கால சுப்ரமணியம்

“பழம்பெரும் எழுத்தாளர்கள்” என்ற தலைப்பில் முன்னோடி எழுத்தாளர்கள் சிலரைப் பற்றி அரவிந் சாமிநாதன் ‘குவிகம்’ அமைப்பினர் நடத்திய ஜூம் சந்திப்பில் உரையாற்றினார். அவர் அதுபற்றி தம் முகநூலில் இன்று தகவல் வெளியிட்டபோது அதன் பின்னூட்டத்தில் எழுதியது இது. பலருக்கும் இத்தகவல்கள் பயன்படலாம் என்று நன்றியுடன் இங்கு பகிரப்படுகிறது.
———————செய்யூர் சாரநாயகி அம்மாள்————————————-
நிகழ்ச்சியை செய்யூர் சாரநாயகி அம்மாள் யார் என்ற தகவல் புதியதாக இருந்தது. அவருடைய ஒரு நூல் பற்றி ‘தமிழ்ப்பெருமாட்டி’ என்ற வடுவூராரின் பத்திரிகையில் வந்த மதிப்புரை தான் கிடைக்கிறது. ‘ஸ்திரீ எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் விசாலாக்ஷி அம்மாள் முதலிய ஆரம்ப கால எழுத்தாளர்கள் பற்றி வை.மு.கோதைநாயகி அம்மாளின் ‘ஜகன்மோகினி’ இதழில் வெளிவந்த தொடரில் (என்னிடம் அத்தொடரின் பக்கங்கள் உள்ளன)
அன்றைய பிரபல சாரநாயகி அம்மாள் இடம்பெறாதது ஏன் என்ற கேள்விக்கும் இது விடையாக இருக்கிறது. வடுவூராருக்கும் வைமுகோ அம்மாளுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு தான் சாரநாயகி அம்மாள் தசாவதாரம் என்ற உங்கள் யூகம் சரியானதாகத்தான் இருக்கவேண்டும்.
(அறிவித்ததுபோல் 10 நாவல்கள் வரவில்லை என்றும் ஒன்றிரண்டு குறைவுடன் நின்றுவிட்டது என்றும் நினைக்கிறேன். சாரநாயகியின் ‘சம்பத்குமார்’ நாவலை அல்லயன்ஸ் இப்போது மறுபதிப்பு செய்திருக்கிறது.
வடுவூராரின் அத்தனை நாவல்களையும் சமீபத்தில் வெளியிட்டு நூலக ஆணை எப்படியோ பெற்று முழுதாக இருமுறை – முதலில் டெம்மி சைசிலும் பின்பு கிரௌன் சைசிலும் – அவற்றை விற்றது அதே பதிப்பகம்தான்.) உங்கள் தந்தையாரிடம் இந்தத் தகவலைப் பெற்றதாகக் கூறினீர்கள். ம,ந.ராமசாமி எங்கோ எழுதியிருப்பதாகச் சொன்னீர்கள் (அது எங்கே?).
சாரநாயகி அம்மாள் ஏதோ தன் புத்தகம் பற்றி வழக்கு மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் நிமித்தம் எழுதுவதை நிறுத்தினார் என்ற தகவல் எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் அது வடுவூரார் தன் துப்பறியும் மர்மநாவல்களை இதுபோன்ற ஒரு வழக்கின் வெறுப்பால் எழுதுவதை விட்டு அதீத ஆன்மீக வரலாற்றில் மூழ்கி, உலகம் முழுதும் சென்றவர்கள் தமிழர்தான் என்ற பிந்திய பாவாணர் அட்லாண்டிஸ் தொன்மத்துக்கு முன், உலகம் முழுதும் சென்றவர்கள் (குறிப்பாக எகிப்து) வடகலை ஐயங்கார்கள் தான் என்ற புனைவு வரலாறு (ஒருவகையில் அயோத்திதாசரையும் அவர் அறிந்திருக்கலாம் போலும்) கட்டியெழுப்பி அதற்காக தன் வீட்டையும் பொருளையும் இழந்தது அதிசயமான காரியம்தான்.
ஷெர்லாக் ஹோம்ஸ் எழுதிய கானன்டாயில் பின்பு ‘The Lost World’ என்ற புனைகைதையை எழுதியதுபோல் Lost Link புனைவு வரலாற்றை வடுவூரார் எழுதினார் போலும்.
இந்த Lost Link நூல் கன்னிமாரா நூலகத்தில் முன்பு கிடைத்ததாக தினமணி சிவக்குமார் கூறினார். செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றி முன்பு என் முகநூலில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
