கிரிஜா ராகவன்/அம்மாவின் நினைவாக அகிலத்தின்அன்னைக்கு ஒரு பாட்டு

தேவியே என் அன்னையே உன்
அழகைப் பார்த்து பரவசம் அடைந்தேனே !
உச்சி முதல் பாதம் வரை வசீகரிக்கும் எழில்
அத்தனையும் என்னை ஆசி கூறும் பொழில்

சிரசில் ஜொலிக்கும் தங்க மகுடம்
நிமிர்ந்து வாழ ஆணையிடும்
விசால நெற்றியில் குங்குமம் உணர்த்தும்
வெற்றி தான் உனக்கு என்றும் என்று

கருணை பொங்கும் கண்கள் சொரியும்
கணக்கில்லா ஆறுதல் மழை
வைரம் மின்னும் மூக்கு உணரும்
வாடிய என் தோற்றம்

பவளம் ஒத்த இதழ்கள் சொல்லும்
என்னை உந்தன் பிள்ளை என்று
கமலம் போன்ற காதுகள் என்
சோகம் கேட்டு அருளும்

அருளுகின்ற கரம் கொடுக்கும்
அச்சமற்ற வாழ்க்கை
கொலுசணிந்த குளிர்ந்த கால்கள்
பணியச் சொல்லி ஆணையிடும்

இமைக்க மறந்து பார்க்கும் கண்கள்
எத்தனையோ வேண்டும்
சத்தமிடும் பேதை மனம்
தத்தளித்து அலையும்

கம்பீரத் தோற்றம் என்னுள்
கணக்கில்லா உறுதி சேர்க்கும்
அம்பிகை அருள் இருக்க
கலக்கம் எல்லாம் மறையும்

என்னை பெற்ற அன்னை இன்று
என்னிடத்தில் இல்லை
அகிலத்திற்கும் அன்னையே என்னை
அணைத்து ஆறுதல் தருவாயே