சசிகலா விஸ்வநாதன்/வயது ஒரு பூட்டு



எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பிடிவாதமாக பெண் கேட்டு வந்தவரிடம், என்ன பதில் சொல்வது? “சீர் செனத்தி ஒன்றும் வேண்டாம். நகை நட்டு வேண்டாம். பூஜை அலமாரியில் இருக்கும் வெற்றிலை- பாக்கை மாற்றிக் கொண்டு சந்தோஷமாய் செல்கிறேன். சித்திரை பிறந்து முகூர்த்தம் பார்க்கலாம்”; என்றவரிடம்,பெண் மேலே படிக்கவேண்டும் என்கிறாள்”,என்று இழுத்தார் என்னவர். “ஏண்டா! கல்யாணத்திற்கு பிறகு பேஷாய் படிக்கட்டுமே” என்றார் வந்தவர்.
என்னவரின் உயிர் நண்பர்; காவல் துறைஅதிகாரி.நாங்கள் ஒருவர் முகத்தை இன்னொருவர்
பார்த்துக் கொண்டு கையை பிசைந்து கொண்டிருந்தோம்.
திடுமென என் பெண் உள்ளே நுழைந்தாள். அம்மா! எனக்கு இந்த முறை வாக்கு அளிக்க முடியாது. என் ஆவணங்கள் படி எனக்கு பதினெட்டு வயது முடியவில்லை.. இனி அடுத்த தேர்தலில் தான் நான் வாக்கு அளிக்க இயலும். இதைக்கேட்ட நண்பர்” அடாடா! அப்படியா! சரிடா! எனக்கு,உன் பெண் மருமகளாய் வரக் கொடுத்து வைக்கவில்லை”என்று புன்சிரிப்போடு எழுந்தார்.
“அப்பாடா”! என்று இருந்தது எங்களுக்கும்.