புவனா சந்திரசேகரன்/அம்மாவின் வாசம்

அம்மாவைக் கொண்டு போய்
ஊரோடும் உறவோடும்
தாரை தப்பட்டை சங்கொலியோடும்
சிதை மூட்டி விடை கொடுத்து
வழியனுப்பி விட்டு வந்தாலும்
இல்லையென்றால்
முதியோர் இல்லத்தில்
அனாதை போலத் தனியாகத்
தள்ளி விட்டு வந்தாலும்
அம்மாவின் வாசம் மட்டும்
வீடு முழுவதும்
மூலை முடுக்கெல்லாம்
வியாபித்தே நிற்கிறது!
சமையலறை மேடையில்
கசங்கிய கைபிடித் துணியிலும்
நசுங்கிய பழைய பாத்திரங்களிலும்
ஊறுகாய் ஜாடிகளிலும்
அலமாரியில் அடுக்கிய
துணிகளின் நடுவிலும்
துளசி மாடத்தில் படிந்த
எண்ணெய்க் கறையிலும்
தோட்டத்தில் சிரிக்கும்
கறிவேப்பிலை இலைகளிலும்
பூஜையறையில் எரியும்
குத்துவிளக்கின் சுடரிலும்
அம்மாவின் வாசம் மட்டும்
வீட்டில் சுற்றிச் சுற்றி வருகிறது!
தினம் தினம் புதுப்புது இடங்களில்!

அன்னையர் தின வாழ்த்துகள்!

2 Comments on “புவனா சந்திரசேகரன்/அம்மாவின் வாசம்”

  1. அம்மா கை மணம் எல்லாவற்றிலும் அவள் மனம் போல் நிறைந்து இருக்கிறது என்பது மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
    மிக அருமை.

Comments are closed.