
பால்கனியில் காகம் கிடந்து கரையாய் கரைகிரது
பசிக்கிறதோ என்று சாதம் வைத்தேன்
தள்ளி உட்கார்ந்து மீண்டும் கத்தியது
தண்ணி வேண்டுமோ அதையும் தந்தேன்
தட்டி விட்டு மறுபடியும் சத்தம்
என்னதான் வேண்டுமோ மறுபடியும் எழுந்தேன்
இந்தமுறை கொஞ்சம் வேர்க்கடலை
அதுவும் அதற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை
தள்ளித் தள்ளி கம்பியில் உட்கார்ந்து கொண்டது
கொர் என்று சன்ன சுருதியில் ஏதோ சொன்னது
டப்பா அடியில் இருந்த காராசேவு
கொண்டு போட்டு வேடிக்கை பார்த்தேன்
கிட்ட வந்து மூக்கால் தள்ளிவிட்டு
கமுக்கமாய் ஒரு வெற்றுப் பார்வை பார்த்தது
அம்மா சொல்வாள் காக்கைகள் பித்ரு ரூபமாம்
பசி ஆற்றவில்லையென்றால் கோபித்துக் கொள்ளுமாம்
எந்த பித்ரு இந்த காக்கை என்பதும் புரியவில்லை
எதை தந்து சமாதானப் படுத்துவது
என்றும் தெரியவில்லை
ராத்திரி சாப்பிட்ட பீட்ஸா மிச்சம் இருந்தது
எடுத்துக் கொஞ்சம் போட்டுப் பார்த்தேன்
அத்தனை ஆசையாய் விழுங்கிய காக்கை
இன்னும் போடேன் என்று உள்ளே எட்டிப் பார்த்தது.
இனிமேல் ஜொமோட்டோவில்
காக்கைக்கும் ஒரு பார்சல்
சேர்த்து சொல்லணும் மனதில் சிரித்தேன்.
