*
யாழ்க்கோ லெனின்
” மீனா… மீனா… சீக்கிரமா எழுந்திருடி…. ஸ்கூல் பஸ் வர்ற நேரமாகுது…. சீக்கிரமா கிளம்புடி….”
“ம்ம்…..ம்ம்…”என்றபடி இழுத்துப் போர்த்தினாள் அந்த மார்கழிக் குளிரைத் தாளாமல்.
“உத வாங்கப் போறடி நீ…. சீக்கிரமா எழுந்து கிளம்புடி…. கொரோனா வந்தாலும் வந்துச்சு… புள்ளங்களுக்கு சோம்பேறித் தனம் கூடிப் போச்சு…. எழுந்திருடி….” என முறைத்தாள் அம்மா நீலவேணி.
” வேணி …. இப்ப எதுக்கு அவளத் திட்டற…? விடு… ஸ்கூல் பஸ் போகட்டும்…. நான் அவளக் கொண்டு போய் ஸ்கூட்டர்ல விட்டுட்டு போறேன் ஆஃபீஸுக்கு….”
“ம்ம்…. ஆகா…. என்னா கரிசனம் பொண்ணு மேல … நான் ஒரு நாள் கொண்டு வந்து விடுங்கன்னு சொன்னா, முடியாதுன்னு கத்துறது….க்கும் ” என முறுக்கியவளை பார்த்திட சிரிப்பு தான் வந்தது சாரதிக்கு.
சிறிது நேரத்தில், வேணியின் அதட்டலால் கிளம்பி இருந்தாள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மீனா.
சாரதி, “அம்மு…. இனிமே சீக்கிரமா கிளம்பிடணும் தங்கம் …. வீணா அம்மாவ டென்ஷன் பண்ணக் கூடாதுடா….” என்றபடி அவளை பள்ளியின் வாசலில் இறக்கி விட்டுட்டு நகர முற்பட்டவரிடம், “ஓகே ப்பா…. பை…” என உள்ளே நுழைந்தவளை சிநேகமாய் வரவேற்றார் வாட்ச்மேன்.
” என்ன அண்ணா…. நல்லா இருக்கீங்களா?”
“ம்ம்…. நல்லா இருக்கேன் பாப்பா….”
அன்று முழுவதும் பள்ளியில் அவளுடைய நெடுநாள் கழித்து பார்க்கும் தோழிகளுடன் கேலி, கிண்டல் என மகிழ்ச்சிப் பெருக்குடன் இருந்தாள்.
மாலை தன் நெருங்கிய தோழி வாணியுடன் வீடு திரும்பினாள்.
எப்போதும் கலகலப்புடன் இருக்கும் வாணி தற்போது ஏதோ பறிகொடுத்தது போல் இருந்தாள்.
“ஹேய் வாணி…. என்னடி ஆச்சு….? ஏன் ஒரு மாதிரியா இருக்க….?”
“…….” மெளனமாய் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவளை உசுப்ப, “ம்ம்… என்ன மீனா…?” என்றிட,
“வாணி …. கொஞ்சம் வண்டிய நிறுத்துடி….”
அவள் நிறுத்திவிட்டு, “என்ன மீனா… எதுக்கு நிறுத்த சொன்ன….?”
“ம்ம்… சும்மா தான்…. ஏன்டி இப்படி இருக்க….?ன்னு நான் இவ்வளவு நேரமா கத்துவது உன் காதுல விழலயா…?”
“ப்ச்ச்சு…. அதெல்லாம் ஒண்ணுமில்லடி…. கொஞ்சம் மனசு சரியில்ல…. அதான்….”
“அதான் கேட்கறேன்…. ஏன் மனசு சரியில்ல…? எப்பவும் எதையும் மறைக்காம என்ட சொல்லுவ…. இப்ப என்னத்தையோ மறைக்கிற….? அதான் ஏன்னு தெரியல…. சொல்லுடி… ப்ளீஸ்….”
“ஒண்ணுமில்ல விடுடி ….ரொம்ப நாள் கழிச்சு ஸ்கூல்க்கு வர்றேன்ல… அதானலைத் தான்டி…. வேற ஒண்ணுமில்ல…. ” என்றவள் மிதிவண்டியை வேகமாக மிதிக்கத் தொடங்கினாள்.
