மேகமலையில் மூன்று நாட்கள்! (3)

ஜெ.பாஸ்கரன்




சுருளிப்பட்டியிலிருந்து திரும்பவும் 20கி பயணித்துச் சின்னமனூர் வழியே, மேகமலைக்குப் போகும் பாதையில் திரும்பினோம். சின்னமனூரிலிருந்து காடமலைக்குண்டு சாலை வழியே சுமார் 52 கிமீ தூரத்தில்  இருக்கிறது மேகமலை – சாலைகள் அருமையாக இருந்தன – சுற்றிலும் மலைகளும், காடுகளும், சிறிய நீர்வீழ்ச்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. 21 கிமீ கடந்து வந்தால்,  மலையடிவாரத்தில் ‘ஒரு செக் போஸ்ட்’ – மஃப்ளருடன், குறுகிய மீசை வைத்து சற்றே கூனியபடி நடந்து வந்தார் அங்கிருந்த ஒற்றை செக்யூரிடி. பார்த்து விட்டு, குறிப்பேட்டில் கையெழுத்து, விலாசம் வாங்கிக்கொண்டு, இடைக் கழியை உயர்த்த, நாங்கள் மலைச் சாலையில் பயணிக்கத் தொடங்கினோம்.

காதில் வளையங்களும், கைகளில் இரும்பு வளைகளும் அணிந்து, எங்கள் காரை வேடிக்கைப் பார்த்து நின்ற மனிதர்கள் அங்குள்ள ஆதிவாசிகளாக இருக்கலாம்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மலைச்சாலை செம்மண், பாறைகளால் போடப்பட்டிருந்ததாகவும், சில இடங்களில் மிகவும் குறுகலான வளைவுகள் ஆபத்து நிறைந்தவையாகவும் இருந்ததாக ராம் சொல்லிக்கொண்டு வந்தார்.

இப்போது மிகவும் சிறப்பான தார் சாலைகள், வளைவுகளில் இரும்புத் தடுப்புகள், கொண்டையூசி வளைவுகலில் பிடிப்பு அதிகமான கான்கிரீட் சாலைகள் என அகலமாக போடப்பட்டுள்ளன. ஒரு பக்கத்தில் பாறைகளும் மலைகளும், மறு பக்கத்தில் டீ எஸ்டேட்டுகளும், காட்டுப் பகுதிகளும் நிறைந்த பள்ளத்தாக்கும் எனப் பயணம் மிகவும் ரம்யமாக இருந்தது. ‘செந்தாழம்பூவில்’ யேசுதாஸ் இளையராஜாவின் இசையில் மனதிற்குள் பாடிக்கொண்டே வந்தார்! தூரத்தில், மலைகளின் உச்சிகள் அலைகளைப் போலத் தோன்றின – அதனால்தான் மேகமலையின் மற்றொரு பெயர் “High Wavy Mountains”!

மேலே ஏற ஏற மலைகளைத் தழுவிச்செல்லும் மேகங்கள், வித விதமான வடிவங்களில், தவழ்ந்து, விளையாடின. அங்கங்கே மேக மூட்டங்கள் தோன்றுவதும், மறைவதுமாக இருந்தன. சாலை வளைவுகளில், சிறிது அச்சமாகக் கூட இருந்தது! சாலையுடன் ஒரு பக்கத்தில் மிகக் கீழே, ஆறு ஒன்று நம்முடன் பயணித்தது. பளிங்கு போன்ற தண்ணீர் – அதன் மேல் புகை மூட்டம்போல மேகங்கள் – காலையாதலால், சிறிதே இருள் பிரிந்திருந்தது – போர்த்தித் தூங்கும் பெண் போலக் கிடந்தது அந்த ஆறு! வெப்பம் 15 டிகிரி வரை இருக்கும் என்ற கூகிள் சாமியின் கூற்றை நம்பி, கேசுவலாக அரைக்கை ஸ்லாக்குடன் வந்திருந்தேன் –  ஸ்வெட்டர், குரங்குத் தொப்பி, மஃப்ளர் எல்லாம் தேவையாக இருக்கும் என்று தோன்றியது – ஆரோக்கியமான குளிர், மனதுக்கு இதமாக இருந்தது!

