அழியும் கோலங்கள்

வசந்ததீபன் 

கோடுகள் எழுகின்றன

கோடுகளுக்குள் அடைபட்டு அவன்  

கோடுகள் அழிய

காலம் வரும்

உன்னில்  மூழ்கினேன்

உன்னுள்  கரைந்தேன்

நான்  நீயாகினேன்

தலைவனைத்  தேடாதீர்கள்

தோழனைத்  தேடுங்கள்

ஏமாளியாய்  எத்தனை  நாளைக்கு  இருப்பீர்கள்

படகோட்டியே  நீ  யாருக்காக  காத்திருக்கிறாய்?

நிலவும்  வந்து  போய்  விட்டது

சூரியனும்  வந்து  போகப்  போகிறது

ஊஞ்சலில்  காற்று

ஆடிக்  களிக்கிறது

குழந்தைகள்  இல்லாத  வீடு

சிவப்புப்  பூக்கள்  உதிராமல்

பல காலம்  பூத்தபடி  குதூகலிக்கிறது

வெட்டி  எரியுங்கள்  

அந்த  தூக்கு  மரத்தை

பயிரெல்லாம்  கருகிப்  போச்சு

நம்பியிருந்த  பாவி மகன்  தற்கொல  செஞ்சுக்கிட்டான்

மனம்  அடங்கும்  பொழுது

உணர்வுகள்  திமிறுகின்றன

புனைவுகள்  ஊற்றெடுக்கின்றன

சுவற்றில்  ஆபாசப் படங்கள்  சிரிக்கின்றன

அதன்  மீது  ஆயிரம்  தீக் கண்கள்

அவசர அவசரமாக  ஊர்  ஓடுகிறது

ஆடைகளை  சரி  செய்யுங்கள்

கண்கள்  மேயத்  துடிக்கின்றன

குரூரம்  பசித்துத்  திரிகிறது

உயிர் எழுத்துக்கள்  மெய் எழுத்துக்கள்  என

உருப்போட்டாலும்

கனவுகள்  பூஜ்யங்கள்  தான்

உடைந்த  நிலா

வானத்தில்  தொங்கிக் கொண்டிருக்கிறது

கையகப்படுத்த  கண்காணிக்கிறது மேகம் 

ஆலங்கட்டி  மழை  பொழிகிறது

தகர வீடுகளில்  சப்தம்  தாண்டவமாடுகிறது

பசுங்காடுகள்  விழித்திருக்கின்றன

அனல்  உள்ளுள்  ஊடாடுகிறது

இயக்கம்  தொடர்கிறது

வண்டுகளின்  ரீங்காரம்  கோபமூட்டுகிறது

மூங்கில்களின் உரசல் ஒலி எரிச்சலூட்டுகிறது

காட்டு அத்தி  மரத்தின்  கீழ் 

பசியோடு  நான்.