வலியுடன் ஆர்க்கே!/அவனுக்கு அழிவில்லை!

வாழ்வின் சோதனைக்கால
ஆற்றுப் பெருக்கின்
உறவுச் சூழல் பாதையதில்
அறத்தின் பக்கமே
என்றென்றும்
நான்
புழங்குவதாய்
அடி மனத்தில்
இறுதி வரை நம்பியவன்.

சுற்றம்
நட்பு
ஊரார் என
பேர் பேராய்
என்னைப் பற்றி
பொய்ப் பழிக்கும்
புறஞ் சொல்லுக்கும்
கடை விரித்து
மடை திறக்க
என்னைப் பற்றிய
அபவாதங்கள் அனைத்தையும்
ஒற்றை ஆளாய்
நானே அறியாமல்
எதிர்கொண்ட
சமர் உலகச்
சாமுராய் வீரன்.

வீரர்கள்
ஒரு போதும்
தலை வணங்குவதில்லை.
ஆனால்
எனக்கவன்
தலை வணங்குவான்.

வீரியர்கள்
ஒரு போதும்
அடிமையானதில்லை.
ஆனால்
அவன்
என்
காலடியில்
இறுதி வரை கிடந்தவன்.

என் அண்ணனை
எப்படி நீ
அப்படிச் சொல்லப் போச்சு
என
ஒரு
அதிகார மமதை மனிதனையே
அன்று
சட்டையைப் பிடித்து
அறைந்தவன்.

அன்று 1964ன்
தனுஷ்கோடிப் புயலுக்கு
முற்றாய்
தன்
புலன்களொடுங்கி
புயலடங்கிய பின்னர்
எதிர்வீட்டு பாட்டியவளின்
இரக்கமற்ற
நெருப்பு வாட்டுதலில்
பிஞ்சுக்கை கால்
அசைத்து வைத்து
மறுபிறப்பாய்
உயிர்ப்புற்று
கூடவே
அடங்காமல்
அழுது வைத்து

பிழைத்தது இறைவா
என் பிள்ளை என
என்
அம்மாவை
அன்று முதல்
சிரிக்க வைத்தவன்.

இன்று இப்படியா
இந்த 2024ல்
அதிகாலை
சட்டென மயக்கமுற்று
இந்த
அதீத எமன் மாரடைப்பால்
ஆகாயம் நோக்கி
பறந்து வைப்பான்?

சக்திதான்டா நீ!
என் மனோ சக்தியை
ஏன்டா எடுத்துப் போனாய்?
—-

One Comment on “வலியுடன் ஆர்க்கே!/அவனுக்கு அழிவில்லை!”

Comments are closed.