ப.மதியழகன்/தேவதை

தாய் கடவுளின் அம்சம்
ஒவ்வொருவரும் அவளது
அன்புக்கடலில் நீந்தித்தான்
வந்திருக்கிறோம்
ஒவ்வொரு தாயும்
தன் குழந்தை முதன்முதலில்
அம்மாவென அழைக்கும்போது
தலைகோதி உச்சி முகர்ந்து
நெற்றியில் முத்தமிடுகிறாள்
தத்தித் தத்தி நடக்கப்
பழகும்போது
விரல் பிடித்துக் கொள்கிறாள்
ஒவ்வொரு உறவுகளையும்
அறிமுகப்படுத்துவது அவள்தான்
பெற்றெடுத்தபின்
அவளுடைய உலகமே
அக்குழந்தையாகிவிடுகிறது
உறக்கம் வராமல்
படுக்கையில் புரண்டுபடுக்கும் போதெல்லாம்
அவள் அன்று பாடிய
தாலாட்டே என்னைத்
தூங்க வைக்கிறது
அவளால் மட்டுமே முடியும்
கரியடைந்த அடுக்களையிலிருந்து
தேவதையாக வெளிவர
வீட்டைச் சுத்தம் செய்தபோது
பழைய டிரங்க் பெட்டியில்
கண்ணில்பட்ட புடவையிலிருந்து
அம்மாவின் வாசனை,
தொட்டணைத்துக் கொண்டபோது
அம்மாவின் கதகதப்பு
அம்மா நீ விட்டுவிட்டுச்
சென்றபோதுதான்
அம்மா வடிவம் தாங்கி
தெய்வம் என் வீட்டில்
வாழ்ந்துவிட்டுப் போனதை
அறிந்தேன்
அம்மா என்பது வெறும் வார்த்தையல்ல
உயிர்களனைத்திலும் ஊடுருவிப்
பாயும் ஏதோவொன்று!

ப.மதியழகன்

One Comment on “ப.மதியழகன்/தேவதை”

Comments are closed.