ப.மதியழகன்/ஒரு நாள்

மேகங்கள் எங்கோ
போய்க் கொண்டு இருக்கின்றன
நெருப்பைக் கக்கியபடி
தீப்பற்றியெரிகிறது
பொழுதுகள்
அணைக்கும் சக்தி
நீருக்கில்லை
தேவனை நோக்கி மன்றாடுகிறது
பற்றி எரியும் மரங்கள்
எங்கிருந்து பரவியதென
ஒரு கூட்டம்
ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது
வீடு பற்றியெரிகிறது
நகரம் பற்றியெரிகிறது
தேகம் பற்றியெரிகிறது
இனி செய்வதற்கு
ஒன்றுமில்லை சாவதைத்தவிர
தணியாத தாகத்தோடு
தீயின் நாவுகள்
நஞ்சை உமிழுகின்றன
விட்டில் பூச்சி மனிதர்கள்
தேகம் பற்றியெரிய
தீயைப் புசித்துக் கொண்டிருந்தனர்
வானிலிருந்து ஒருதுளி
தீஜூவாலையின் மீது விழுந்தது
எங்கும் புகைமண்டலம்
அந்தத்துளி மண்புழுவைப்போல்
பூமியைக் குடைந்துகொண்டு
அடியாழத்திற்குச் சென்றது
பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்ள
உலகில் எவருமில்லை
பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்
தீயின் கொடி பறந்துகொண்டிருந்தது
மரணஓலங்கள் அடங்கியபிறகு
ரூபமற்ற ஏதோவொன்று
பேயாய் அலைந்து கொண்டிருந்தது
பூமியில்!