அழகான சாலை வளைவின் ஓரத்தில் நின்றுகொண்டு, ஆற்றினையும் அதனைத் தாண்டி பல அடுக்குகளாய் நின்றுகொண்டிருந்த மேகம் சூழ் மலைகளையும், மூடுபனியின் குளிரில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களையும், நினைவுகளில் நிழலாகப் படம் பிடித்துக்கொண்டோம்! (மன்னிக்கவும், ஏதோ ஒரு ஃப்ளோல வந்துடுச்சு – ஆறு, மலை, மேகம், டூ வீலர் எல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டோம்!).
மெயின் ரோடிலிருந்து வலது புறம் பாலம் தாண்டிச் சென்றால் சுமாரான சாலைகள் – ஊருக்கே ஒரே கடை – இங்கு எல்லாம் கிடைக்கும்; இல்லையென்றால் இரண்டு மணி நேரத்திற்குள் சின்னமனூரிலிருந்து வரவழைக்கும் வசதிகள் உண்டு என்றார் ராம். எதிரே இறக்கத்தில் ஓரு மாரியம்மன் கோயில்! ஒரு கிமீ தாண்டி, வலது புறம் ‘Woodbriar Tea Estates -தனியாருக்குச் சொந்தமான இடம்; அனுமதி இல்லை’ என்ற போர்டைத் தாண்டி உள்ளே சென்றோம். 

ஏரியைப் பார்த்தவாறு இரண்டு பெரிய பங்களாக்கள் (க்ளவுட் மவுண்டன், மணலார்), மற்றது (சாண்ட் ரிவர்) கொஞ்சம் உயரத்தில், மலைகள், தேயிலைத் தோட்டங்களைப் பார்த்தவாறு இருந்தது. எல்லாம் தனித்தனி பங்களாக்கள்; சுற்றிலும் பூச்செடிகள், புல்வெளிகள் – குளிரில் கூடை நாற்காலிகளில் அமர்ந்தபடி, ஆவி பறக்கும் தேநீர் குடிக்க சுகமான சுழல்! நாங்கள் தங்கிய சாண்ட் ரிவரில் இரண்டு அறைகள், ஒரு ஹால், டைனிங், கிச்சன் – ரெடாக்ஸைட் தரை, தாழ்வான கூரை, சோஃபா, டீ பாய், டிவி என்று அந்தக் கால ஈஸ்ட்மென் கலர்ப் பட எஸ்டேட் பங்களாவைப் போல இருந்தது! 

ஆங்கிலோ இந்திய கட்டடங்கள்! ஆரம்பத்தில் டைமண்ட் என்னும் ஆங்கிலேயரின் டீ எஸ்டேட்டாக இருந்ததாம் – காடுகளுக்கு நடுவே தேயிலைத் தோட்டங்களை அமைத்து, காட்டு மிருகங்கள் நடந்து வந்து கீழேயிருக்கும் ஆறு / ஏரியில் நீர் குடிக்க வசதியாகப் பாதைகளை அமைத்தாராம்.  கரும்பச்சை அடர் காடுகளுக்குக் கீழே,  கட்டங்கட்டமாகப் பயிரிடப்பட்ட, இளம்பச்சைத் தேயிலைச் செடிகள் – காடுகளுக்கு மேலே மேகங்கள் தவழும் மலை உச்சிகள்!  எந்தத் திசையில் திரும்பினாலும் இதே இயற்கை ஓவியம்தான் கண்கள் குளிரக் குளிரக் காணக் கிடைக்கும்! 

