ரேவதி பாலு/இதுதான் ஆரம்பம்

அந்த பள்ளியின் செமினார் ஹாலில் பிளஸ் டூ எழுதிய மாணவர்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். அன்று பிரபலமான ஆட்டோ மொபைல் கம்பெனியின் சிஇஓ, தொழிலதிபர் சுரேஷ் அவர்கள் முன் உரையாற்ற போகிறார்.

பிளஸ் டூ முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் தற்கொலைகள் நிகழ்வது சர்வ சாதாரணமாக விட்ட நிலையில் மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தவும் எதிர்காலத்தைப் பற்றிய அவர்களுடைய கனவுகளை நம்பிக்கைகளை வளர்க்கவும் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த செமினார் அது.

அன்றாட வாழ்க்கையை ஓட்டவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஏழை குடும்பத்தின் ஏழாவது மகனாக பிறந்து அரசு பள்ளியில் படித்து வாழ்வில் இவ்வளவு உயரத்தை தொட்டிருக்கும் அவர் என்ன கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

மேடையில் சுவர் பகுதியில் ஒரே ஒரு ஓவியம் மாட்ட பட்டிருந்தது.
தாளாளர் மற்றும் அதிகாரிகள் தொடர சுரேஷ் மேடை ஏறினார் .ஒரே ஆரவாரம்.
எல்லோரையும் புன்னகையோடு ஏறிட்ட சுரேஷ் ,” இங்கே மாட்டி இருக்கும் ஓவியத்தை பார்த்தீங்க இல்ல? இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” அப்படின்னு கேட்டார். இப்பொழுது மாணவர்கள் ஓவியத்தை உற்றுப் பார்த்தனர் .

ஒரு சிறுவன் தலைமுடி காற்றில் அலைபாய, ஒரு பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் அடித்துக் கொண்டு சைக்கிள் ஓட்ட முயலும் ஓவியம் அது.

“நாம எல்லோரும் இப்படித்தானே சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டிருப்போம்?
எத்தனை தடவை கீழே விழுந்துருப்போம்? முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்கும். வீட்டில் அம்மாவிடம் எவ்வளவு திட்டு வாங்கி இருப்போம். எதையாவது பொருட்படுத்திருப்போமா?
அடுத்த நாள் இன்னும் சீக்கிரம் மைதானத்திற்கு போய் சைக்கிள் ஓட்டுவதில் மும்முரமாக முனைந்திருப்போமே.
நன்றாக ஓட்ட வந்தவுடன் எப்படி காற்றில் பறப்பதுபோல் வேகமாக ஓட்டுவோம்? ரெண்டு கைகளை விட்டு விட்டு ஓட்டுவோம்? என்னவெல்லாம் சர்க்கஸ் பண்ணி பார்த்திருப்போம்?
தனக்கு சைக்கிள் சரியாக ஓட்ட வரவில்லை என்று சைக்கிள் ஓட்டுவதை கைவிட்டு விட்டதாக எந்த சிறுவனாக சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
வாழ்க்கையின் ஆரம்பமே ,அடிநாதமே அதுதான்.

அதே போல தான் படிப்பும். நாம் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டதை போல் தீவிரமாக முயன்றால் நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. தேர்வில் தோல்வியுறுவது நாம் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது கீழே விழுவது போல தான். மேலே பட்ட தூசியை தட்டி விட்டுக்கொண்டு எழுந்து
உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு போதும் அதை செய்ய தயங்காதீர்கள் .
பிறகு சைக்கிளில் காற்றில் பறப்பது போல் ஓட்டுவது போல வாழ்விலும் உயரங்களை தொட உங்கள் எல்லோராலும் முடியும்.”

சுரேஷ் பேசி முடித்தவுடன் மாணவர்களின் கைத்தட்டல் ஒலி அந்த அரங்கையே நிறைத்தது.

தான் சொன்ன விஷயம் நிச்சயமாக மாணவர்களின் மனதில் பதிந்து ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட திருப்தியுடன் மேடையை விட்டு இறங்கினார் சுரேஷ்