அயலக மொழிகளில் மலையேற்றம் குறித்த ஆக்கங்கள் இருக்கலாம். அபுனைவுகள் அதிகமாகவே எழுதவும் பட்டிருக்கும். ஏனெனில் அங்கு மலையேறும் தனித்தனிக் குழுக்கள் செயல்படுகின்றன. அதற்குரிய பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகின்றன. இங்கும் அது போல சில குழுக்கள் உள்ளன என்றாலும் அது பற்றி அதிகமான செய்திகள் இல்லை. வருடத்திற்கு சில தடவைகள் காடுகளுக்குள் ட்ரக்கிங் செல்கிறார்கள். அதற்கு நபருக்கு இவ்வளவு என வசூலித்தும் விடுகிறார்கள். தங்குமிடம் உணவுக்கும் ஏற்பாடு உள்ளது. கொரங்கினி தீ விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட பின் அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளதால் அக்குழுக்கள் முன்பு போல இல்லை.
தமிழில் மலையேற்றம் பற்றின கதைகள் அநேகமாக இல்லை என்றே தோன்றுகிறது. நானறிந்த வரையில் மிகச்சிறிய அளவில் சுந்தர ராமசாமியின் ‘களிப்பு’ கதையில் அந்த மனநிலை இடம்பெற்றிருக்கிறது என நினைக்கிறேன். அது மலை கூட அல்ல. சிறு குன்று. அக்கதை நடப்பது இங்கு இல்லை, அமெரிக்காவில்.
கதைசொல்லியின் பேத்திகள் வீட்டிற்குள்ளேயே சுற்றி வருவதால் அவர்களை வெளியே அழைத்து செல்ல ஒரு திட்டம் தயாராகிறது. அவரது மகள் புராதானக் கிணறு உள்ள பகுதியை தேர்ந்தெடுக்கிறார். அங்கு சென்று சேர்ந்ததுமே கதைசொல்லி அவருக்குள்ள மனச்சோர்வு காரணமாக அவர்களுடன் கலந்து கொள்ளாமல் தனியே அமர்ந்து விடுகிறார். அவரை நன்கறிந்த கதைசொல்லியின் மனைவி கமலா அவரை தனியே இருக்கவிட்டு அவர்களை அழைத்துச் செல்கிறார். அப்போது வந்து நிற்கும் ஒரு பெரிய வண்டியிலிருந்து பழுத்த வயோதிகர்கள் கீழிறங்குகிறார்கள். அவர்களுக்கு சிறு குன்றின் மேல் ஓவியப் பரிட்சை நடக்கவிருக்கிறது. கதைசொல்லியை சுற்றிலும் அமர்கிறார்கள். அவர்களுக்குள் கிண்டலும் கேலியுமான உரையாடல்கள் நிகழ்கின்றன. எதிலுமே பங்கேற்காத கதைசொல்லி ஒரு பார்வையாளனாகவே உடனிருக்கிறார். அவர்கள் குன்றின் மேலேறும் போது இவரும் உடன் செல்கிறார். அங்கும் தங்கள் உடல்வலி, மூட்டுவலி, வாழ்க்கையின் சலிப்பு பற்றி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஹாஸ்யமாக பேசி அந்த சோர்விலிருந்து வெளியேற முயல்கிறார்கள். அவர்களை கவனித்துக் கொண்டே இருக்கும் கதைசொல்லிக்கு அந்த கடும் மனச்சோர்வு எங்கு போயிற்று என்றே தெரியவில்லை என்பதை வாசகர் உணரும்படிக்கு கதை முடிகிறது.
மிக நேரடியாக கூறப்பட்ட கதை. ஒரு புதிய சூழல் , பயணம், அறிமுகமேயற்ற வெவ்வேறு பின்னணிகளில் வளர்ந்த மனிதர்கள் ஓரிடத்தில் குழுமி தீவிரமான ஒன்றைச் செய்கிற போது அவர்கள் அடையும் ஆசுவாசம், அப்படியொன்றும் நமக்கு ஏதும் நடந்து விடாது என்கிற நம்பிக்கை, அந்த முகங்கள் கொள்கிற மலர்ச்சி, தற்காலிக விடுதலையுணர்வு போன்றவற்றை அடியோட்டமாக உணர்த்திச் செல்லும் கதை. அவர்களது வேடிக்கைப்பேச்சுகள் கதைசொல்லியுடனும் கலந்து அவரது மனநிலையை மீட்கிறது. மனமூட்டம் கலைகிறது .
கதை இரண்டாவது பக்கத்தில் தொடங்குகிறது. மெல்லிய நகைச்சுவை நீரோட்டம் போல கதை முழுக்கப் படர்ந்திருப்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இக்கதையில் கதைசொல்லியின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களது சொந்தப்பெயரிலேயே வருகிறார்கள்.
சு.ரா மறைவதற்கு ஓராண்டு முன் 2004ல் எழுதப்பட்ட கதை. எதிலும் பிரசுரமாகாமல் நேரடியாக ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ தொகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தது. இத்தொகுப்பு பற்றி நான் அவருக்கு மதிப்புரை போல ஒன்றை விரிவாக எழுதி அனுப்பி இருந்தேன். இதை விடவும்உங்களால் நன்றாக எழுத முடியும் என பதில் போட்டிருந்தார். பிறகு கூப்பிட்டு என் அபிப்ராயங்களை கேட்டுக் கொண்டார். அப்படி அவர் அழைத்து பேசியதில் எனக்களித்த முக்கியத்துவத்தை எண்ணி கூச்சமாக இருந்தது. அப்போது இக்கதை பற்றியும் திணறலான குரலில் அவரிடம் சில வரிகள் பேசியது நினைவுக்கு வருகிறது.
