பையொன்று கண்டேன்

இராய செல்லப்பா

ஆதியில் ஒரு பை  இருந்தது. நிறம் மஞ்சள். இரண்டு பக்கமும் எல்ஜி பெருங்காயம் என்ற பெரிய எழுத்தும் ஒரு பெருங்காய டப்பியின் படமும் இருக்கும்.

முதலியார் கடையில் அரைப்படி துவரம் பருப்பு வாங்கி வருவதற்கும், கூட்டுறவு ரேஷன் கடையில் பத்தணாவுக்கு ஒரு பட்டணம் படி ரவை வாங்கி வருவதற்கும் அது சரியாக இருந்தது. கெட்டியான கைப்பிடி.  எண்ணெய்ப் பிசுக்கோ, வாழைப்பூவின் கறையோ இல்லாமல் சுத்தமாக இருந்ததால், சிலசமயம் பள்ளிக்கூடம் போகும்போது மெயின் பையுடன்  அதைத் துணைப் பையாகக் கொண்டுபோவதுண்டு.

 ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்ததது. பள்ளிக்கூடத்தின் நான்கு சுவர்களின் அருகிலும் வெள்ளரி, பாகல், புடல் கொடிகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தார் மைனா டீச்சர். நாற்பது வயது. திருமணமே வேண்டாம் என்று உறுதியாக இருந்தாராம். ஆனால் கருணையும் கனிவும் கொண்டவர். (உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ‘மைனா டீச்சரின் கதை’ பின்னால் ‘குவிகம்’ குறும்-புதினமாக வரக்கூடும்).

அந்த மைனா டீச்சர் அவ்வப்பொழுது மேற்படி காய்கறிகளை பறிப்பார். அவற்றை வீட்டிற்குக் கொண்டுபோக மாட்டார். மற்ற டீச்சர்களுக்கும் தரமாட்டார். அருகிலிருந்த சைவ ஓட்டலுக்கு விற்றுவிடுவார். மாதம் ஒருமுறை அந்தப் பணத்திற்கு ஓட்டலில் இருந்து ஸ்வீட், காரம், காப்பி வரவழைத்து எல்லா டீச்சர்களுக்கும் மட்டுமன்றி, இன்னொரு கட்டிடத்தின் மேல்மாடியில் உட்கார்ந்திருக்கும் கால் முடமான பள்ளித் தாளாளருக்கும் கொடுப்பார். சில சமயம் எங்களுக்கும் கால் மைசூர் பாகு கிடைக்கும்.

அவருக்கு என்னுடைய மஞ்சள் பை மீது ஒரு கண். நாலு வெள்ளரிக்காய், இரண்டு புடலங்காய், ஆறு பாகல்காய் அதற்குள் அடங்கும் என்பதால், அடிக்கடி பள்ளிக்கும் ஓட்டலுக்கு பயணமாகிவிடும் அந்த மஞ்சள் பை. ஆனால் கொஞ்சமும் அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்வார் மைனா டீச்சர்.  

அப்படித்தான் ஒரு மத்தியானப்  பொழுதில் ஓட்டலுக்குப் போய்த்  திரும்பிய

மஞ்சள் பையை எனக்கு முன் வரிசையில் இருந்த பாலகுமார் எடுத்துக் பார்த்துக்கொண்டிருந்தான். மாலையில் நாங்கள் இருவரும் பள்ளியை விட்டு வீடு திரும்பும்பொழுது அவன் வாயில் ஒரு சாக்லேட் இருந்தது. அதைக் ‘காக்காக்கடி’  கடித்துப் பாதியை எனக்கு கொடுத்தான்.

“எங்கம்மாவைக் கேட்டு நானும் ஒரு மஞ்சள் பை கொண்டுவரப்போகிறேன்” என்றான் திடீரென்று.

“எதற்கு’டா?” என்றேன்.

“அப்ப தானே  எனக்கும் சாக்லேட் கிடைக்கும்!” என்றான்.

எனக்கு ஓர் இரகசியம் பிடிபட்டது.  என்னுடைய மஞ்சள் பையைப் பயன்படுத்தியதற்கு வெகுமதியாக அதற்குள்  தினம் ஒரு சாக்லெட்டை வைத்துக் கொடுப்பாராம் மைனா டீச்சர். அதை எனக்குத் தெரியாமல் இவ்வளவு நாளும் ‘லவட்டி’க் கொண்டிருக்கிறான் பாலகுமார்! 

ஒரு பொங்கல் விடுமுறைக்கு மைனா டீச்சர் வெளியூர் போகும்போது தன்னுடைய டிபன் டப்பாவை வைப்பதற்காக என் மஞ்சள் பையை வாங்கிக்கொண்டார். ஆனால் லீவு முடிந்து வந்தபோது அந்தப் பை வரவில்லை.

“சாரிடா செல்வம்!  டிபன் டப்பாவுடன் அந்தப் பையை ரயிலிலேயே மறந்து விட்டுவிட்டேன். உனக்குப் புதிதாக அதே மாதிரி எல்ஜி பெருங்காயப் பை, புத்தம் புதிதாக நாளை வாங்கித் தருகிறேன்.  வீட்டில் சொல்லாதே!” என்று என்னிடம் அன்போடு கூறினார்.

நான் வீட்டில் கூறவில்லை. அவரும் வாங்கித் தரவில்லை. திடீரென்று அவருக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டதால், பள்ளியிலிருந்து நின்றுவிட்டார். அதனால் பாலகுமாரும் தான் சொன்னபடி மஞ்சள் பையைக் கொண்டுவரவில்லை.

பல வருடங்கள் கழித்து, ஒரு பிரபல அரசியல் தலைவர் மீது ஒரு புகார் எழுந்தது. “அவருக்கு எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது? வெறும் மஞ்சள் பையோடு ரயிலேறி வந்தவர் தானே?” என்று எதிர்க்கட்சி பத்திரிகைகளில் விவாதங்கள் எழுந்தன. 

நான் அரசியல்வாதி அல்ல என்பதாலும், அந்த மஞ்சள் பை, மைனா டீச்சரால் ரயிலில் தொலைக்கப்பட்ட என்னுடைய மஞ்சள் பை தானா என்று உறுதியாகத் தெரியாததாலும், அந்த விவாதங்களில் நான் அக்கறை காட்ட முடியவில்லை. 

One Comment on “பையொன்று கண்டேன்”

Comments are closed.