மீனாவை வீட்டில் விட்டு விட்டு கிளம்பி இருந்தாள்.
“எப்பவும் கலகலப்பா இருக்கற இவளுக்கு இன்னிக்கு என்னாச்சு….?” என்ற யோசனையிலேயே, உள்ளே நுழைந்த மீனாவை, “மீனா…. கைகால் கழுவிட்டு வாடி…. உனக்கு பிடிச்ச வெங்காய பஜ்ஜி செஞ்சி வச்சிருக்கேன்….” என்றிடத் துள்ளி குதித்து வந்தாள் மீனா.
” அம்மா …. சூப்பர்ம்மா…” என தன் செவ்விதழை அம்மாவின் கன்னத்தில் பதித்தாள் செல்லமாய்.
“ஹேய் மீனுக் குட்டி…. என்ன இன்னிக்கு சீக்கிரமா வந்துட்ட….?” என்றபடி உள்ளே நுழைந்தார் அப்பா சாரதி.
“ஆமாம்ப்பா…. வாணி கூட சைக்கிள்ல வந்துட்டேன்….”
“வாணி வந்தாளா….? ஏன்டி அவளயும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம்ல….” அம்மா கேட்க, “ஏதோ அவசரம்னு கிளம்பிட்டாம்மா…” என சமாளிக்கும் போது, மீனாவுக்கு வாணியின் அனிச்ச முகமே நினைவில் நிழலாடியது.
இரவு முழுக்க அவளின் நினைவிலேயே உழன்றவள் காலையில் பள்ளிக்குக் கிளம்பினாள் பள்ளிப் பேருந்தில்.
அன்று வாணி வகுப்புக்கு வராதது மீனாவுக்கு நெருடலாக இருந்தது.
மாலை, வாணியைக் காண முடிவு செய்து தோழியின் வீட்டிற்குக் கிளம்பினாள் மீனா.
“வாணி …. வாணி….”
மீண்டும், “வாணி …. வாணி….” என்றழைக்க பதிலேதும் இல்லை.
திரும்ப எத்தனித்தவளுக்கு தோட்டத்து மாட்டுத் தொழுவத்தில் ஏதோ பேச்சு சத்தம் கேட்க மெல்ல பூனை நடை நடந்து சென்றாள்.
அங்கே சென்றவளுக்கு அதிர்ச்சி, “ஐயோ….. நான் என்னப் பண்ணுவேன்….? என் வாழ்க்கையே போச்சே….” எனத் தலையிலடித்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தாள் வாணி.
அரவமில்லாமல் நெருங்கிய மீனா, அவள் தோளைத் தொட திடுக்கிட்டு நிமிர்ந்த வாணி, “ஹேய் மீனா… எ… எப்ப வந்த ….? எ…. எப்படி இருக்க….?” திணற,
“என்னடி ஆச்சு உனக்கு….? ஏன் இப்படி வேர்க்குது….?”
“அதெல்லாம் ஒ…. ஒண்ணுமில்லயே….” என்று தன் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்தவள் விழிகளில் வெள்ளம்.
“என்னடி….ஏன்டி அழற….?”
“ம்ம்… என் வாழ்க்கையே போச்சுடி…. இப்ப என்னடி பண்ணுவேன்….?” மீண்டும் தேம்பினாள்.
அவள் முகம் பார்த்தவள், “எதா இருந்தாலும் சொல்லுடி…. நான் இருக்கேன் உனக்கு…!” என்று ஆறுதலாய் அணைத்து தலையை வருடினாள் மினா. அப்போது அது தேவைப்பட்டது அவளுக்கும்.
மெல்ல நிமிர்ந்தவள் மீனாவின் விழிகளைப் பார்க்கத் தயங்கியபடி, “இந்தா…. இதக் கொஞ்சம் பாருடி….” என்று செல்பேசியை எடுத்து நீட்டினாள் வாணி.
வாங்கிப் பார்த்த மீனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “யாருடி இவன்…. இவனெல்லாம் கண்ட இடத்துலயே கண்டந்துண்டமா வெட்டணும்டி….!” என அருகிருந்த சுவரில் ஓங்கிக் குத்தினாள் தன் வளைக் கரத்தை.
