முத்துக்காளை


இரா.நாறும்பூநாதன்


முத்துக்காளைக்கு புத்தம்புது ரூபாய் நோட்டுன்னா உசுரு. புது ரூபாய் தாள்களைப் பார்த்தவுடன் அவன் கண்கள் அகலமாய் விரிவதைப்பார்க்க வேண்டுமே !

அடேங்கப்பா..


புது ரூபாய்க் கட்டுகளை வாங்கி வைப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி அவனுக்கு. இதுக்காகவே என்னிடம் சிநேகம் வச்சுக்கிட்டான்னா பார்த்துக்கங்களேன்.


” அண்ணாச்சி..எங்க போனாலும், சலவைத்தாளு நோட்டை சரட் சரட் டென எண்ணிக்கொடுத்தால் நமக்கு ஒரு தனீ மரியாத தான். ஒங்களுக்கு ஏன் இதெல்லாம் தெரிய மாட்டேங்குது ? சட்டைப்பையில எப்பமும் பழைய நோட்டால்ல வச்சுருக்கீக ?”
முத்துக்காளை என்னிடம் கேட்டான்.


அவன் உள்ளூர் தீப்பெட்டி கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறான்.
சம்பளத்தன்னைக்கு மதியம் எனது வங்கிக்கு வந்து விடுவான்.


” அண்ணாச்சி..ரெண்டுல ஒன்னு, அஞ்சுல ஒன்னு..” என்று சொல்லி ஏழு நூறு ரூபாய் தாள்களை நீட்டுவான்.

” பத்துல ஒரு கட்டு வேண்டாமா ” என்பேன்.

” முதலாளி..எனக்கு இன்னும் அந்த அளவுக்கு சம்பளம் வரலெல்லா ..”
என்று சிரிப்பான். இதெல்லாம் எண்பதுகளின் மத்தியில்.

” அப்படி ஒரு காலம் வராமலா போகும். பத்து ரூபாய் கட்டு என்ன..ஒரு தரமாச்சும் அம்பது ரூபாய்க்கட்டு புதுசு வாங்கி, ஒவ்வொரு தாளாய் செலவழிக்கும் காலம் வரத்தான் போகுது, பாருங்களேன் அண்ணாச்சி..”

முத்துக்காளை அப்படி சொல்லும்போது, அவன் கண்கள் மினுங்கும்.

முத்துக்காளைக்கு அண்ணன் ஒருத்தன் உண்டு. சரவணைமுத்துப்பெருமாள். அவனும் புது நோட்டுப்பைத்தியம் தான். ஆனால், புது ரூபாய் நோட்டுக்கட்டுகளை வாங்கி செலவழிக்கவே மாட்டான். பீரோலுக்குள் அடுக்கி வைத்திருப்பானாம். அப்பப்ப எடுத்துப்பார்த்துக்கொள்வானாம். ஒரு ரூபாய்க்கட்டு, ரெண்டு ரூபாய்க்கட்டு..ஐந்து ரூபாய்க்கட்டு..

ஒரே மாதிரி எண்கள் கொண்ட ரூபாய்த்தாளை சேமிப்பதிலும் அவன் கோட்டி தான்.
999999 என்று ஒரே மாதிரி ஆறு எண்கள்..

123456  என்று அடுத்தடுத்து வரும் எண்கள்..

987654  என இறங்குமுக வரிசை எண்கள்..

ரிசர்வ் வங்கியில் இருந்து புது ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்கு வந்து இறங்குவது, எங்க மேனேஜருக்குக்கூட தெரிந்திருக்காது. ஆனால், முத்துக்காளைக்கு எப்படியோ தெரிந்து விடும்.

பரபரப்பாய் ஓடி வருவான்.

” அண்ணாச்சி..ஒரே மானிக்கு வர்ற நம்பர் இருக்குற தாள் எல்லாம் எப்படியாச்சும் வேணும் பார்த்துக்கங்க..”

ஆபீஸ் பணத்தை கையாளும்போது, புது ரூபாய் நோட்டிற்கு பறக்க மாட்டான்.
பணத்தை வாங்கிக்கொடுத்தால், ரூபாய் நோட்டில் எழுதியிருக்கும் வாசகங்களை ரசிக்கும் கலைஞனும் கூட.

” ஐ போட்டு ஒரு ஆர்ட்டினும் போட்டு you போட்டு, கீழே கீதா ன்னு எழுதியிருக்கா ஒரு பொண்ணு. அடடா..யாருக்கு கொடுத்தான்னே தெரியல ” என்பான்.


” கவிதை ல்லாம் கூட இதுல எழுதலாமா அண்ணாச்சி..பல பயலுவ ரோமியோ வுக்கு எழுதின மாதிரில்லாம் எழுதியிருக்காங்க..”என்று சொல்வான் முத்துக்காளை.

ரோமியோவை பெண் பாத்திரம் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறான்.

முத்துக்காளை டவுண் பஸ்ல போகுறப்ப, பக்கத்துக்கு சீட் ஆசாமிகள் பார்க்கும்படி, பர்சில் இருந்து புது ரெண்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்து கண்டக்டரிடம் நீட்டுவான். ஒரு அம்பது ரூபாய்க்கு ரெண்டு ரூபாய் தாளு கிடைக்குமா என்று அவர் கேட்டவுடன், இவர் தாராளபிரபுவாய் மாறி விடுவார்.

