தங்கேஸ்/கடலும் மீனும் வேறு வேறல்ல

கரையாத கடலின் திடமே மீன்

சுவடிகளும் செதில்களும்
வேறு வேறல்ல
எழுதாத இரகசியங்களின்
நீர்ச்சுவடியே
செதில்கள்

அன்பும் வெறுப்பும்
வேறு வேறல்ல
பரிமாறப்படாத நேசத்தின்
உறை திடமே வெறுப்பு

காதலும் சாதலும்
வேறு வேறல்ல
மறுதலிக்கப்பட்ட இதயங்களின்
கடைசி புகலிடங்களே
சாதல்

கடவுளும் சாத்தானும்
வேறு வேறல்ல
மனிதனை மன்னிக்காத
ஆதி கடவுள்களே சாத்தான்கள்

நீயும் நானும் வேறு வேறல்ல
கண்ணாடியில் தெரியும்
என் முகத்தை
வேறு பிம்பம் என்று நினைத்து
விலகி செல்பவனே
நீ