கிரிஜா ராகவன்/வெள்ளிக் கொலுசு

“கொஞ்சம் தேடணுங்க.ஆனால் அந்தப் பொஸ்தகம் போன வருஷம் ஒரு அம்மா கொண்டு போட்ட பழைய பொஸ்தகங்களோட வந்துதுங்க.தேடித் தரேன் இருங்க.” நூறு ரூபாயாவது நிச்சயம் கிடைக்கும் என்கிற ஆர்வத்தில் புத்தகக் கடலில் காணாமல் போயிருந்தார் அந்தக் கடைக்காரர்.
“ இருக்கேங்க. கண்டிப்பா வேணும் அந்தப் புஸ்தகம்.”
காத்திருந்தாள் கார் குழலி.
அழகான அந்தப் பெயர் அப்பா சூட்டியது. பிறந்த குழந்தையை அவர் கையில் வாங்கியபோது அடர்ந்து இருந்ததாம் அவளது கருத்த முடி. பார்த்த மாத்திரத்திலேயே “கருங்குழலி! என் செல்லமே”, என்று தான் முத்தமிட்டாராம் அந்த அருமை அப்பா. சொல்லிச் சொல்லிப் பூரிப்பாள் அம்மா .நான்கு ஆம்பிளைப் பிள்ளைங்களுக்குப் பிறகு பிறந்த செல்லப் பெண். வீட்டின் ராணி. டயர் கடையில் கணக்கெழுதும் வேலை அப்பாவுக்கு. அது காசுக்கு. ஆனால் சுவாசிப்பது புத்தகங்களைத்தான். எப்போதும் அப்பாவைச் சுற்றிப் பத்து இருபது புத்தகங்கள் இரைந்திருக்கும்.மாற்றி மாற்றி அவர் படிக்கும் ஆர்வத்தைப் பார்த்தே பூரித்துப் போவாள் அம்மா.
குழந்தையாய் அவள் இவளைத் தாலாட்டும் பாட்டு கூட அப்பாவின் பெருமை பேசும் இட்டுக் கட்டின பாட்டு தான் என்பதைப் புரிந்து கொள்ளும் போது குழலிக்கு பத்து வயசு .
“பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
வாங்கித் தருவாரே கண்ணே உன் அப்பன்
உன்னையும் படிக்க வைப்பாரே”
அம்மா மாதிரியே பாடி அவளைக் கேலி செய்வாள் குழலி.
அப்பா பொன்னால் எழுத்தாணி வாங்கித் தந்தாரோ இல்லையோ,தன்னைப் போலவே மகளையும் புத்தகப் பைத்தியமாக்கி வைத்திருந்தார்.
அப்பாவுக்கு புத்தகங்களைப் படித்துக் காட்டுவது குழலியின் பெரிய பொழுது போக்கு. அதுவும் அப்பா சா. மருதப் பிள்ளையின் தீவிர வாசகர். அவர் எழுதிய பல புத்தகங்களைத் தேடித் தேடி நூலகத்தில் இருந்து எடுத்து வருவாள் குழலி. அதில் அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடைசிப் புத்தகம் “வெள்ளிக் கொலுசு” மட்டும் கிடைக்கவேயில்லை. குழலியின் அப்பாவிற்கு அந்தப் புத்தகத்தைப் படிக்க முடியவில்லையே என்பது பெரும் குறை.
அன்று மதியம் கூட “வெள்ளிக் கொலுசு” புத்தகம் வாங்கி வருவதற்காக நூலகம் செல்வதாகப் பொய் சொல்லி விட்டுத்தான் மாயனைக் கலியாணம் கொள்வதற்காக வீட்டை விட்டு ஓடிப் போனாள் குழலி. அப்பா மட்டுமாக இருந்திருந்தால் கூட கீழ் ஜாதி மாயனை ஒப்புக் கொண்டிருப்பாரோ என்னவோ, விஷயம் தெரிந்தால் நான்கு அண்ணன்மார்கள் சேர்ந்து அவனை வெட்டிப் போட்டு விடுவார்கள் என்று பயந்துதான் யாருக்கும் தெரியாமல் ஓடிப் போய் மாயனைத் திருமணம் செய்து கொண்டாள். உள் நாட்டிலேயே இருக்கப் பயந்து கொண்டு கணவனுடன் சிங்கப்பூர் சென்றவளுக்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் அப்பா மரணப் படுக்கையில் இருக்கும் செய்தி கிடைத்தது.
ஆனது ஆகட்டும் என்று தைரியமாகக் கிளம்பி வந்து விட்டாள். அண்ணன்மார்களுடன் சண்டை போட்டு அப்பா அருகில் சென்ற போது, குழலியின் கையைப் பிடித்துத் ,தலையைக் கோதியவர் கண்கள் முழுதும் கண்ணீர். “வெள்ளிக் கொலுசு, கிடைச்சுதாம்மா”
மெல்லிய குரலில் கேட்டவரைப் பார்த்து உடைந்து போனவள் இதோ நிற்கிறாள் பழைய பேப்பர் கடையின் முன்னே,
எப்படியும் அப்பாவின் மூச்சு நிற்பதற்குள் அவருக்கு “வெள்ளிக் கொலுசு” புத்தகத்தைப் படித்துக் காட்டுவதுதான் தான் செய்யும் பிராயச்சித்தம் என்று நம்பி !!!