(வளவ துரையன் குறிப்பிட்டது)
சுழியா வருபுனல் இழியாதொழிவது”….!
விளக்கம்:
சுழியா= சுழித்துக் கொண்டு
வரு புனல் = ஓடும் வெள்ளத்தில்
இழியாது = இறங்காது
ஒழிவது = நீங்க வேண்டும்.
தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திம்மப்பனும், ராமப்பனும் அதை வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்.
ஆசை யாரை விட்டது?
ராமப்பன்: ஏய், ஏய் திம்மப்பா! அதோ பார், அதோ பார்; ஒரு பெரிய கம்பளி மூட்டை;அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருள் இருக்கலாம்; நீ போய் எடுத்து வா; பங்கு போட்டுக் கொள்ளலாம்—என்றான்.
திம்மப்பன்:– ஆமாம், அண்ணே! இன்று நாம் நரி முகத்தில் முழித்திருப்போம். நமக்கு இன்று அதிர்ஷ்டம்தான்; இதோ நான் நீந்திப் போய் அதை எடுத்து வருவேன்; 60 சதம் எனக்கு; மூட்டையில் 40 சதம் உனக்கு என்று சொல்லிக் குதித்தான் தண்ணீரில்!
உயிரையும் பொருட்படுத்தாது அந்த கறுப்பு மூட்டையைக் கைப்பற்றினான். ஆனால் அது கம்பளி மூட்டை அல்ல; வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கரடி! அதுவும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததால் திம்மப்பனை இறுகப் பிடித்துக் கொண்டது. திம்மப்பன் பலத்தை எல்லாம் பிரயோகித்து விடுவிக்க முயன்றான்; இயலவில்லை.
கரையில் இருந்த ராமப்பன் கத்தினான் – திம்மப்பா! மூட்டை ரொம்ப கனமாக இருந்தால் விட்டுவிடு; பரவாயில்லை;நீ ஜாக்கிரதையாக வா! என்றான்.
திம்மப்பன் சொன்னான்: நான் விட்டு விட்டேன்; அதுதான் என்னை விட மாட்டேன் என்கிறது!; இது ஒரு கரடி – என்றான்.
ராமப்பன் கரையில் திருதிருவென முழிக்க கரடியும் திம்மப்பனும் நதி வழிப் பயணத்தைத் தொடந்தனர்.
ஆசைக்கு அளவே இல்லை; மேலும் ஆசை கண்களை மறைக்கும்;
ஆசையை ஒரு முறை நாம் பற்றிக் கொண்டால் அது நம்மை விடாது; அது நம்மைப் பற்றிக் கொண்டு அலைக்கழித்துவிடும்!.
