உதயசங்கர்
அற்புத நீரூற்றுக்கு அற்புத நீரூற்று என்றே பெயர். அது குருமலையின் மீது அடர்ந்த வேப்பமரத்தின் வேரடியிலிருந்து ஊறி வந்து கொண்டிருந்தது. மழைக்காலத்தில் ஊற்றில் தண்ணீர் பெருகி ஓடையாய் ஓடி கீழே அம்புலிக்குளத்தில் நிறைந்து விடும். கோடையாக இருந்தாலும் ஊற்றில் நீர் சுரந்து கொண்டிருக்கும். தாயின் முலைப்பால் சுரப்பாய் துளித்துளியாகவேனும் சுரந்து கொண்டிருக்கும். அந்த மலையில் இருக்கும் சினனஞ்சிறு விலங்குகளுக்கும் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கும் உயிர்நீர் கொடுக்கும் அமுதசுரபி. வேறு யாருக்கும் அற்புத ஊற்று இருக்குமிடம் தெரியாது. யாராலும் கண்டுபிடிக்கவும் முடியாது.
கீழே அம்புலிக்குளத்தருகே இருக்கும் அம்புலி கோவிலுக்கு மக்கள் மாதம் ஒருமுறை பௌர்ணமியன்று மட்டும் வந்து போவார்கள். அன்று உணவு சமைத்துக் கொண்டு வருவார்கள். சிலர் அங்கேயே அடுப்பு மூட்டி சமைப்பார்கள். அம்புலிக்குளத்தில் ஆசை தீரக்குளிப்பார்கள். அம்புலிக்கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வந்து பேராலுக்குக் கீழே படுத்து ஒரு தூக்கம் போடுவார்கள். குழந்தைகள் பேராலிலிருந்து கீழே இறங்கி வந்து கொஞ்சிக்கொண்டிருக்கும் விழுதுகளில் ஊஞ்சலாடுவார்கள். பெருங்கிழவியைப் போல முதிர்ந்து தலைவிரித்துப் போட்டிருக்கும் பேராலின் விழுதுகள் குழந்தைகளின் ஸ்பரிசத்தால் மென்மையாக மாறிவிடும்.
கோடானுகோடி வருடமாக இப்படியே தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் ஆட்டின் குளம்பில் ஏறிவிட்ட காக்காமுள் புண்ணாக்கி விட்டது. ஆடு அற்புத நீரூற்றில் நீர் அருந்தும் போது கால்களில் பட்ட நீரில் புண்ணிருந்த இடம் மாயமாகி விட்டது. அதைப் பார்த்த இடைச்சிறுவன் விஷேசமாக ஒன்றும் நினைக்கவில்லை. அப்போது அவனுடைய எண்ணமெல்லாம் மடியில் கட்டியிருந்த கொடிநாவல் பழங்களைத் தின்பதிலேயே இருந்தது. ஆனால் இன்னொரு நாள் உடலெங்கும் காயத்துடன் வந்த ஒரு பைத்தியக்காரன் மீது பட்ட ஊற்று நீர் அவன் காயங்களை காணாமல் போகச்செய்தது மட்டுமல்லாமல் அவனுக்கு போதமும் அளித்தது. மலைக்கு மேலே ஏறும்போது அழுக்கும் பீடையும் பிடித்தவனாக இருந்தவன் இறங்கும்போது யௌவன இளைஞனாக மாறி வந்தான்.
மக்கள் அவனைப் பார்த்தே அற்புதநீரூற்றைக் கண்டுபிடித்தனர். உடனே கூட்டம் கூட்டமாய் மக்கள் படையெடுத்தனர். அற்புத நீரூற்று நீரை போட்டி போட்டுக் கொண்டு குடித்தனர். அந்த நீர் ஓடிவரும் பாதையில் உருண்டு புரண்டனர். சிறுபுண் உள்ளவர் முதல் பெரும் ரோகம் உள்ளவர்வரை நாட்டில் உள்ள அனைவரும் அற்புதநீரூற்று நீரை அருந்த நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மனிதக்காலடி படாமலிருந்த அற்புத நீரூற்றில் மனிதர்களின் காலடிகள் எப்போதும் உழப்பிக் கொண்டேயிருந்தன. அங்கே அற்புத நீரூற்றம்மன் என்ற கோவில் உருவானது. கோவிலையும் நீரூற்றுத்தண்ணீரையும் நிர்வாகம் செய்ய மனிதர்கள் சேர்ந்தார்கள். நீரைப் புட்டிகளிலும் குவளைகளிலும் பணத்துக்கு விற்கத் தொடங்கினார்கள். என்ன விலை கொடுத்தேஎனும் வாங்கிச் செல்ல மக்கள் தயாராக இருந்ததால் வியாபாரம் அமோகமாக நடந்தது. கோடையில் சுனைநீர் வற்றிச் சொட்டு சொட்டாய் ஊறியபோது அந்த இடத்தில் போர் போடுவதென்று முடிவானது. போர் போடுவதற்கு இடைஞ்சலாக இருக்கும் வேப்பமரத்தை வெட்டி வீழ்த்தினார்கள்.
வேப்பமரத்தை வெட்டிய அன்று அற்புதநீரூற்று தன் சுரப்பை நிறுத்தி விட்டது. போர் போட்ட போது வெறும் மண்ணும் கல்லும் பாறைகளும் தான் வெளியே வந்தன. ஒரு சொட்டு ஈரத்தைப் பார்க்கமுடியவில்லை.
ஆனால் மனிதர்கள் எங்கோயிருந்து கிணற்றுநீரை ரகசியமாக கொண்டுவந்து புட்டிகளில் அடைத்து அற்புதநீரூற்றுத் தண்ணீரென்று சொல்லி இன்னமும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அருமையான கதை…. எத்தனை சேதிகள் சொல்கிறது அற்புத நீரூற்று!
இலக்கிய நாளிதழ் வாசக பரப்பு இன்னும் விரிவடையும்….
மிக்க நன்றி தோழர் உதய சங்கர்
வாழ்த்தும் அன்பும், அழகிய சிங்கர்!
எஸ் வி வி
அய் இது நல்லா இருக்கே என ஆச்சரியப்படும் ஒரு கதை. மனிதன் சல்லிப்பய என்ற சொல்லாடல் தான் எத்தனை உண்மையானது