விஜயலக்ஷ்மி கண்ணன்/மனதில் மரியாதை

அந்த ஊரு சிறியது தான்.
கிராமம் என்றும் சொல்ல முடியாது, டவுன் என்றும் சொல்ல முடியாத
இரண்டுங்கெட்டான் சிறு ஊரு. ஒரு கீழத் தெரு.
அங்கு தான் சில நகை கடை வைத்துள்ள முதலாளிகள்,
சில ஜவுளி கடைகள்,இரண்டு உள்ளூர் முக்கியஸ்தர்கள்
வைத்துள்ள பாத்திரக் கடைகள் உள்ளன.
அதனால் பட்டூர் (அது தான் அந்த ஊரின் பெயர்)வரும்
பேரூந்துகள் எல்லாம் நிற்கும் பெரியத் தெரு அதுவே.
இரண்டே பஸ் ரூட் தான்,இரண்டு மணி நேரத்திற்கு என்று யானை வருவது போல்
அசைந்த வண்ணம் வந்து,பத்து நிமிடம் களைப்பு போக அடுத்திருக்கும் நாயர் கடை
கட்டன் சாயா ஒன்றும் பொறையும் உண்டு, ஒரு தம் அடித்து மீண்டும் புறப்படும்
பஸ் காண வேண்டிய காட்சி.
பஸ் வந்து நின்று புறப்படும் இடம் ஒரு அரச மரத்தடி.
மிகவும் பழமையான அரச மரம் அது. அதன் அடி பாகத்தை சுற்றி
மேடை ஓன்று கட்டி பயணிகளுக்கு உட்கார வசதி செய்யப் பட்டிருந்தது.
அடுத்த ஊருக்கும் அதற்கும் அடுத்ததாக இரண்டு ஊர்கள் வரை போகும்
பயணிகள் இங்கே காணலாம்.
நல்ல நிழல் கொடுக்கும் மரங்கள் தேடி அலைய வேண்டிய காலமிதில்
இப்படியொரு வானுயர வளர்ந்து நிழல் கொடுக்கும் அருமை அரச மரம்
இது போன்ற ஓரம்கட்டிய ஊர்களில் தான் காண முடிகிறது.
கேசவன் காலை பத்து மணி பஸ்சைப் பிடித்து அடுத்த ஊரில்
வசிக்கும் மகளை பார்க்க உத்தேசித்து மரத்தடியில் காத்திருந்தார்.
ஒரு பஸ் வருவதைக் கண்டு வேட்டியை ஒரு பக்கம் ஏற்றிப் பிடித்து எழுந்து நின்றார்.
பஸ் வந்தது,ஆனால் ஆய்வுக்காக என்ற பலகையோடு வந்து நின்றது.
கேசவன் சோர்ந்து விட்டார். நல்ல காலை வெய்யில் .
ஒரு இலை கூட அசையவில்லை.
கேசவன் மனைவி நேற்று போய் மகளை பார்த்து வாய்க்கு ருசியா இனிப்பு ,
பணியாரம் ஆகியவை கொடுத்து விட்டு வந்தவள் இன்று ஞாயிறு,
மாப்பிள்ளையும் இருப்பார் என்பதனால் கணவரை பழம் பூ
வாங்கிக் கொண்டு போக சொன்னாள்.
மாப்பிள்ளையிடமும் ,சம்மந்தி அவர்களிடமும் கேட்டு
ஒரு நல்ல நாள் பார்த்து மகளை வீட்டுக்கு அழைத்து வந்து
ஒரு வாரமாவது வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தார்கள்
கமலாவின் பெற்றோர்கள்.
பஸ் நின்ற இடத்தை ஒட்டி ஒரு கார் வந்து நின்றது. காரின் கண்ணாடி கதவைத் திறந்து,
“ஐயா, கேசவன் சார் ,தமிழ் வாத்தியார் தானே, நல்லா இருக்கீங்களா?
வாங்க ஏறிக்குங்க.
நான் உங்கள் மாணவன் மாணிக்கம்.
எங்கே போக வேண்டும்?”
கேசவனுக்கு ஒரே ஆச்சர்யம். “தம்பி மாணிக்கம். இத்தனை ஆண்டுகள்
சென்றும் நினைவில் வைத்து இருக்கிறாயே.
மிக்க மகிழ்ச்சி அப்பா. நீ எங்கே போகிறாய்?”
“நீங்க வாங்க ஐயா, நான் அடுத்த ஊருக்குத் தான் போகிறேன்.”
“அப்படியா?
நான் கூட ஊஞ்சல் பட்டி தான் போக பஸ்சுக்காக காத்திருந்தேன்.
என் மகள் கமலாவை அந்த ஊர் தாசில்தார் மகனுக்கு கட்டிக் குடுத்திருக்கு.”
மாணிக்கம் துபாயில் ஒரு இந்திய ஹோட்டலின் ஜெனரல் மேனேஜர் பதவியில் இருக்கிறான்.
ஒரு மாத லீவில் வந்திருப்பதாகவும்.சொன்னான்.
கேசவன் மிகவும் பெருமைப் பட்டுக் கொண்டார்.
தன்னிடம் படித்த மாணவன் நல்ல நிலையில் இருப்பது அறிந்து
ஆசானுக்கே உள்ள பெருமிதம்.
பேசிக்கொண்டே ஊர் வந்து சேர்ந்தார்கள்.