“சரி…. வாடி…. நாம போலீஸ்ட்ட போகலாம்….”
“இல்லடி…. இதோட இன்னொரு காப்பி அவன் கிட்ட இருக்கு…. இத வச்சே என்னை பிளாக் மெயில் பண்றான்…. அதான்டி ரொம்ப பயமா இருக்கு ….!” குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
“ம்ம்…” என யோசித்த மீனா, “அது சரி…. உன் அம்மா அப்பாட்ட இதப் பத்தி சொன்னியா….?!”
“ஐயையோ…. வேற வெனையே வேணாம்டி…. இது தெரிஞ்சா எங்கப்பா கொன்னே போட்டுடுவாரு என்னை…!” என மிரண்டாள் வாணி.
” இது தான்டி நாம பண்ற தப்பே … பெத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு பயந்து பயந்தே மறைக்கப் போய் விபரீதத்துல மாட்டிக்கறோம்….! அவங்க தான்டி இந்த உலகத்துலயே நமக்கு நல்லது மட்டும் யோசிக்கறவங்க…! எதுவா இருந்தாலும் நமக்குத் துணை அவங்க மட்டுந்தான்…. சரியா?”
“எல்லாரும் அப்படி இல்லடி….! கண்டிப்புன்ற பேர்ல நம்மள நம்பாம எப்படி திட்டுவாங்க தெரியுமாடி…?” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தார் வாணியின் தந்தை முத்துக்குமார்.
“வாம்மா மீனா… எப்படி இருக்க….? அப்பா அம்மா எப்படி இருக்காங்க? ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்….?” என்றவரிடம் சிறு புன்னகையுடன், “எல்லாரும் நலம் அங்கிள்….!” என்றவள், அவர் அருகே சென்று, “அங்கிள்….அங்கிள்….” எனத் தயங்கியபடியே, ” ஆமாம்…. ஆண்டி இன்னும் வரலயா…?” எனக் கேட்ட நொடி உள்ளே நுழைந்தாள் வாணியின் அம்மா அகிலா, “என்ன மீனா…. இப்ப தான் இங்க வர்ற வழி தெரிஞ்சிதா…?” என்றபடி.
“ம்ம்… அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆண்டி…. கொரோனா காலம்ங்கறதாலத்தான்….!” என இழுக்க,
“அதனாலத் தான்ம்மா வாணி தனியா இருக்காளேன்னுட்டு என் தம்பிய துணைக்கு விட்டுட்டு வேலைக்கு போயிட்டு வர்றோம் தினமும்…! இப்பதான் ஒரு வழியா பள்ளிக்கூடத்தத் திறந்திருக்காங்க….!” என்ற அகிலாவை, கோபமாகப் பார்த்த மீனா, “அப்படியா ஆண்டி….?! அதனாலத் தான் உங்க கவனக் குறைவால வேலியே பயிர மேஞ்சிட்டுருக்கோ….?!” எனக் கேட்க திடுக்கிட்டனர் இருவரும்.
“என்னம்மா மீனா ஏதேதோ சொல்ற….?” கேட்டார் முத்துக் குமார்.
“ம்ம்… இந்தாங்க இதப் பாருங்க….! நல்லா புரியும்….” என நீட்டினாள் வாணியின் ஆன்லைன் வகுப்புக்காக பயன்படும் அந்த செல்பேசியை.
வாங்கிப் பார்த்த இருவருக்கும் தலையே சுற்றியது.
அதில் அகிலாவின் தம்பி, வாணியை தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டு அவளை நோகடித்துக் கொண்டிருந்தான். அவளால் தாள முடியாமல் நெளிந்துக் கொண்டிருந்தாள். இடையே “அக்கா மாமாட்ட எதுனா சொன்னன்னா உன்னைக் கொன்னே போட்டுடுவாங்க…. எனக்கு ஒண்ணுமில்ல, உனக்கு தான் பிரச்சினை…. என்னிக்கா இருந்தாலும் நான் தான் உன்னைக் கட்டிக்கிற உரிமை இருக்கு….!” என ஏதேதோ சொல்லி அவள் மனதைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தான்.
