
வேண்டுமென்றே தவிர்த்து வந்த அந்தப் பழையப் புத்தகக் கடைக்குப் பல வருடங்களுக்குப் பிறகு வருகிறாள் வெண்ணிலா. புத்தகக் குவியலுக்கிடையில் இருந்த இளைஞனுக்கு இவளைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சுவற்றில் தொங்கும் படத்திலிருக்கும் கிருஷ்ணனுக்கு இவளைத் தெரியும். கிருஷ்ணன் மகனுக்குத் தெரியாது!
நந்தாவை, வெண்ணிலா முதன்முதலாகச் சந்தித்தது இந்தக் கடையில்தான். இருந்த ஒரே புத்தகத்தை இருவரும் கேட்க, கிருஷ்ணனுக்கு தர்மசங்கடமாயிற்று. ஒரு சிட்டிகைப் பொடியை உறிஞ்சியபடி அவர்களைப் பார்த்தார் – அந்தக் கண நேரத்தில், இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கத் தயாரானார்கள். அன்றுமுதல் அவர்கள் சந்திக்கும் இடம் அந்தப் பழைய புத்தகக் கடைதான், கிருஷ்ணன் சாட்சியாக! புத்தகப் பரிமாற்றங்கள் காதலில் முடிந்தன. கல்லூரிக் காலக் காதல், கனவுகளில் மிதந்தது.
நந்தா படிப்பு முடிந்து, மேலை நாட்டுக்கு வேலைக்குப் போனான். போனவன் மிகவும் அந்நியமாகிப் போனான். பின்னர் தகவல்களே இல்லை.
வெண்ணிலா புத்தகக்கடைக்கு வந்து போனாள். கிருஷ்ணன், ‘நந்துவைப் பற்றி எந்த தகவலும் இல்லை’ என்றார். சாட்சிக் கிருஷ்ணன் மறைந்து, அவன் வாரிசு கடையைக் கவனிக்க, வெண்ணிலா வருவது நின்றுபோனது. நீறுபூத்த நெருப்பாய்க் கடந்த கால நினைவுகளுடன், கல்லூரிப் பேராசிரியையாய் இன்று மீண்டும் வந்திருக்கிறாள். படத்திலிருந்து கிருஷ்ணன், ‘நந்தா வருவதில்லையே வெண்ணிலா’ என்பதுபோல இருந்தது.
“இப்ப யாரும் பணிக்கர் புத்தகம் படிக்கறதில்லைம்மா. நீங்கதான் கேக்கறீங்க. சோத்துக்கைப் பக்கம் கடைசி அடுக்குல பாருங்க. இருக்கலாம்” என்றான் கிருஷ்ணனின் மகன்.
தூசிகளைத் தட்டிப் பழைய புத்தகங்களைப் பார்க்கும்போது, இடையே கொஞ்சம் பழுப்பேறிய பக்கங்களுடன் ஒரு புத்தகம் எட்டிப்பார்த்தது.
தான் மிகவும் விரும்பிப் படித்த புத்தகம், ஆன்மீகம் எழுதும் எழுத்தாளர் புனைப் பெயரில் எழுதிய காதல் புத்தகம்!
அந்தப் பிறந்தநாளுக்கு நந்தா அளித்த செண்ட் வாசம் இன்றும் மனதில்! என் பிறந்த நாளுக்கு நான் அளித்த அதே புத்தகம். அவன் அதை இன்னும் வைத்திருப்பானா? வாசித்திருப்பானா? கனன்றுகொண்டிருக்கும் ஆழ்மன நெருப்புக் கொஞ்சம் சீறியது…
அனிச்சையாகப் புத்தகத்தை எடுத்துப் பிறந்தநாள் நினைவுகளுடன் புரட்டினாள்.
ஐந்தாம் பக்கத்தில் – அவர்கள் சந்தித்த தேதி அது – அவளுடைய கையெழுத்தில் “நந்தாவுக்கு என் பிறந்த நாள் பரிசு – வெண்ணிலா”.
கண்களில் நீர் கசிய, உதாசீனப்படுத்தப்பட்ட காதலை – புத்தகத்தை – வெறித்தாள். “நந்தா என் நிலா” என்றது புத்தகத் தலைப்பு!
படத்தில் கிருஷ்ணன் சோகமாய்ச் சிரித்தார். அவர் இருக்கும் வரை அந்தப் புத்தகத்தை மறைத்து வைத்திருந்தார் என்பது அவர் மகனுக்குத் தெரிய வாய்ப்பில்லை!
