ஆர். வத்ஸலா
எனக்கு இருக்கறது ஒரே ஒரு அண்ணன். என்னெ விட ஒரு வயசுதான் பெரியவங்கறத்துனால் அவர்ங்கற மரியாதெ கொடுக்கறதில்லெ.
நீங்க தப்பா நெனெக்காதீங்க. அவன் ஒண்ணாங்கிளாஸ் லேந்து வகுப்பிலெ மொத ராங்க். (அப்பெல்லாம் ப்ளே ஸ்கூல், எல். கே. ஜி. , யூ. கே. ஜி. , மை. கே.ஜி. ன்னு கொன்னுட்டு சென்னை வெயில்லெ வேத்து கொட்ரா மாதிரி ஒடெ, குல்லா போட்டு பட்டமளிப்பு விழா எல்லாம் நடத்தற பழக்கமில்லெ (அதாவது அப்பாம்மாவுக்கு தன் கொழெந்தங்களுக்கு கல்லூரி அளவுக்கு கட்டணம் கட்றது தெரியாம இருக்கறத்துக்காக இப்ப செய்யற பம்மாத்து வேலெ அப்ப இல்லெ) . இருந்திருந்தா பொண்ணுங்கறத்துனால எம் படிப்பு கோவிந்தா ஆயிருக்கும்.
எங்கெ விட்டேன்? ஆங்! எங்கண்ணா ஒண்ணாங்கிளாஸ் லேந்து பள்ளிக்கூடத்திலெ, கல்லூரியிலெ எல்லாத்துலெயும் மொத ராங்க்.
நான் எங்கெயோ அதாவது ரெண்டாவது ரேங்க். அதுனால வீட்லெ அவன்தான் ஆஸ்தான புத்திசாலி .
இதனோட முக்கிய பக்க விளவு என்னான்னா, அவனோட தங்கையான நான் எங்க அப்பாம்மாவாலெ ’ஏதோ பரவாயில்லை, சுமாராக படிக்கிறா, இந்த மட்டும் பாஸ் பண்ராளெ’ன்னு கருணையோடு ஒரு மூலெக்கு தள்ளப்பட்ட அப்பாவி.
அதாவது அசடுக்கு மேலெ ,கெட்டிக்காரிக்கு கீழெ. அதாவது மக்குன்னு சொல்ல முடியாம அவுங்க பாசம் தடுத்துச்சு.
இத்தனெயும் எங்கண்ணா அக்காவா பொறக்காத்துனாலெயும், அவங்கிளாஸ்லெ அவனெ விட மத்தவங்க மக்கா இருந்ததுனாலெயும், எங்கிளாஸ் மிஸ்ஸோட பொடவேலெ அந்த மொத ரேங்க் வாங்கற பொண்ணோட அம்மா எம்ப்ராயிடரி போட்டு தந்துண்டு இருந்த்ததாலெயும் தான்.
அப்படியும் அவனெ மன்னிச்சு அவன் மேல் பாசம் கொண்டவ நான். அது இன்னொரு பிரச்னெ.
அவன் பகவத் கீதெயெ படிக்காமலேயே படிச்சா மாதிரி நடந்துக்கறவன். அதாவது யாரும் யாரிடமும் உணர்வுபூர்வமாக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. சுருக்கமாக சொல்லப்போனா அவன் ஒரு தாடியில்லாத (வெச்சுக்க ஆசெதான் ஆனா அப்பாம்மா அழுதே கொன்னுடுவாங்களேன்னு பயம்)
ஜோல்னா பை மாட்டிண்ட காதி குர்தா போட்ட அறிவுஜீவி. எங்க அப்பாம்மாக்கு நான் மக்குன்னா அவனுக்கு நாங்க மூணு பேருமே மக்கு. எனக்கு கல்யாணமானப்பறம் அவரும் அதிலெ சேத்தி.
எனக்கு புரிஞ்சவரெக்கும் அவனோடெ வரையறை படி எதுக்குமே சந்தோஷ படாமெ எதுக்குமே துக்க படாமெ இருக்கறவங்க அறிவுஜீவி (அதாவது ஜோல்னா பை காதி குர்தா அடையாளெங்களெ தவிர).
எங்க மாதிரி அந்த காலத்து “ஹம் லோக்” சீரியல் பாக்குறவங்க, பாச மலர் படம் பாத்து அழறவங்க (நான் டாங்கர் டாங்கரா அழுது சன் தியேடரே ஈரமாயிடிடுச்சு)
எல்லாரும் உலக மகா மக்குங்க. இயக்குனர் பாலச்சந்தரெ ”உங்க பாலசந்தர்” அப்பிடீன்னுவான் அறிவுஜீவி அண்ணா எங்க நாலு பேரெ பாத்து. பாவம் பாலச்சந்தர், அவரு என்ன பாவம் செய்தார்
எங்களோட ஆளா வகைப்படுத்தன்னு இன்னி வரெக்கும் எனக்கு புரியலெ.
அண்ணாவுக்கு நண்பர்கள் ரொம்ப கொறெவு. அந்த ஒண்ணு ரெண்டு பேர்லெ யாராச்சும் வந்தாங்க அண்ணா சடார்னு தன் ரூமுக்கு அவங்களெ இழுத்துட்டு போயிடுவான்.
