
என்னை இதற்கு மேலும்
வேதனைக் கடலில் நீந்தச் செய்யாதீர்கள்
எல்லாவற்றையும் என்னிடமிருந்து
பறித்துக் கொண்டுவிட்டார்கள்
என்னைப் புண்படுத்தியவர்களெல்லாம்
நான் கடவுளென்பதை அறியாதவர்கள்
அவர்களது வேஷங்களை நானறிவேன்
அவர்கள் மயக்கத்திலிருக்கிறார்கள்
நான் விழித்துக் கொண்டுவிட்டேன்
சட்டையுரிக்கும் போது
தெரிந்து கொள்ளட்டும்
நான் புழுவல்ல பாம்பு என்று
பிரார்த்தனையும் திருவிழாவும் தான்
பெரிதென அவர்கள் நினைத்திருக்கட்டும்
எந்தப் புனிதநூலும்
என்னுடையவை அல்ல
எந்த அமைப்புகளுக்கும்
நான் அகப்படாதவன்
மனிதமயமாகிவிட்ட பூமியிலிருந்து
நான் என்னைக்
காப்பாற்றிக் கொண்டேன்
மரணித்தவனின் கண்களில்
நீங்கள் என்னைக் காணலாம்
என்னை பூமியில் தேடாதீர்கள்
நான் நம்பிக்கையற்றவனின்
நட்சத்திரமாய் வானில்
நிலைகொண்டிருப்பவன்.
