எஸ் வி வேணுகோபாலன்
‘வெறகுக்காரர் வந்தா குரல் கொடு’
என்பாள் பத்தாணிப் பாட்டி
காஞ்சிபுர வாசத்தில்
சவுக்குக் கட்டையின் வாசம் அதிகம்
ஒரு மில் அதிபர் போல் தான்
நடந்துவருவார் விறகுக்காரர்
பளிச்சென்ற ஜிப்பாவும் வேட்டியும்
கக்கத்தில் கறுப்புநிற தோல் பையும்
எந்நேரமும் சிந்தனைகள்
வரிகளாய்ப் படர்ந்த பரந்த நெற்றி
புன்னகைக்கவிடாத
பெருநடையாய்
வண்டியோடும்
வண்டிக்கு முன்பாகவும்
பிந்தியுமாக ஒரு நடை
வாசல் திண்ணைபோல்
படிப்புக்கு இடம் உண்டா என்ன
இன்னும் நடத்தாத செய்யுள்களும்
சொல்லித் தராத கணக்குகளும்
போட்டு முடித்தாலும்
கவிதை எழுத நேரம் மிஞ்சி இருக்கும்
விரிந்த திண்ணை
கட்டைவண்டியின் சத்தம் கேட்டதுமே
குரல் போகும் அடுக்களைக்கு
‘பாட்டி…..விறகு….’
விறகுக்காரருக்குச்
சட்டென்று நிற்கத் தெரிந்தது போலவே
மாடும் நின்றுவிடும்
அடுக்கி வைத்த
சவுக்குக் கட்டைகளுக்குமேல்
வாழ்க்கை ஒப்பந்தம்
போட்டுக் கட்டப்பட்ட
நீண்ட மூங்கில் கழிகள் மூன்றும்
விருட்டென்று எடுப்பார் விறகுக்காரர்
பள்ளிக்கூட டிரில் மாஸ்டர்
குரல் கேட்ட மாத்திரத்தில்
அகன்று நிற்கப் பழகிய கால்களைப் போலவே
நிற்கும் மூன்று கழிகளும்
அகலக்கால் விரித்தபடி.
உயரே கயிற்றுக் கொக்கியில்
தொங்கவிடுவார் வில் தராசு
எடைபோட்டுத் தள்ளும்போது
இரைந்து சொல்வாள் பாட்டி ‘…
ஈரமா இருக்கு வெறகு ‘
‘காஞ்ச வெறகு தாம்மா கொண்டாறது’
என்று முணுமுணுத்து
பாட்டி ஆசைக்கு
மூன்று கட்டைகளை மாற்றி இடுவார் தராசில்
விறகைப் பார்க்கும்
பாட்டியின் கண்கள்
மேலே
எடையையும் நோக்கும்
காசு கொடுக்குமுன்
பார வண்டியை இழுக்கும் ஒற்றை மாடு
விறகுக்காரரையும் சேர்த்து
நடத்திப் போக
ஓரமாய் இறக்கிய கட்டைகளைப் பிளக்க
வருவார்
ஒற்றைக் கை ஆள்காரர்
வாசல்கள் பார்த்தபடி
விறகு இறக்கி வைத்த வீடுகள் தோறும்
ஒவ்வொன்றாய் வேலை முடித்தபடி
எங்கோ இழந்துவிட்ட
இடக் கரத்தின் மிச்சநுனி
இறுக்கிப் பிடித்துக் கொள்ளும் தீப்பெட்டியை
உரசிப் பற்ற வைத்துக் கொள்வார் பீடியை
பிறகென்ன
ஒரு கட்டையைக் கீழே குறுக்காய்ப் போட்டு
ஒற்றைக் கையால்
ஒவ்வொரு கட்டையாய் மேலே சார்த்தி
காலில் பிடிமானம் கொடுத்து நிறுத்தி
ஓங்கிப் போடுவார் கோடரியை
ஒரே வெட்டில்
துண்டு இரண்டாய்
நாலணாக் காசு
பாட்டி வந்து கொடுக்கையில்
வணக்கம் சொல்லக்
கோடரிக் கொம்போடு
கூம்பும் வலது கரத்தில்
வந்து மோதிக்கொள்ளும்
இல்லாதுபோன இடக்கையின்
மேற்புற முடிச்சு
பத்தாணிப் பாட்டியின் கண்ணீர்
நனைக்கும் ஒவ்வொரு முறையும்
காய்ந்த விறகுகளை.

அருமையான பதிவு
சிறப்பான நினைவு
இது கவிதையில் லை ஒரு கதையின் ஆணி வேர் அருமை,!
இது கவிதையில் லை ஒரு கயதையின் ஆணி வேர் அருமை,!
இன்னும் இது போன்ற கவி(க) தைகள் வேண்டும்
மிகவும் அருமை
ஆஹா காலையில் பத்தாணி பாட்டியை நினைவு படுத்தியதற்கு நன்றி எப்படி தெரிவிப்பது? அந்த விறகு விற்பவர் பெயர் சக்கரவர்த்தி
காட்சிகளை கவிதை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது
அற்புதம்
ஓடோடிப் போன பல பத்தாண்டு காலத்து நல் நினைவு மொழி வளத்தில்.கவிதையாக..
காலக்கண்ணாடியாய்… நன்று
ஓடோடிப் போன பல பத்தாண்டு காலத்து நல் நினைவு மொழி வளத்தில்.கவிதையாக..
காலக்கண்ணாடியாய்… நன்று
அருமையான கரு
உவமைகள் என்றால் சுரதா போல் இருக்க வேண்டுமா என்ன?
‘டிரில் மாஸ்டர் ஆணை கேட்ட உடன் விரியும் கால்கள்’
‘வாழ்க்கை ஒப்பந்தம் போட்டுக் கட்டப்பட்ட’
வாழ்வியலோடு இணைந்த அழகியல் .
விறகு மட்டுமல்ல, மண், மனது எல்லாமும் ஈரமாக இருந்த காலம். அதை நினைவு படுத்திய அருமையான கவிதை. அது தூண்டிய உணர்வில் துளிர்த்த கண்ணீர்த் துளிகள் நம் இதயத்தையும் ஈரமாக்கட்டும்.
கவிதை அல்ல உன்னதமான சிறுகதை! வாழ்த்துகள்!
சிறப்பாக உள்ளது. கவிதை நம் பழைய காலத்தில் வாழ்ந்த மக்கள் நினைவோட்டம்
ஈரோடு விறகு என ஆரம்பித்து கண்ணில் ஈரத்தை வரவழைத்து விட்டார் கவிஞர். நாம் எல்லாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வர்கள் என நினைவூட்டியமைக்கு நன்றி, தோழர்
கவிதை இல்லை. சிறுகதை மாதிரி மிக சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்