திருக்குறள் சிந்தனை 11

அழகியசிங்கர்

திருக்குறள் பற்றி ஏகப்பட்ட உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.  கையடக்க அளவில் எல்லோரிடமும் திருக்குறள் எளிதாகக் கிடைத்துவிடுகிறது.  எல்லார் வீட்டிலும் திருக்குறள் புத்தகம் இல்லாமல் இருக்காது.  பலரும் அவரவர்களுக்குப் பிடித்த மாதிரியான குறள்கள் அவரவர் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்து கிறார்கள்.   திருக்குறளை உதாரணம் காட்டிப் பேசும் அரசியல்வாதிகளும் உண்டு.  நான் எங்காவது பேசினால் திருக்குறளை உதாரணம் காட்டிப் பேச மாட்டேன்.  ஆனால் ஒரு குறளை மாத்திரம் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். உண்மையில் நான் இங்கு தினமும் ஒரு குரலை எடுத்துப் படிப்பதென்பது, திருக்குறள் மூலம் பயணம் செய்ய விரும்புகிறேன்.  அதை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  அவ்வளவுதான்.

            வான் சிறப்பு என்ற பெயரில் பத்து குறள்களை எழுதியிருக்கிறார்.  10 குறள்கள் மூலம் திருவள்ளுவர் எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

வான் நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று.

‘வான் நின்று உலகம் வழங்கி வருதலால்’ என்கிறார் திருவள்ளுவர்.  எது வான் நின்று உலகம் வழங்கி வருகிறது?  மழை. அமிழ்தம்போல் இந்த உலகத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ மழை அவசியம்.  மழை என்ற வார்த்தையை நேரிடையாகப் பயன்படுத்தாமல் வள்ளுவர் சிறப்பாக இதைச் சொல்கிறார்.