அவங்களுக்குள்ளெ என்னவோ குசுகுசுன்னு பேசிக்கிவாங்க. எங்க வீட்லெ யார் வந்தாலும் காபி கட்டாயமாக கொடுத்தாகணுங்கறது அப்பாவோட கட்டளெ.
அம்மா முணுமுணுத்துகிட்டே காபி போடுவா. பெரிய பிரச்சினை என்னன்னா ஊருக்கு எளெச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிங்கறது போல நான்தான் காபியெ கொண்ட போய் குடுக்கணும்.
அண்ணாக்கு இது பிடிக்காது. மொறெச்சு பாப்பான். ஒலகத்தெ தலெகீழா மாத்தற அவுங்களோட பேச்சு தடெ பட்டு போச்சுன்னு. அவனோட நண்பர்களோ இந்த ஜென்மத்திலெ எந்தப் பொண்ணெயும் ஏறெடுத்து பார்க்காத ரகமா இருப்பார்கள். மேஜெ மேலெ காபியெ வெச்சுட்டு உடனே நான் ஓடி வந்துடணும்.
இப்படி அவனாலெ என் வீட்லேயே கடைசி பெஞ்சிக்கு தள்ளப்பட்டு இருந்தாலும் நான் முந்தி சொன்னது போல எனக்கு அவனிடம் பாசம் அவனுக்கும் எம்மேலெ உண்டு. ஆனால் அத இந்த ஜென்மத்தில காண்பிக்கறது அவனுக்கு அதாவது ஒரு அறிவுஜீவிக்கு ஏற்பட்ற மிகப் பெரிய தோல்வியாகும். அதனாலெ எப்போதாவது ஒரு சின்னூண்டு புன்சிரிப்பு மூலம் இல்லாட்டி ஏதாவது தேர்வுலெ ஓரளவு நல்ல மதிப்பெண் வாங்கினா (அது என்னை பொருத்தவரெ முதல் ரேங்க்கா இருக்கும்) ’பரவாயில்லையே’ன்னு சொல்ற போது தெரியும் அந்த பாசத்தோட ஆழம். எப்போதாவது எனக்கு ஜுரம் வரும்போது என் அறையை தாண்டும்போது நான் தூங்கிக் கொண்டிருப்பதாக நெனெச்சுண்டு யாராவது வர்றத்துகு மின்னெ என் போர்வெயெ சரி செய்துட்டு ஓடி போயிட்ற போது கூட தெரியும்.
நான் முக்கியமா சொல்ல வந்ததெ சொல்ல மறந்துட்டேனே. என் அண்ணனாலெ எனக்கு வருஷா வருஷம் ஒரு பெரிய சங்கடம் வரும். வருஷத்துக்கு ஒரு மொறெ அவனோட பொறந்த நாளெக்கு கட்டாயம் பரிசு கொடுக்கணும்னு எனக்கு ஆசெ. இல்லாட்டி எனக்கு தல வெடிச்சுடும். திருமணமான பெறகும் இந்த பழக்கம் தொடர்ந்தது. பிரச்னெ என்ன பரிசு குடுக்கறதுங்கறதுலெ இல்ல. எங்கெ வாங்கறதுங்கறதுலெயுமில்லெ. நிறைய காசு செலவழியும்ங்கற கவலெயுமில்லெ. நான் செய்ய வேண்டியதெல்லாம் என் கணவரெ கூட்டிண்டு அண்ணா சாலெலெ இருக்கற காதி கிராமோத்யோக் பவன் கடெக்கு போய் சகிக்காத ஒரு அழுக்கு பழுப்பு நெறெத்தில என்னோட அண்ணாவோட அளவெ விட ஓரளவு பெரிய சைஸ் ( அவனே கொஞ்சம் தடி தான்னாலும்) கைத்தறி குர்த்தா வாங்கணும். அத்தோட நீளம் அகலம் எல்லாமே அவன் வயதுக்கு வந்த நாளா தீர்மானிக்கப்பட்டது. இதிலெ என்ன பிரச்சினெங்கிறீங்களா? என் கணவர் கூட பரவாயில்ல. நமுட்டு சிரிப்பு சிரிச்சு சிரிச்சு கடந்த சில வருஷங்களா அவுருக்கு போரடிச்சிடுச்சு. ஆனா என்னோட மிகப் பெரிய்ய ப்ரச்னெ அந்த கடெலெ ஆண்டாண்டா காதி குர்த்தா கொடுக்கற சிப்பந்தி மாறவேயில்லெங்கறதுதான். நான் வாசல்லெ காலெ வெச்சதுமே வழக்கமான அளவுலெ அதே அழுக்கு பழுப்பு நெறெத்திலெ ஒரு குர்த்தா எடுத்து காகித பையிலெ போட்டு, பில் போட்டு, கவுண்டருக்கு அனுப்பிட்றார். அவர் மொகத்திலெ தெரியற அந்த அலுப்பு என்னெ வருஷா வருஷம் ரொம்ப அவமானப்படுத்தறதுங்க.

ரொம்ப பழக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரோ எழுதின மாதிரி இருக்கிறது
ஒன்றிரண்டு பேர்களைத் தவிர
எழுத்தாளர்கள் அனேகமாக இப்படித்தான் வீட்டில் இருப்பார்கள்
என்று நினைக்கிறேன்