கிரிஜா ராகவன்/யாரிடம் சொல்வது?

அது தப்பு என்று தாமரைக்கு நிச்சயம் தெரியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிதான் என்றாலும் இது சரியில்லை என்று புரியும் வயசுதான் அவளுக்கு.ஆனால் அதை யாரிடம் சொல்வது என்று தான் புரியவில்லை.அம்மா சும்மாவே திட்டுவாள்.நாளெல்லாம் செய்யும் வேலையின் களைப்பு அவளுக்கு. அப்பாவிடம் எப்படி இதையெல்லாம் சொல்வது? அக்காவும், சித்தியும் தாமரையைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அவர்களிடம் எப்படி இதைப் பற்றிப் பேச முடியும்.
மாலை வேளையில் தோட்டத்துக் கிளையில் அமர்ந்து அவளிடம் ஏதோ பேசும் மைனாக் குருவி இன்றும் வந்திருந்தது. அதன் முன் நின்று அதையே உற்றுப் பார்க்கும் போது தாமரைக்கு மனதில் தோன்றியது, அங்கும் இங்கும் அனாவசியமாகத் தொடும் கணக்கு வாத்தியாரைப் பற்றிப் பாட்டியிடம் சொல்லி விடலாம் என்று.