இந்தக் காட்சிகளைக் கண்ட அகிலா, “ஏன்டி என்ட்ட இத முதல்லயே சொல்லல….?” என கை ஓங்கியபடி அதட்ட,
“இதான் ஆன்ட்டி…. இதே தான்….. பெத்தவங்க பண்ற தப்பு …. எதுக்கெடுத்தாலும் மிரட்டி அதட்டினா எப்படி பிள்ளைங்க தங்களோட பிரச்சினைகள தைரியமா சொல்லுவாங்க….? கொஞ்சம் அனுசரனையா கரிசனத்தோட ஒரு நட்போட கேட்டுப் பாருங்களேன்….! பிள்ளைங்க எல்லா விசயத்தையும் தானாகவே மறைக்காம உங்கக்கிட்ட வந்து சொல்லுவாங்க நம்பிக்கைக் குரிய தோழனா தோழியா…!” என்றிட, தன் தவறை உணர்ந்த அகிலா தன் மகளை இறுக அணைத்துக் கொண்டாள், “சாரி…. சாரிடா செல்லம்…. உன் மனசப் புரிஞ்சிக்காம நானும் ஒரு சராசரி அம்மாவா நடந்துக்கிட்டேன்….சாரி…!” எனக் கண்கலங்கினாள். முத்துக்குமார் விழிகளில் வெள்ளம் கரைபுரண்டோட பேச்சில்லாமல் நின்றிருந்தார்.
” மீனா சொல்வதும் உண்மை தான்… பிள்ளைகளிடம் கண்டிப்பு தேவை தான், ஆனால் அது அவர்கள் தங்கள் பிரச்சினைகளை பெற்றவர்களிடம் சொல்ல அஞ்சுவது வரை வேண்டாமே…. இனிமேலாவது நல்லத் தோழனாக இருக்க வேண்டும் மகளுக்கு….!” என அவர் மனம் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நேரம், “அக்கா…. அக்கா…. காபி….” என்றபடி உள்ளே நுழைந்த தம்பியை ஒரே அரை அறைந்தாள் அகிலா.
பொறி கலங்கி நின்றிருந்தவனை” நீலாம் ஒரு மனுசனாடா…. உன்னைப் பெத்தப் புள்ளயாட்டம் வளத்தேனேடா… இவ்வளவுக் கீழ்த்தரமா நடந்துக் கிட்டியேடா…. வெளியப் போடா நாயே… இன்னும் ஒரு நிமிசம் என் முன்னால நின்னின்னா அப்புறம் உன்னைக் குத்திட்டு நான் ஜெயிலுக்கு போயிடுவேன்….” என்றவளின் ரெளத்திர விழிகள் நடந்த யாவற்றையும் உள்ளங்கை நெல்லிக் கனியாய் விளக்கியது அவனுக்கு.
பேசாமல் அதிர்ச்சியில் நின்றிருந்த முத்துக்குமாரிடம், ” மாமா…. அது…. அது வந்து…. ஏதோ தெரியாம…. இ …. இந்த ஒரு வாட்டி …. மன்னிச்சிடுங்க….ப்ளீஸ் …. இனி….மே….” என்ற விநாடி வாணியின் வளைக்கரங்கள் அவன் முரட்டுக் கன்னத்தைப் பதம் பார்த்தது குரூரமாய்.
“வெளியப் போடா பொறுக்கி நாயே …. இதுவரை எவ்வளவு கொடுமைகள நான் அனுபவிச்சேன் உன்னால…. மிரட்டி மிரட்டியே என் மனசை எவ்வளவு காயப் படுத்தின….? என் அப்பா அம்மா எனக்கு என்னிக்கும் துணையா இருக்காங்கடா….இப்பதான் ஒருத்தர ஒருத்தர நல்லா புரிஞ்சிக்கிட்டோம்…. நன்றி மீனா….!” என தன் தோழியின் நெஞ்சில் சாய்ந்து வலி தீர அழுதாள் வாணி.
அவன், “எல்லாத்துக்கும் நீ தான் காரணமா…? இருடி உன்னை…” என்று மீனாவை முறைத்தபடி வெளியேறியவனை அன்று இரவே சட்டம் தன் இரும்புப் பிடியில் சுருட்டியது.
