பி. ஆர்.கிரிஜா/செய்தித்தாள்

“எப்போ பார்த்தாலும் செய்தித்தாள் படிப்பதே வேலயா போச்சு இந்த ஆளுக்கு ” என்று சத்தமாக சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் புயலாக நுழைந்தாள் சீதா. எதையும் சட்டை செய்யாமல் மும்முரமாக செய்தித் தாளுக்குள் புதைத்த முகத்தை தூக்கவே இல்லை ரமேஷ். எதற்கு வம்பு என்று பேசாமல் இருக்க இது ஒரு நல்ல சாக்கு என்று நினைத்துக் கொண்டான்.
வாசலில் அழைப்பு மணி. மீண்டும் கத்தினாள் சீதா, ” அந்த பேப்பர தூக்கி விட்டெரிஞ்சுட்டு யார் வந்திருக்காங்கன்னு போய்ப் பாருங்க” . வாயைத் திறந்தால் வம்பு என்று மெதுவாக போய்ப் பார்த்தால் அவன் மாமா மதுரையிலிருந்து.
அய்யய்யோ……பூகம்பம் புறப்பட்டு நேரில் வந்து. விட்டதே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே, ” சீதா, யார் வந்திருக்காங்க பார், உன் அப்பா என்று குரலில் அன்பைக் குழைத்து சொன்னான். ” அப்பா என்று வாயெல்லாம் பல்லாக சீதா அப்பாவிடமிருந்து பையை வாங்கி, “வாங்கப்பா… இப்பதான் வழி தெரிந்ததா… அம்மா நல்லா
இருக்காங்களா?.” ஏது இவ்வளவு தூரம்?அன்போடு விசாரித்தாள்.
“அம்மா சௌக்கியம் தான்..இங்க என் நண்பன் பெண் கல்யாணத்துக்கு வந்தேன் மா ” என்றார்.
இதுதான் சாக்கு என்று மெதுவாக நழுவி விட்ட இடத்திலிருந்து
பேப்பரைத் தொடரப் பார்த்தான் ரமேஷ்.
மீண்டும் வெடித்தாள் சீதா…. “அப்பாவோடு பேசாம என்ன பேப்பர் வேண்டிக் கிடக்கு? “
“அய்யோ … மாப்பிள்ள உங்க பாடு திண்டாட்டந்தான்… நான் படற பாட்டத்தான் நீங்களும் படறீங்க” சிரித்துக் கொண்டே சொன்ன போது ரமேஷுக்கு வயறு எரிந்தது.
சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தான் கறிகாய் வாங்கும் சாக்கில்.
அப்போது தெரு முனையில் உள்ள கடையில் ஒரு போஸ்டர்
தொங்கியிருந்ததைப் பார்த்தான். கிட்ட போய்ப் பார்த்தால், அதில் அன்றைய செய்தித் தாளில் முந்தைய நாள் விடுகதைக்கு விடை அளித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு எனக் கொட்டை எழுத்தில் எழுதி இருந்தது. ஆர்வம் மிகுதியால் அதை மேலும் படித்தான். அவனால் நம்ப முடியவில்லை. முதல் பரிசு ஆயிரம் ரூபாய் பெறுபவர் ரமேஷ், மடிப்பாக்கம் என்று எழுதி இருந்தது. எதையும் வாங்காமல் வீட்டிற்கு ஓடி வந்தான். ” என்ன ஒன்னும் வாங்காம வெறுங்கையோடு வந்திருக்கீங்க? மீண்டும் சீதாவின் அர்ச்சனை.
ஒன்றும் பேசாமல் அவள் கையில் பேப்பரைத் திணித்தான்.
” பாரு…. நல்லாப் பாரு… சுளையா ஆயிரம் ரூபாய் பரிசு எனக்கு , எல்லாம் அந்த செய்தித்தாள் படிப்பதால்தான் என்று சத்தமாகச் சொன்னான்.
சீதா ஆவலுடன் அதை முழுவதும் படித்து விட்டு ரமேஷை ஆசையுடன் பார்த்தாள். இருவரும் கல கலவென சிரித்தனர். குளித்து விட்டு வெளியே வந்த அப்பா இந்த மாற்றத்திற்கு காரணம் புரியாமல் அவர்களோடு சேர்ந்து சிரித்தார்.


05/06/2024