாட வைத்தான். திரையில் புது நட்சத்திரமாக வெகு விரைவில் பரிமளிக்கத் தொடங்கிவிட்டாள் அவள். எத்தனைப் பாடல்கள்! ‘கிராமக் குயில்’ என்று பட்டம் வாங்கியிருந்தாள். ஆனால் அவன் கேட்ட, ரசித்த கிராமக் குயிலின் குரலைக் காணவில்லை என்பதுதான் நிதர்சனம். “எங்கே? காற்றும், மழையும் காதலித்த அந்தக் குரல் எங்கே? மலை விரும்பி எதிரொலித்த பாட்டு எங்கே? ஆற்றின் அலை ஆசையாய் பின்பாட்டுப் பாடுமே, அந்தக் குரல் எங்கே, குழந்தை?” அவள் கண்களைக் கொட்டினாள். “இங்கே இருக்கு” என்றாள். ஒரு பெரிய அறை, அதில் மரத்தூண்
ஒன்று எழும்பியிருந்தது. அதில் சின்னக் குருவி ஒன்று பளபளக் கண்களுடன் உட்கார்ந்திருந்தது. “எங்க ஊருக்குப் போனப்போ பார்த்தேன். இது தினமும் ஆலமரத்தின் மேலே உட்கார்ந்து அழகா பாடும். அன்னிக்கு அடிபட்டிடுச்சு, அதனால தூக்கிட்டு வந்தேன். காயம் சரியா போச்சு, ஆனா எனக்குத்தான் வெளியே விட மனசே இல்ல! அதும் பாட்டைக் கேக்கணும், ஒரு தடவை கேக்கணும், அப்புறம் ஊருக்கே அனுப்பிடலாம்னு பார்க்கறேன். அது பாடவே மாட்டேங்கிது! அந்தக் குரலு! ஆத்தோட அலை பின்பாட்டுப் பாடற குரலு!” ஆமாம். அந்தக் குயில் காற்றாய், மழையாய்ப் பாட, காற்றிலும் மழையிலும் பாட வேண்டும். தானாய் எழ வேண்டும் கவிதை. கல்மஷமில்லாத குயிலைக் கூண்டிலடைத்து, காதலையும் காமத்தையும் பாடு என்று சொல்லியது யார் தப்பு? அழைத்து வந்துவிட்டோம், இனி இந்தக் குயிலால் திரும்பப் போக முடியுமா? இந்தத் தங்கக் கூண்டு அதற்குப் பழகிவிட்டதோ?காயம் ஆறி, நல்ல புஷ்டியாய், அமைதியாய் அமர்ந்திருந்த குயிலைப் பார்த்தான். சிவப்புப் பாவாடையோடு, கையில் சிறு கோலுடன் கன்றுக்குட்டியை ஓட்டிக் கொண்டு, சந்தோஷமாய்ப் பாடித்திரிந்த ஒரு சிறுமிதான் அவன் கண்களுக்கு அங்கே தெரிந்தாள்.
“ஊருக்கு அனுப்பிடு” என்றான். “அதாவது திரும்பிப் போகட்டும்.”
கிராமத்து ஊருணிக் கரையில் பொசபொசவென்று செழுமையாய்
வளர்ந்திருந்த மரத்தடியில் புளியம்பிஞ்சைக் காக்காய்க் கடி
கடிப்பதைப் பற்றிக் குதித்துக் கிளம்பிய பாடல் ஒன்று
அப்போதும்கூட அவன் காதில் கேட்டது.