மதியம் 12 மணியளவில் வந்து சேர்ந்தோம் – நல்ல சூடான வெந்நீரில் குளித்து, உடை மாற்றி வந்தால் சுடச் சுட டைனிங் டேபிளில் மதிய உணவு – சப்பாத்தி, குருமா, சாதம், சாம்பார், ரஸம், பொறியல், பொறித்த அப்பளம், சாலட், தயிர், டெசெர்ட் – ஆங், மறந்துவிட்டேனே, முதலிலேயே ஒரு சூப்! ஒரு பிடி பிடித்து, சிறிது பழைய இந்திப் பாடல்களின் ஒலியும்,ஒளியும் பார்த்துத் தூங்கி விட்டோம். 

மாலை சூடான டீ – ஃபில்டர் காபி இல்லை, இன்ஸ்டண்ட் காபி என்றதால் – கொஞ்சம் பிஸ்கட். சிவா, சிரித்த முகத்துடனும், இளந்தாடியுடனும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் இருபத்தி ஐந்து வயது இளைஞன் – கேட்டதைக் கொடுப்பவன்! டீ, சுடுநீர், சாலட், எக்ஸ்ட்ரா அப்பளம் – மூன்று நாட்களும் எங்களைக் கவனித்துக் கொண்ட ‘Care Taker’!  

மாலை கொஞ்ச நேரம் ஒரு சிறிய நடைப் பயிற்சி – லேசான தூறல், கண் முன்னே மேகம், எப்போதாவது கலங்கிய ஹெட்லைட் ஒளியுடன் கடந்து செல்லும் இரண்டு சக்கர வண்டி – நல்ல குளிர். எதிர் பங்களாவின் அவுட் ஹவுஸ் போன்ற இடத்தில் விளக்கின் ஒளியில், கண்ணாடி ஜன்னல் வழியே எங்கள் இரவுக்கான உணவு தயாராகி கொண்டிருந்தது! பக்கத்து பங்களா சுமார் 20 அடிகள் கீழே இருந்தது – இரவில் ஜன்னல்களின் ஒளி, கசிந்து வருவதைப் போல ஓர் அமானுஷ்ய உணர்வைத் தந்தது! தூரத்தில் சுற்றியிருந்த இருளின் அடர்த்தியில், நாங்கள் தங்கியிருந்த பங்களா மட்டும் அமைதியாக விளக்கு ஒளியினை கசியவிட்டுக்கொண்டிருந்தது! உண்மையிலேயே அந்த அடர் இருளின் தனிமையும், குளிரும்  ஓர் அமைதியான இசையாக உள்ளத்தை நிரப்பி, உடலெங்கும் பரவியது!

வீட்டிற்குள் வந்தால், வெஜ் பிரியாணி, சப்பாத்தி, இரண்டு சைட் டிஷ், ரைத்தா, தயிர் சாதம், டெசெர்ட் என ஒரு விருந்தே காத்திருந்தது! அன்பே வா டி.ஆர்.ராமச்சந்திரன் ஸ்டைலில், “அடேய், சிவா, சிவா” என்று கூவியபடி சாப்பிட்டு முடித்தோம்!  டி.வி யில் கொஞ்சம் காமெடி பார்த்து, அவரவர் இடத்தில் உறங்கி விட்டோம்!
கொண்டு போன புத்தகங்களை வாசிக்க மூடில்லை – எழுதுவதற்கு முடியவில்லை – குவிகம் கடைசி பக்கம் இன்னும் இரண்டு நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். இந்த பங்களாவிலோ நெட் இல்லை – ஈசானிய மூலையில் ஒரு சிறு சதுரத்தில் கொஞ்சம் கனெக்‌ஷன் கிடைக்கும் – அதில்தான் போனில் பேசுவது, வாட்ஸ் ஆப் அனுப்புவது எல்லாம் – இந்த சிறிய அசெளகர்யங்களைப் புறந்தள்ளியது, கண் முன்னே விரிந்து கிடந்த இயற்கையின் அளப்பரிய செளந்தர்யம்!
மறுநாள் காலை செல்ல வேண்டிய எஸ்டேட் டூர் பற்றி யோசிக்காமல் உறங்கினோம்….