” அண்ணாச்சி ..கூட்ட நேரத்தில அவர் தன்னோட சீட்டை எனக்கு உட்கார தந்து விடுவாரு..” என்று பெருமை பீத்திக்கிடுவான்.

சில இளம்பெண்கள் பார்க்கும்படி, புது தாள்களை கொடுப்பதும் உண்டு.

” எனக்கு பத்து ரூபாய்க்கு அஞ்சு தாள் கொடுங்களேன் “
என்று அவர்கள் புன்சிரிப்புடன் கேட்டால்,

” உங்களுக்கு இல்லாமலா..எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்கோங்க “
என்று உற்சாகமாய் ரூபாய் நோட்டின்  நடுவில் இருக்கும் பின்னை எடுத்து விட்டு, எடுத்துக்கொடுப்பான்.

ஒருமுறை, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண், இவனிடம் ” எனக்கு புது அஞ்சு ரூபாய்க்கட்டு ஒன்னு வாங்கித்தாங்களேன் ” என்று கேட்டபோது, இவன் ” நோ ப்ராபளம் மேடம்..ஸ்டேட் பேங்க்கே நம்ம கையில தான்..”  என்று சொன்னானாம்.

பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த வீரசிவம் தான் என்னிடம் வந்து சொன்னான்.

” உன்பேரை கெடுத்துகுட்டிச்சுவராக்கி விடுவான்டே..பார்த்துக்க “
என்று அவன் ரொம்ப அக்கறையாய் சொன்னது மனதில் நிற்கிறது.

மாதத்தின் நடுவே இப்படி அஞ்சு ரூபாய்க்கட்டு கேட்க மாட்டானே, என்று நினைத்தபோது தான் மேற்படி சமாச்சாரம் காதில் விழுந்தது.

ஒருநாள் சாவகாசமாய் இருக்கும்போது முத்துக்காளை கேட்டான்.

“நீங்க ஏன் புது நோட்டை யூஸ் பண்ணவே மாட்டேங்கியோ ..புது நோட்டை தினமும் பார்த்து பார்த்து சலிச்சுப்போச்சோ”

” முத்துக்காளை..புது நோட்டை செலவழிச்சா, ஒவ்வொரு தடவ எண்ணி எடுக்கும்போதும், மீதி எவ்வளவு இருக்குன்னு எங்க கண்ணு நம்பர்ல தாம் போகும். ரெண்டு ரூபாய் கட்டுல, ஆறு இலக்க நம்பர்ல கடைசி இரண்டு எண்கள் 71 என்று காட்டுனா, மீதம் அறுபது ரூபாய் இருக்கு ன்னு தெரியும். பணத்தை தாராளமாய் செலவழிக்க தோணாது.. பழைய நோட்டுன்னா, இந்த பிரச்னை இல்லை பார்த்தீங்களா..” என்பேன்.

” ஆஹா..இப்படி ஒரு விஷயம் இருக்கோ..நாங்க அதெல்லாம் பார்க்கவே மாட்டோம் அண்ணாச்சி..நாலு பேரு பார்க்க, பந்தாவா செலவு பண்ணனும்..தேதி இருபத்தைஞ்சு ஆனா, உங்கள மாதிரி வள்ளல் ட்ட( இதை கொஞ்சமும் சிரிக்காமல் சொல்வான் ) நூறு, எரநூறு வாங்கிட்டு பொறவு கொடுக்குறது தான்..” என்பான்.

காலங்கள் ஓடுகின்றன..

இப்போது முத்துக்காளைக்கு தலைமுடியெல்லாம் நரைத்து விட்டன.
எனக்கு முடியே போய்விட்டது.

முத்துக்காளை அதே பரபரப்பில் வந்தான் ” அண்ணாச்சி..அஞ்சு நூறு ரூபாய்க்கட்டு வேணும். எங்க ஆபிசர் ஒருத்தரோட பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். தாம்பாளத்துல வச்சுக்கொடுக்க புதுசா, கண்ணுல ஒத்திக்கற மாதிரி அஞ்சு புதுக்கட்டு வேணும்னே..ஒரே ஐநூறு ரூபாய்க்கட்டு வேணாம். தாம்பாளம் நெறஞ்சிருக்கணும்னா அஞ்சு நூறு ரூபாய்க்கட்டு தான் சரியா இருக்கும்..”

அவன் கேட்கும்போது, எனது கேபினில், நான் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை எண்ணிக்கொண்டிருந்தேன். எனது காலடியில் இருந்த பெட்டிக்குள் ஆயிரம் ரூபாய் கட்டுக்கள் பல இருந்தன. எல்லாவற்றையும் எண்ணி பண்டல் போட வேண்டும்.

முத்துக்காளை கேட்டான் : ” இவ்வளவு நோட்டு கெடக்குதே..சபலமே வராதா..பயப்படாம இப்படி சீதேவியை காலடிப் பக்கம் போட்டுருக்கீகளே..பெட்டியை எடுத்து மேசையில வைக்கப்படாதா..”

நான் அமைதியாய் சிரித்தேன்.

என்னைக்காவது இந்தப்பெரிய நோட்டுல ஒரு புதுக்கட்டு வாங்கி , இஷடம்போல செலவழிக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. அதுக்கு இன்னும் ஒரு மாமாங்கம் ஆகும் போல ..ம்ம்..சரி. பாப்போம்  ..”

முத்துக்காளை ஆயிரம் ரூபாய் கட்டுகளைப்பார்த்து பெருமூச்சு விட்டபடி கூறினான்.