
அவள் தேடி வந்த புத்தகத்தை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. கௌதமன்தான் அந்தக் கடையை அறிமுகப்படுத்தினான். கௌதமனுடன் பழகியது எத்தனை உற்சாகக் காலமாக இருந்தது.
இந்த ஜோல்னாப் பையைக்கூட அவன்தான் அறிமுகப் படுத்தினான்.
அவள் பிஎச்டி படிக்க எடுத்துக்கொண்ட தீம் தமிழ்ச் சிறுபத்திரிகைகள். இதுமாதிரியான பழையப் புத்தகக் கடைகளில்தான் அவள் சிறுபத்தரிகைகளைத் தேடிக் கொண்டிருப்பாள். எல்லா இடங்களுக்கும் அவனுடன் டூ வீலருடன் சுற்றிக் கொண்டிருப்பாள். அவன் வண்டியை வேகமாக ஓட்டுவதைப் பார்க்கும்போது அவளுக்குப் பயமாக இருக்கும். அவள் கத்துவாள்: உனக்கு அறிவிருக்குதா என்று.
அவனை விரும்பி அவனை ஏற்றுக் கொண்டாள். அதன் விளைவு விபரீதமாக இருந்தது.
அவள் அப்பாவும் அவளும்தான் அவர்கள் வீட்டில். அவள் அப்பா தடுக்க மாட்டார். பல முறை கௌதமன் அவள் வீட்டிற்கு வந்திருக்கிறான். மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பான். வீட்டுக்குப் போவென்று அவனைப் பிடித்துத் தள்ள வேண்டும்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவளுடைய பிரியட் தள்ளிப்போய் விட்டது. அவனிடம் இதைச் சொன்னபோது அட்டக்காசமாக சிரித்தான். அவசரம் அவசரமாக அவர்கள் திருமணம் செய்துகொள்ள நினைத்தார்கள். அந்தச் சமயத்தில்தான் அந்த விபரீதம் நடந்தது. நந்தனம் பசும்பொன் முத்துராமன் சிலை அருகில் அவன் விபத்தில் இறந்து விட்டான். அவனுடைய வேகமே அவனுக்கு எமனாக போய் விட்டது.
அவன் நினைவாக அவள் மாதக் கணக்கில் இருந்தாள். ஒரு தனியார் மருத்துவ மனைக்குப் போய் கருவை கலைத்தாள்.
இப்போதெல்லாம் அவள் நடைப்பிணமாக மாறி விட்டாள். ஒவ்வொரு தருணத்திலும் அவன் நினைவுதான் அவளுக்கு. இந்தப் பழையப் புத்தகக் கடையில் கூட அவனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறாள். புத்தகங்களைத் தேடவில்லை.
